புதிய இன்புளுவென்ஸா ஏ (எச் 1 என் 1) நோய் நாடெங்கிலும் பரவியுள்ளதால் பொது மக்கள் தங்கள் கரங்களை அடிக்கடி சவர்க்காரமிட்டுக் கழுவிக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இதேநேரம் மருத்துவர்கள் ஒவ்வொரு நோயாளியையும் பார்வையிட்டதும் தங்கள் கரங்களை சவர்க்காரமிட்டுக் கழுவிக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்கு துறை அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
அதேவேளை தும்மும் போதும், இருமும் போதும் ஒவ்வொருவரும் சுத்தமான துணித் துண்டைப் பயன்படுத்து மாறும் நோய் பரவுகை தடுப்பு பிரிவு மக்களிடம் கேட்டுள்ளது.
இது தொடர்பாக நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு தொற்று நோயியல் மருத்துவ நிபுணர் நவரட்ணசிங்கம் ஜனகன் கூறுகையில் :- புதிய இன்புளுவென்ஸா ஏ (எச் 1 என் 1) வைரஸ் நோய் நாட்டின் பல பிரதேசங்களில் பரவியுள்ளது.
இது இரண்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், நீரிழிவு, தலசீமியா, சுவாசத் தொகுதி நோய்கள், புற்று நோய், இருதய நோய்கள் போன்ற நோய்களுக்கு உள்ளாகி இருப்பவர்கள் எளிதில் இந்நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.
அதனால் இவ்வாறானவர்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இது காற்றின் மூலம் பரவும் ஒரு தொற்று நோய் என்றாலும் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படுகின்ற எச்சில் சிதறல்கள் மூலமே பெரிதும் பரவுகின்றது.
இவ்வாறு வெளிப்படும் வைரஸ் சுற்றாடலிலுள்ள பொருட்களில் படிந்திருக்கும். அவற்றை அறியாமலேயே தொடுபவர்கள் கண்கள், வாய், மூக்கு என்பவற்றை தொடும் போது இவ்வைரஸ் தொற்றிக்கொள்ளுகின்றது. இதனைத் தவிர்க்கும் பொருட்டே அடிக்கடி கைகழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது. அதேநேரம் சளி, இருமல் நோய்களுக்கு உள்ளாகி இருப்பவர்கள் மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இதேவேளை ஆஸ்பத்திரி ஊழியர்கள் சகலரும் முகமூடி அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பு மருந்து
இந்நோய்க்குரிய தடுப்பு மருந்து எதிர்வரும் ஜனவரி மாத முற்பகுதியிலேயே இலங்கைக்குள் கொண்டு வரப்படவிருக்கின்றது. உலக சுகாதார ஸ்தாபனம் சுமார் நான்கு இலட்சம் தடுப்பு மருந்துகளை இலவசமாக வழங்கவுள்ளது. இத்தடுப்பு மருந்தை இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கும், நோய் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்திருப்பவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.