இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டிற்கு இலங்கைக்கான ஐந்து நாடுகளின் தூதுவர்கள் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகள் குறித்து கண்டறிந்திருக்கின்றார்கள். தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, தென்கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு புதன்கிழமை விஜயம் செய்திருக்கின்றார்கள்.
இந்தியத் தூதுவர் அலோக் கே காந்த் தவிர ஏனையோர் யாழ் அரசாங்க அதிபரைச் சந்தித்து யாழ் நிலைமைகள் குறித்து கேட்டறிந்ததுடன், தென்மாராட்சியில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான ராமாவில் நலன்புரி நிலையத்தையும் பார்வையிட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம் கலந்துரையாடியுள்ளார்கள்.
இந்தியத் தூதுவர் யாழ் மாநகரசபையில் யாழ் மேயர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், அங்கு நடைபெற்ற கூட்டத்திலும் உரையாற்றியிருக்கின்றார். இந்தியா இலங்கையின் வடபகுதியைக் கட்டியெழுப்புவதற்கும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் தயாராக இருப்பதாகவும், இதற்காகவே இந்திய வரவுசெலவுத்திட்டத்தில் 500 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அலோக் கே காந்த் தெரிவித்துள்ளார்.