இரு வார காலத்துக்குள் 58 ஆயிரம் பேர் முகாம்களை விட்டு வெளியேற்றப்படுவர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக தமிழக முதல்வர் மு.கருணாநிதி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளமை பற்றி தனக்கு எதுவும் கூறமுடியாதென அமைச்சசவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது.
தமிழக எம்.பிக்கள் குழுவினர் முதல்முறையாக இலங்கை வந்துள்ளனர். வடக்கிலுள்ள அகதி முகாம்களைப் பார்வையிடவும் அம்மக்களோடு கதைக்கவும் நாம் அக்குழுவினருக்கு பூரண சுதந்திரம் வழங்கினோம்.
சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு ஆரோக்கியமான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதென்பதை நாம் அக்குழுவினருக்கு எடுத்துரைத்தோம்.
எனினும் இக்குழுவினரின் வருகை சிலருக்கு பெரும் மனவேதனையை அளித்துள்ளதென்பதை நாம் அறிகிறோம். இதனால்தான் அவர்கள் இக்குழுக்களின் வருகையை கொச்சைப்படுத்தும் வகையில் பொய்த்தகவல்களை வெளியிட்டுவருகின்றர் என்றும் அமைச்சர் கூறினார்.