அடுத்து வருவது ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்பதை நவம்பர் 15ல் நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்குமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றம் கலைக்கப்படுமென எழும் பிரசாரங்கள் வெறும் புரளியெனத் தெரிவித்த அமைச்சர்; ஏப்ரலுக்குள் இரண்டு தேர்தல்கள் நடத்தப்படுமெனவும் தெரிவித்தார்.
அதேவேளை புதிய அரசாங்கத்துக்கு வரவு செலவுத் திட்டத்துக்கான வாய்ப்பினை வழங்கும் வகையிலேயே அரசாங்கம் இவ்வருடத்தில் வரவு செலவு திட்டத்தினைத் தவிர்த்து இடைக்கால கணக்கறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது குறித்து விளக்கமளித்த அமைச்சர்; இடைக்கால கணக்கறிக்கை என்பது புதியதொன்றல்ல எனவும் வரவு செவுத் திட்டம் தாமதமாகும் பட்சத்தில் இவ்வாறான இடைக்கால கணக்கறிக்கை முன்வைப்பது வழக்கம் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது;
அரசாங்கத்தின் பொருளாதார நிலை உட்பட சகலதும் சிறப்பாகவுள்ளதுடன் குழப்பகரமான சூழல் எதுவுமில்லாதபோது அரசாங்கம் வரவு செலவு திட்டத்தை ஏன் சமர்ப்பிக்கவில்லை?
என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார். அரசு பலவீனமடைந்துள்ளதாகவும் பல பிரசாரங்கள் எழுகின்றன. எதிர்வரும் மாதங்களில் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
அதன் பின்னர் புதிய அரசு, புதிய பாராளுமன்றம் அமைச்சரவை மாற்றங்கள் என பல மாறுதல்கள் ஏற்படவுள்ளன.
அதனைக் கருத்திற்கொண்டே இடைக்கால கணக்கறிக்கையைச் சமர்ப்பிக்க அரசு தீர்மானித்துள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார். ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 6700 மில்லியன் ரூபா தேவைப்படு கிறது.
இதனால் அடுத்த வருடத்தின் முதல் பகுதியில் இதற்கான நிதி திறைசேரியால் ஒதுக்கப்பட்டு பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.