பிரபாகரனை அழித்தது தவறெனக் கூறி எதிர்க்கட்சி விசாரணை நடத்தக் கோருகிறது

mahinda-rajapaksha.jpgஊடகவிய லாளர்கள் மட்டுமல்ல அரசியல்வாதி களேயானாலும் இந் நாட்டில் சட்டம் சகலருக்கும் சமமானதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிமன்றத் தீர்ப்பை வைத்துக் கொண்டு சர்வதேசமெங்கும் எதிர்க்கட்சியினர் விஷமப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாம் பிரபாகரனை அழித்தது தவறு எனக் கூறி விசாரணை நடத்தக் கோரி வருகின்றனரென்றும் குறிப்பிட்டார்.

தென் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்ட நிகழ்வொன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

தென் மாகாண மக்களின் காணி உறுதிகள் பற்றி நாம் குறிப்பிடும் போது இன்னொன்றும் ஞாபகத்துக்கு வருகிறது.  எமது நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பையும் மூன்றில் இரண்டு பகுதி கடற்பரப்பையும் ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு எழுதிகொடுத்த சம்பவம்தான் அது. அதை வைத்துக் கொண்டு புலிகள் தனி நிர்வாகமொன்றையே நடத்தினர். பொலிஸ், நீதிமன்றம்,  முப்படை, வங்கிகள் என அனைத்தையும் நிறுவி நிர்வாகம் செய்தவர்களுக்கு நாட்டின் ஒரு பகுதியை எழுதிக் கொடுத்தவர் ரணில் விக்கிரமசிங்க.

இன்று அந்த நிர்வாகம் கலைக்கப்பட்டு பயங்கரவாதம் பூண்டோடு ஒழிக்கப்பட்டு விட்டது. எம்மால் இந்நாட்டை ஒரே கொடியின் கீழ் கொண்டுவர முடிந்துள்ளது. நாம் யுத்தத்தை மட்டும் நடத்தவில்லை. அத்துடன் முழு நாட்டிலும் அபிவிருத்திகளை மேற் கொண்டோம். மஹிந்த சிந்தனை செயற்றிட்டத்தின் கீழ் நாம் ஒரு இலட்சம் காணித் துண்டுகளைப் பகிர்ந்தளிப்பதாக வாக்குறுதியளித்திருந்த போதும் இதுவரை ஐந்து இலட்சம் காணித் துண்டுகளை எம்மால் பகிர்ந்தளிக்க முடிந்துள்ளது.

அரச வேலைவாய்ப்புக்களைக் குறைப்பதற்காக அன்று ஐக்கிய தேசியக் கட்சியினர் உலக வங்கியிடம் உறுதிமொழியளித்தனர். இன்று நாம் அரச துறையில் 12 இலட்சம் ஊழியர்களுக்கு தொழில் வழங்கி சகல சலுகைகளையும் வழங்கி வருகிறோம்.

இந்த நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு எமக்குக் கடன் வழங்க வேண்டாமென எதிர்க்கட்சியினர் சர்வதேசத்திடம் கோரி வருகின்றனர். எத்தகைய நிலையிலும் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தென் மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அரசாங்கம் பெருவெற்றி பெறுவது உறுதி எனக் குறிப்பிட்டதுடன், சர்வதேசக் குற்றச்சாட்டுக்களிலிருந்து நாம் விடுதலைபெற தென் மாகாண மக்கள் வழங்கும் வெற்றி மிகவும் உறுதுணையாக அமையுமெனவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *