பெருந் தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொண்ட ஒத்துழையாமைப் போராட்டத்தினால் நாட்டுக்கு 1.5 பில்லியன் ரூபா நஷ்டமேற்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்தார். சில அரசியல் கட்சிகள் இதன் மூலம் அரசாங்கத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்தும் சூழ்ச்சியை மேற்கொண்ட போதும் அம் முயற்சிகள் தோல்வியுற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் 405 ரூபா சம்பள உயர்வு தொடர்பில் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்த அமைச்சர் இது தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துக்கு அரசாங்கத்தின் சார்பில் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளான குடியிருப்பு, மின்சாரம், குடிநீர், மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் முதலாளிமார் சம்மேளனத்தினரிடம் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வு தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளன த்துக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் வர்த்தமானியில் பதிவு செய்வதற்காக அமைச்சர் அதாவுத செனவிரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு தொழிலமைச்சில் இடம்பெற்றுள்ளதுடன் இலங்கை ஊழியர் சேவை சங்கத்தின் பெருந்தோட்டத் துறைப் பிரிவு க்கான தலைவர் லலித் ஒபேசேகர இதனை அமைச்சரிடம் கையளித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர், தோட்டத் தொழிலாளர்களுக்கு திருப்திப் படக்கூடிய சம்பளவுயர்வு கிட்டியுள்ள தெனவும் இது சகல தொழிலாளர்களும் மகிழ்ச்சியுறும் விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி சம்பளவுயர்வுக்கு மேலதிகமாக தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியங்களுக்கென தொழிலாளியொருவருக்கு நாளொன்றுக்கு 42.75 ரூபா வழங்க வேண்டியுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.