இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் இடம்பெயர்ந்தோர் நிலை குறித்து இந்திய மத்திய அரசு மிகவும் அக்கறையுடன் இருப்பதாகவும் அவர்களின் மீள்குடியேற்றம் குறித்து தொடர்ந்து இலங்கை அரசை வற்புறுத்தி வருவதாகவும் கூறி இருக்கிறார்.
தமிழக முதல்வர் கருணாநிதி இப்பிரச்சினை குறித்து தனக்கு எழுதியிருக்கும் கடிதத்திற்கு பதிலளித்துள்ள மன்மோகன் சிங், ஒன்றுபட்ட இலங்கைக்குள் அந்நாட்டுத் தமிழர்கள், அவர்களுக்கு உரிய உரிமைகள் அனைத்தையும் பெறுவதற்கு வழிவகை செய்யப்படவேண்டும் என்று உறுதிபட இந்தியா இலங்கைக்கு கூறியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் தீவிர கவனம் செலுத்திவரும் மத்திய அரசு ஏற்கனவே இடம்பெயர்ந்தோருக்கென தனியொரு மருத்துவமனை நடத்தி வந்தது, அதில் இதுவரை ஏறத்தாழ 38,000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது, கண்ணிவெடிகளை அகற்றும் பணியிலும் இந்தியக்குழுக்கள் ஈடுபட்டிருக்கின்றன என்று மன்மோகன் சிங் மேலும் கூறியிருக்கிறார்.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் பல்வேறு மறுவாழ்வுப்பணிகளை இந்தியா மேற்கொண்டிருப்பதாகக் கூறும் இந்தியப் பிரதமர், புலம்பெயர்ந்தோரால் திரட்டப்பட்டு தமிழ்நாட்டிலிருந்து கப்பல் மூலமாக அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்கள் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும், அது அங்கு பாதிக்கப்பட்டுள்ள் தமிழர்களை சென்றடைய இலங்கை அரசு ஆவன செய்யும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் தனது நம்பிக்கையைத் தெரிவித்திருக்கிறார்.