பகிடிவதைக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – அமைச்சர் விஸ்வ வர்ணபால சபையில் அறிவிப்பு

viswa-999.jpgஉயர் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 2015ம் வருடம் வரை உதவி ஒத்துழைப்புகளை வழங்க உலக வங்கி முன்வந்துள்ளதாக உயர் கல்வியமைச்சர் விஸ்வ வர்ணபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது உயர் கல்வித்துறையில் 60ற்கு மேற்பட்ட கருத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் இதற்கென 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் பல்கலைக்கழகங்களிலிருந்து பகிடி வதைகளை முற்றாக ஒழிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் அதற்கெதிரான சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்கவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதன் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்;

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சேவை வயதெல்லையை 55 லிருந்து 57 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வயதெல்லை பல நிபந்தனைகளுடன் அறுபதாகவும் நீடிக்கப்படலாம். அத்துடன் பல்கலைக்கழக அனுமதியை மேலும் அதிகரிப்பதற்கும் அடுத்த வருடம் முதல் 25,000 பேரை பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் நடவடிக்கையை விரிவுபடுத்துவதுடன் கல்விசாரா ஊழியர்களுக்கு சேவை வாய்ப்பை நீடிப்பதற்காகவும் இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை பல்கலைக்கழக நடைமுறையை உலக வங்கி பாராட்டியுள்ளது. உயர் கல்விக்காக அரசாங்கம் பெரும் வாய்ப்பை வழங்கியுள்ளதுடன் மேலும் 2015ம் ஆண்டு வரை அவ்வங்கி எமக்கு உதவ முன்வந்துள்ளது. இதன் மூலம் உயர் கல்வித்துறையில் பல முன்னேற்றமான மாற்றங்களை மேற்கொள்வதுடன் கட்டிடங்கள் ஆளணிகள் குறையையும் நிவர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

இருபதாயிரத்து எண்ணூற்று நாற்பத்தாறு மாணவர்கள் 2008ம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். அடுத்த ஆண்டில் 25 ஆயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்வதே எமது எதிர்பார்ப்பு. பாடத்திட்டங்களை நவீன மயப்படுத்துவதுடன் கடந்த 60 வருட பாரம்பரிய கற்கைகளை விடுத்து நவீன பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம். 2006, 2007ம் ஆண்டுகளில் பல புதிய பாடங்களும் 2008ல் பல புதிய துறைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் நன்மை கருதியே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கல்விசார் அபிவிருத்தியைப் பொறுத்தவரை இரண்டு புதிய கல்வி பீடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய முன்னேற்றங்கள் மூலம் வெளிவாரிக் கற்கைகளை ஆரம்பித்து மேலும் பெருமளவு பட்டதாரிகளை உருவாக் கவுள்ளோம். தேசிய தகைமை அமைப்பொன்றை உருவாக் கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சில தொழிற்சாலைகள் கூட போலிப் பட்டங்களை வழங்கும் நிலை இன்றுள்ளது.

இந்நிலையை மாற்றி சட்டப்படியான தகைமை களை உறுதி செய்வதற்கு இவ்வமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்திய நீதிமன்றங்களில் பகிடிவதையை மனித உரிமை துஷ்பிரயோகமாகத் தீர்ப்பளித்து தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதை இங்கு நாம் குறிப்பிடவேண்டும். மாணவ ர்களில் தீவிரமான சிலர் அரசியல் பின்னணி யுடன் பகிடி வதைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவை நிறுத்தப்ப டும். அதற்காக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *