செனல் – 4 வீடியோ விசாரணை ஐ.நா. உதவியுடன் நடத்தப்பட வேண்டும் : பிலிப் அல்ஸ்ரன்

ExtraJudicialKillingsஇலங்கை இராணுவத்தினர், தமிழ்ப் போராளிகளை சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணாகச் சுட்டுக்கொன்றனர் என்பது உண்மைதானா, இல்லையா என்று கண்டறிவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன், சர்வதேச மட்டத்தில், முழு அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும்.  இவ்வாறு ஐ.நாவின் சட்டவிரோத கைதுகள் மற்றும் படுகொலைகளுக்கான விசேட அதிகாரி பிலிப் அல்ஸ்ரன் ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய தகவலில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சட்டவிரோத கைதுகள் மற்றும் படுகொலைகளுக்கான விசேட அதிகாரி பிலிப் அல்ஸ்ரன், லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ‘சனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோக் காட்சி குறித்து கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்ட கருத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.

வீடியோக் காட்சி போலியானது என்று இலங்கை அரசு நிராகரித்து வரும் நிலையில் ஐ.நா. அதிகாரி இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பதாக ரொய்ட்டர் சுட்டிக்காட்டியுள்ளது.  பிலிப் அல்ஸ்ரன் இது குறித்து ரொய்ட்டருக்கு மேலும் தெரிவிக்கையில்,

‘சனல்4’ தொலைக் காட்சியில் வெளியான காட்சிகள் உண்மையற்றவை, உறுதிப்படுத்தப்படாதவை என்று மேலெழுந்தவாரியாகச் சொல்வதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. இத்தகைய சந்தர்ப்பத்தில் அல்லது சூழ்நிலையில், இது விடயம் மிகுந்த கவலையைத் தோற்றுவிப்பதாக உள்ளது.

அதேவேளை, இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் இது குறித்த விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதே அந்த நாட்டு அரசின் கடமையும் பொறுப்புமாகும்.  கடந்த காலங்களில் இதுபோன்ற விசாரணைகளுக்கான விடயத்தில் அந்நாட்டு அரசின் செயற்பாடுகள் திருப்தி தருவனவாக அமையவில்லை.

சுதந்திரமான, பக்கச் சார்பற்ற விசாரணைகள் சர்வதேச மட்டத்தில் நடத்தப்படுவது அவசியமானது என்பதே எனது கருத்து.  ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையில் இந்த விசாரணைகள் நடத்தப்படுவது மிகவும் விரும்பத்தக்கதாக அமையும்” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *