காணாமல் போயுள்ள ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை தேடும் பணியை முடுக்கி விடுவது தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். ஆந்திர முதல்வர் ரெட்டி மாயமானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரெட்டியைத் தேடும் பணியில் பிரதமர் அலுவலகம், சோனியா காந்தியின் அலுவலகம், ஆந்திர அரசு, உள்துறை, பாதுகாப்புத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து ரெட்டி தேடுதல் வேட்டை குறித்து விவரித்தார்.
ரெட்டியைத் தேடும் பணியில், ஆந்திர அரசுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அப்போது ப.சிதம்பரத்தை கேட்டுக் கொண்டார் சோனியா. இதேபோல ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான வீரப்ப மொய்லியும், சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, ஆந்திர முதல்வர் விரைவில் நலமுடன் திரும்ப கடவுளைப் பிரார்த்தித்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் மணீஷ் திவாரி கூறியுள்ளார்.