தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவிருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இது தொடர்பாக ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் இச்சந்திப்பு நடைபெறவிருக்கின்றது.
இச்சந்திப்பின் போது குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலவரம், நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள துரித மீள் குடியேற்றம், சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், அத்துமீறிய குடியேற்றங்கள்,மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் குறித்து முக்கியமாக கலந்துரையாடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் தமது கட்சி முதல் தடவையாக ஜனாதிபதியுடன் தனித்து பேசவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு நாளை கூடவிருப்பாதாகவும் அவர் தெரிவித்தார்