டெல்லி வந்தார் தஸ்லீமா- ரகசிய இடத்தில் தங்க வைப்பு

06-taslima.jpgஐரோப் பாவில் ஒரு நாட்டில் ரகசியமாக தங்கியிருந்த வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்திறங்கினார். அவரை மத்திய உளவுப் பிரிவான ஐ.பி அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்து ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர். ‘லஜ்ஜா’ என்ற புத்தகத்தை எழுதி சர்ச்சையில் சிக்கியவர் தஸ்லீமா. அவருக்கு அங்கு இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டல் விடுத்ததையடுத்து 1994ம் ஆண்டு அவர் வங்காளதேசத்திலிருந்து வெளியேறினார்.

இந்தியா, பிரான்ஸ், ஸ்வீடன் உள்பட பல நாடுகளில் பாதுகாப்பாகத் தங்கியிருந்த அவர் கடைசியாக அவர் கொல்கத்தாவில் குடியேறினார். இந் நிலையில் 2007ம் ஆண்டு அங்கும் அவருக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதையடுத்து மேற்கு வங்க அரசு அவரை ராஜஸ்தானுக்கு அனுப்பியது. ஆனால் அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மத்திய அரசி்ன் உதவியோடு டெல்லியில் குடியேறினார். அரசு அவரை டெல்லியில் ரகசிய இடத்தில் தங்க வைத்தது.

இந் நிலையில் இந்தியாவிலும் அவருக்கு எதிர்ப்பு வலுக்கவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி சுவீடன் நாட்டுக்குச் சென்றார். அங்கிருந்து ஐரோப்பாவில் வேறு ஏதோ ஒரு நாட்டில் ரகசியமாக குடியேறி அந் நாட்டு பாதுகாப்போடு தங்கியிருந்தார். இந் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தனது விசாவை புதுப்பித்துக் கொள்ள இந்தியா வந்தார். அப்போது ஆகஸ்ட் 17ம் தேதி வரை அவரது விசாவை நீட்டித்த மத்திய அரசு உடனே அவரை திருப்பி ஐரோப்பாவுக்கே அனுப்பிவிட்டது.

அவரது இந்திய விசா காலம் வரும் 17ம் தேதியோடு முடிவடைகிறது. இந் நிலையில் தஸ்லீமா இன்று காலை டெல்லி இந்திரா காந்தி சர்வேதச விமான நிலையம் வந்தார். அவர் எந்த நாட்டிலிருந்து வந்தார் என்று தெரியவில்லை. அவரது வருகையை அறிந்து காத்திருந்த ஐ.பி. பிரிவினர் அவரை உடனடியாக எங்கேயோ ஒரு ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விட்டனர்.

தஸ்லீமா தனக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை கேட்டு வருகிறார். ஆனால், மத்திய அரசு இந்த விஷயத்தில் இன்னும் முடிவெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *