தமிழரின் ஒரே சக்தி த.தே.கூ. மட்டுமே என்பதை சர்வதேசம் அறியும் : செல்வம் அடைக்கலநாதன்

0308adaikalanathan.jpgதமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிலாஷைகளையும் உரிமைகளையும் நேர்மையுடன் வென்றெடுக்கக் கூடிய, தமிழர்களின் சக்தியாய்,பலமாய் இருக்கக் கூடிய ஒரேயொரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே என்பதை அனைத்துலக சமூகமும் பிராந்திய வல்லரசான இந்தியாவும், புரிந்துகொண்டுள்ளன.

ஜனாதிபதியும் கூட இதனை நன்கு உணர்ந்துள்ள நிலையில், தமிழர்களின் ஒற்றுமையே பலம் என்பதை மீண்டும் உறுதியுடன் நிரூபிக்கும்,களமாக யாழ். மாநகரசபை, வவுனியா நகரசபை தேர்தல்கள் திகழ்கின்றன. இத்தேர்தல்களில் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை தமிழரசு கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்ததாவது: “வரலாறு காணாத பேரவலத்தை சந்தித்த வன்னி வாழ் மூன்று லட்சம் மக்களும், இடம்பெயர்ந்து வவுனியாவில் முள்ளுக்கம்பி நடுவில், பரிதாபகர வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

மரண பீதியுடன் வாழ்ந்து வரும் அவர்களைத் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தும் முயற்சியை உடனடியாக மேற்கொள்ளாமல், யாழ். மாநகர சபை தேர்தலையும், வவுனியா நகரசபை தேர்தலையும் அரசாங்கம் திட்டமிட்டுத் திணித்துள்ளது. திணிக்கப்பட்ட தேர்தலில் வலிந்து போட்டியிட வேண்டிய காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாமும் இத்தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தோம்.

தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கொள்கையிலிருந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்தும் விலகிவிட்டார்கள் என்று தப்புக்கணக்கு போடும் சிங்கள தேசத்தின் முத்திரையை கிழித்தெறியும் அரிய வாய்ப்பாக இத்தேர்தலை நாம் கருதுகிறோம். கடந்த 61 வருடங்களாக தமிழினத்தின் உரிமைப்போர் அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் முன்னெடுத்த போதெல்லாம் அதனைத் திட்டமிட்டு உலக வல்லரசுகளின் ஆதரவுடன் தமிழர்களின் உணர்வுகளை அடக்கிய சிங்கள தேசம், பேச்சுவார்த்தைகள் மூலம் நிரந்தர தீர்வுக்காகப் பல சந்தர்ப்பங்களில் தமிழ்த் தலைமைகள் முயன்ற போதெல்லாம் அதனை ஏற்றுக்கொள்ளவோ தமிழினத்துக்கு தீர்வு வழங்கவோ முன்வரவில்லை.

இன்னல்கள், இடர்கள், துன்பங்கள், சோகங்கள் என எமது வாழ்வு தொடரும் இவ்வேளையிலும் தமிழினம் தன்மானத்தை இழந்து சோரம் போகாமல் சுதந்திர தாகம் கிடைக்கும் இறுதி நேரம்வரை பற்றுறுதியுடன் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

அதற்கான வல்லமையும் துணிவும் அரசியல் நேர்மையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டுமே உள்ளது என்பதனை தமிழ் மக்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

எமது கரங்களைப் பலப்படுத்த, உரிமையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்கும் படி தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பல்லி
    பல்லி

    இருக்கலாம். ஆனால் அந்த அமைபில் இருந்து உங்களை போன்ற பலர் வெளியேற்றபட்டால் அல்லது போனால் அது கூதமைப்புதான் செல்வம்;

    Reply
  • thurai
    thurai

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரது சர்வதேசம் புலத்தில் வாழும் புலிகளேயன்றி வேறொருவருமில்லை. புலத்துப் புலிகளின் குரலே 3 லட்சம் தமிழரை முள்வேலிக்குள் வைத்துள்ளது. சர்வதேசங்களிலும் நிம்மதியாக வாழும் தமிழரின் வாழ்வினைக் கெடுப்பதே உங்களின் அரசியல் நோக்கம்.

    துரை

    Reply
  • kathiravelu
    kathiravelu

    when you going to start the democracy process within your party – rght now only some of you only can became MP within you party why don’t you let the other members of your party to become MP.

    Reply