கைரேகைகளுடன் அடையாள அட்டை

elc-ic.jpgநாட்டில் தற்போது பாவனையிலிருக்கும் தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக கைரேகைகளுடன் கூடிய தேசிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் இவ் ஆண்டின் இறுதியில் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டைகள் அனைத்தும் இலத்திரனியல் அடையாள அட்டைகளாக மாற்றப்படும். 1972 ஆம் ஆண்டு முதல் தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டைகள் மனித வலுவைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. இதனால் அவற்றில் இலகுவாக மோசடி செய்ய முடிகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் முழுவதுமாக கணினி மயப்படுத்தப்படுவதுடன் மத்திய தரவுத் தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆகையால் அவை மேலும் பாதுகாப்பானவையாக இருக்குமென்றும் அவற்றில் மோசடிகள் செய்ய முடியாதென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக 480 கோடி ரூபாவை அரசு செலவிட உள்ளது. இதற்கான கேள்வி கோரல் விடப்பட்டு தகுந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என உள்நாட்டு நிர்வாக அமைச்சின் செயலாளர் டாக்டர் உபநந்த விதானபத்திரன தெரிவித்தார்.  இந்தத் திட்டத்தை உலக வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்வதற்கே தொடக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. அதில் ஏற்பட்ட தாமதங்களால் அனைத்துச் செலவுகளையும் தானே பொறுப்பேற்றுக் கொள்வதென்று அரசு தீர்மானித்துள்ளது.

புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தற்போதுள்ள அடையாள அட்டைகள் 2015 ஆம் ஆண்டுடன் நாட்டிலிருந்து முற்றாக அகற்றப்பட்டுவிடும். அவற்றின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் மட்டுமே என்பதால் இயல்பாகவே அவை பாவனையிலிருந்து மறைந்து விடும். இலத்திரனியல் அடையாள அட்டைகளுக்காகப் பொதுமக்களிடமிருந்து எவ்வளவு பணம் அறவிடப்படப்போகின்றதென்ற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

நாடுமுழுவதும் உள்ள 331 பிரதேச செயலகங்கள், இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகிக்கும் பணிக்கு அனுசரணை வழங்கவுள்ளன. புதிய அடையாள அட்டைகளில் ஒருவரின் தனிப்பட்ட விபரங்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பதியப்பட்டிருக்கும். அத்துடன் கைரேகைப் பதிவும் ஒளிப்படமும் இணைக்கப்பட்டிருக்கும்.
 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *