இராணுவத்திலிருந்து தப்பியோடி தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் கடமையாற்றும் படையினரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இராணுவத்திலிருந்து தப்பியோடி தற்போது தனியார் அலுவலகங்களில் கடமையாற்றுவோரில் 150 பேரது விபரங்களைப் பெறும் நோக்கில் நாரஹேன்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதிவான் ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
மேற்படி 150 பேரதும் முகவரி மற்றும் விபரங்களை வழங்குமாறு தொழில் ஆணையாளருக்கு உத்தரவிடக்கோரியே பொலிஸார் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பியோடிவர்களில் ஆயிரக்கணக்கானோர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தனியார் நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
தொழில் திணைக்களம் ஊடாக இவ்வாறானவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கிலேயே முதல் 150 பேரது விபரங்களைத் தொழில் திணைக்களத்திடமிருந்து பெறுவதற்காக நாரஹேன்பிட்டி பொலிஸார் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளனர்.