சூரிய கிரகணத்தையோ, சூரியனையோ வெற்றுக் கண் களால் பார்ப்பதால் கண் பார்வை முழுமையாகவோ, பகுதியாகவோ பாதிக்கப்படும் என்று கொழும்பு பல் கலைக்கழகத்தின் பெளதீகவியல் துறை சிரேஷ்ட விரிவு ரையாளரும், நவீன தொழில்நுட்பத்திற்கான ஆதர் சி கிளார்க் நிலைய ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜய ரட்ன நேற்றுத் தெரிவித்தார்.
இன்று (22ம் திகதி) சூரிய கிரகணமாகும். இதனை இந்தியா, நேபாளம், பங்களாதேசம், பூட்டான், மியன்மார், சீனா உட்பட்ட சில நாடுகளில் முழுமையாக பார்க்க முடியுமென்றாலும் இலங்கையில் பகுதியாகவே தென்படும். அத்தோடு கிழக்காசியா, இந்தோனேசியா மற்றும் பசுபிக் கரையோர நாடுகளிலும் இதனை பகுதியாகவே பார்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் காலை 6.03 மணி முதல் தென்படும் இச்சூரிய கிரகணத்தை சில நிமிடங்கள் வித்தியாசத்தில் வெவ்வேறு நகரங்களில் காட்சியளிக்கும் என்றும் அவர் கூறினார்.
கொழும்பு நகரில் காலை 6.03 மணிக்கு தென்படத் தொடங்கும் இச்சூரிய கிரகணம் காலை 7.12 வரை இருக்கும். காலை 6.21 மணியளவில் உச்சமாக தென்படும் இச்சமயம் சூரியனின் 40 சதவீதத்தை சந்திரன் மறைப்பதால் இருட்டு நிலை ஏற்படுகின்றது. இச்சூரிய கிரகணத்தை நாட்டின் ஏனைய நகரங்களில் சில நிமிடங்கள் வித்தியாசத்தில் பார்க்க முடியும்.
உதாரணத்திற்குச் சொல்லுவதாயின் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களுக்கு காலை 5.58 மணி முதல் காலை 7.15 மணி வரை தென்படும். காலியில் காலை 6.03 மணி முதல் காலை 7.11 மணி வரை பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இச்சூரிய கிரகணத்தை உயர்வான இடங்களிலிருந்தோ, மலை உச்சியிலிருந்தோ தெளிவாகப் பார்க்க முடியும்.