வடக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை வரோதய நகரில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். இலங்கை இராணுவத்தின் யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் சந்திரசிறி பின்னர் வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் விவகாரத்தைக் கையாளுவதற்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
கடந்த வாரம் அவர் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். இதுவரை வடக்கு மாகாண ஆளுநராகப் பதவி வகித்துவந்த டிக்ஷன் தேலபண்டார மாலைதீவுக்கான இலங்கைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.