இலங் கையின் வெளிநாட்டு இராஜதந்திர உறவுகள் கடந்த 20 மாத காலப் பகுதியில் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்;
குறிப்பாக இந்திய மற்றும் பசுபிக் வலய நாடுகளுடன் இலங்கை நல்லுறவுகளை வளர்த்துக்கொண்டுள்ளது. பிராந்தியத்தின் வலுவான தலைமைத்துவத்தின் கீழ் முக்கிய பணிகளை ஆற்றியுள்ள நாடு என்ற வகையில் இன்று இலங்கை தலைநிமிர்ந்து நிற்கிறது.
இலங்கைக்கு எதிராக செயற்பட்ட நாடுகள் கூட தற்போது இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன. ஐ.நா. செயலாளர் நாயகம் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் இலங்கை தொடர்பான ஐ.நா. கொள்கைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளுக்கு இது பெரும் உதவியாக அமைந்துள்ளது.
இலங்கையில் பொருளாதார மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்வதில் வெளிவிவகார அமைச்சு பாரிய பங்களிப்பைச் செய்து வருகிறது. ஆபிரிக்க நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளைக் கட்டியெழுப்ப அமைச்சு எதிர்பார்த்துள்ளது. அந்நாடுகளில் இலங்கைத் தூதரகங்களை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இலங்கைக்கும் பிரேஸிலுக்குமிடையில் நேரடி தூதரக தொடர்புகள் காணப்படுகின்றன.
நாட்டில் அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக சர்வதேச உதவிகளைப் பெற்றுக்கொள்ளும்போது இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாத வகையில் செயற்படவுள்ளோம். ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் உள்நாட்டு நிகழ்ச்சி நிரலுக்கேற்ப அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போர் நிறுத்த உடன்படிக்கை காரணமாக சர்வதேச ரீதியில் புலிகளுக்குக் கிடைத்திருந்த அந்தஸ்தை இலங்கை இல்லாமல் செய்துவிட்டது என்றார்.