அநுராத புரத்தில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜேதவனாராமய தூபி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.செங்கற்களால் அமைக்கப்பட்ட மிகப்பெரியதும் மிக உயரமானதுமான இந்தத் தூபியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
யுனெஸ்கோ நிறுவனம் மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பவற்றின்; ஒத்துழைப்புடன் 1980ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இதன் நிர்மாணப் பணிகள் நிறைவடைய சுமார் மூன்று தசாப்தங்கள் சென்றுள்ளன. இலங்கையில் குளங்களை நிர்மாணிப்பதில் புகழ்பெற்ற மன்னராக விளங்கிய மஹகாசேன மன்னனால் கி.மு 276-300 காலப் பிரிவில் இத்தூபி கட்டப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. 1600 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை அழிவுகளுக்கு மத்தியில் முற்றாக இடிந்து விடாது காணப்பட்ட இத்தூபி இலங்கை கட்டடக் கலையின் தேர்ச்சிமிக்க பொறியியல் ஆற்றலுக்கு சிறந்த சான்றாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.