டெங்கு நாட்டின் பல பாகங்களிலும் பரவிய வண்ணமுள்ளது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட வண்ண முள்ளன. இது சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத் துல் உலமா பின்வரும் அறிக்கையை விடுக்கிறது. இவ்வருட ஆரம்பம் முதல் இன்று வரையிலான ஐந்து மாதக் காலப் பகுதியில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கொடிய நோய்க்கு ஆளாகியும், நூற்றுக் கணக்கானோர் பலியாகியுமுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வேளையில் மிக வேகமாகப் பரவி வரும் இந்நோயிலிருந்து சகலரையும் பாதுகாக்கும் நிமித்தம், நாம் எமது சூழலை சுத்தமாக வைத்திருத்தல் மிக அவசியமென்பதை நினைவுறுத்த விரும்புகிறது. எனவே, இவ்விடயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் மிக விழிப்புடன் இருக்குமாறும், சுத்தத்தை பேணுமாறும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறது.
குறிப்பாக, சுத்தம் ஈமானின் பாதியென்ற நம்பிக்கையோடுள்ள அனைத்து முஸ்லிம்களும் அதனை கடைபிடிக்குமாறு வலியுறுத்துகிறது. இந்நோயினால் அவதியுற்றிருக்கும் சகல மக்களுக்காகவும் எல்லா நேரங்களிலும் அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுதல், தானதர்மம் செய்தல், பிரார்த்தனையில் ஈடுபடுதல் போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு வேண்டிக் கொள்வதுடன், உலமாக்கள் தமக்குக் கிடைக்கும் குத்பா போன்ற சந்தர்ப்பங்களில் மக்களை விழிப்பூட்டுமாறு உலமா சபை வினயமாக வேண்டிக் கொள்கிறது.