போதைபொருளை ஒழிக்கும் மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுப்பதில் அரசு ஒருபோதும் பின்நிற்காது -ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgதீவிரவாதத்தை ஒழிக்க மேற் கொண்ட மனிதாபிமான நடவடிக்கை போன்றே நாட்டில் போதைப் பொருள் பாவனை ஒழிப்புக்கெதிரான மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுப்பதில் அரசு ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனைக் கொள்கை மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கமைய எதிர்வரும் 2015ம் ஆண்டுக்குள் போதையற்ற இலங்கையை உருவாக்குவதே தமது நோக்கமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். உலக புகையிலை தடுப்பு தினத்தையொட்டி புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான கட்டுப்பாட்டு அதிகார சபை ஏற்பாடு செய்திருந்த பிரசார வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது.

அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா, பேராசிரியர் கார்லோ பொன்சேகா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது: முப்பது வருட காலம் நாட்டைச் சீரழித்த தீவிரவாதத்தை 2 1/2 வருடங்களுக்குள் எம்மால் துடைத்தெறிய முடிந்துள்ளது. அதற்கான கொண்டாட்டங்கள் இன்னும் தொடர்கின்றன.

நாட்டிற்கு கெளரவமான சமாதானத்தைப் பெற்றுக்கொடுப்பதாக நாம் மஹிந்த சிந்தனைக் கொள்கையில் கூறினோம். அது நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் அக்கொள்கைத் திட்டத்தில் முதலாவதாக போதையற்ற நாட்டை உருவாக்குவது பற்றி கூறப்பட்டுள்ளது. அதற்கிணங்க போதை ஒழிப்பு சம்பந்தமாக தற்போது பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதுடன் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. புலிகளைப் போன்ற கொடூரமான தீவிரவாதத் கும்பலை ஒழிக்க முடிந்த அரசாங்கத்தால் போதைப்பொருள் விற்பனையாளர்களை கட்டுப்படுத்துவது கஷ்டமான காரியமல்ல.

கடந்த காலங்களில் தீவிரவாதத்தினால் பெண்களும் சிறுவர்களுமே பெரிதும் பாதிக்கப்பட்டனர். போதைப் பொருள் மற்றும் மதுசாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுவதும் பெண்களும் சிறுவர்களுமே. அரசாங்கத்தின் போதை ஒழிப்புத் திட்டத்தின் மூலம் இவர்கள் பாதிப்பிலிருந்து விடுதலையாவது உறுதி.

போதை ஒழிப்பு சம்பந்தமாகக் கருத்துத் தெரிவித்த மதத் தலைவரான மாதுறுவாவே சோபித தேரர் எமது இனம், புலிகளால் ஒருபுறமும் கசிப்பால் மறுபுறமும் வதைப்படுகின்றது என்றார். இதனால் போதை ஒழிப்பு என்பது எந்தளவு கஷ்டமான தென்றாலும் அதனை அரசு நிறைவேற்றும்.

நாம் எத்தகைய அழுத்தங்களுக்கும் அடிபனியவில்லை. போதை ஒழிப்பு தொடர்பான திட்டங்களை மேற்கொள்ளும் அதேவேளை கடந்த மூன்றரை வருடத்தில் எத்தகைய புதிய மதுபானசாலை அனுமதியும் வழங்கப்படவில்லை. அரசாங்கத்திற்கான வருமான மாநாட்டு மக்களின் வாழ்க்கையா என வரும்போது நாட்டு மக்களின் வாழ்க்கைக்கே நாம் முக்கியத்துவ மளிக்கின்றோம். இந்நாட்டு மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கையே முக்கியமானது.

போதைப்பொருள் விற்பவர் பின்னால் தேடிப்போவதைவிட அதனைக் கொண்டு வருபவர் மற்றும் அதற்கு மூலகாரணமானவர்களை இனங்கண்டு அவர்களுக்குத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. நாம் அதனையே எதிர்காலத்தில் மேற்கொள்வோம். போதையற்ற இலங்கையை உருவாக்குவதில் சகல துறையினரினதும் அர்ப்பணிப்பு மிக மிக அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *