முதியோரை உறவினர்களுடன் அனுப்பும் பணி – மனிக்பாமில் பொலிஸ் அதிகாரிகளுடன் அரச அதிபர் கலந்துரையாடல்

chals_.jpgநலன்புரி முகாம்களிலும், நிவாரண கிராமங்களிலும் தங்கியுள்ள முதியவர்களை அவற்றுக்கு வெளியில் உள்ள அவர்களின் உறவினர்களுடன் ஒன்றிணைப்பது தொடர்பில் அரச அதிகாரிகள் மட்டத்தில் நேற்று (28) ஆராயப்பட்டுள்ளது.

முதியவர்களை விடுவிப்பது தொடர்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ், பொலிஸ் அதிகாரிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மனிக்பாமில் நேற்று இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அரச அதிபர் சார்ள்ஸ் தெரிவித்தார்.

ஏற்கனவே மூவாயிரம் பேரை விடுவித்துள்ளதாகக் கூறிய அவர், புதிதாகக் கிடைத்துள்ள 1500 பேர் தொடர்பான விபரங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். முகாம்களிலும், நிவாரண கிராமங்களிலும் தங்கியுள்ளவர்களை விடுவித்துக் கொள்வதில் அவர்களின் உறவினர்கள் தம்மைத் தொடர்பு கொண்டு விபரங்களை வழங்க முடியுமென்றும் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுள் 10 வீதமானவர்கள் முதியவர்களென்று அரச அதிபர் தெரிவித்தார். இதேவேளை, முகாம்களில் கல்வி கற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு ள்ளதால் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பிரச்சினைகள் கிடையாது. எனினும் பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.

இதே சமயம், பூந்தோட்டம் மற்றும் மத்திய மாகாண வித்தியாலயம் ஆகிய நலன்புரி நிலையங்களில் இருந்த மக்களுள் நேற்று ஒரு தொகுதியினர் ஐந்தாவது வலய நிவாரண கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *