இலங்கையில் சிறந்த சமாதான சூழல் நிலவுவதையடுத்து 32 இந்திய கம்பனிகள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக விவகாரங்களுக்கான அமைச்சர் ஜீ. எல. பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய பலமும் ஆளுமையும் இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது என்பதில் நம்பிக்கை கொண்டே இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இலங்கையில் தமது வர்த்தக முதலீட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஏற்றுமதி அபிவிருத்தி கட்டளைகள் சட்டத்தின் மீதான விவாதத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டாரவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின்னர் மேற்படி கட்டளைச் சட்டம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விவாதத்தினை ஆரம்பித்து உரையாற்றிய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் ஆடைத் தொழில் வீழ்ச்சியடைந்து பெருமளவிலானோர் வேலை வாய்ப்புக்களை இழப்பர் என பலர் தெரிவித்தனர். எனினும் அக்கூற்றைப் பொய்யாக்கும் வகையில் இன்று ஆடைத்தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது.
இலங்கையைப் போன்றே இந்தியாவிலும் சிறந்த அரசியல் சூழல் இன்று உருவாகியுள்ளது. இந்த சூழலானது வர்த்தக, முதலீட்டு நடவடிக்கைகளுக்கு சிறந்த வாய்ப்பினை உருவாக்கித் தந்துள்ளது. பலம் பொருந்திய பல நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டுவரும் தற்போதைய நிலையில், அண்மைக்காலமாக எமது பொருளாதாரத்தில் அந்நிய செலாவணியின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.
அரசாங்கத்தின் கொள்கை, காத்திரமான செயற்பாடுளே இதற்குக் காரணமாகும். குறிப்பாக தேயிலை, இறப்பர், தெங்குப்பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதி அளவுகள் அதிகரித்துள்ளன. கோப்பி ஏற்றுமதியில் சதவீத அதிகரிப் பையும், ஆடைத்துறை ஏற்றுமதியில் 13 வீத அதிகரிப்பும் இதில் குறிப்பிட கூடியதாகும்.