யாரிவன்? பிரபாகரனா? யாராய்தான் இருந்தால் என்ன? இவன் ஒரு தமிழ் புலி வீரன் மட்டுமல்ல முக்கியமான ஒரு தளபதிதான். இவ்வளவு இராணுவமும் சுற்ற சூழ நின்று பார்க்கத் துடிக்கிறதே. இவன் ஒரு புலிகளின் முக்கியமானவன்தான். அதைத்தான் பிரபாகரன் என்கிறது அரசு. இல்லை என்கிறார்கள் புலம்பெயர் தமிழர். யாராய்தான் இருந்தால் என்ன? அவன் எம்தேசத்தை நேசித்தான், அதனால் போராட உந்தப்பட்டான் அல்லது திணிக்கப்பட்டான். இந்தத் தேசத்தைத் தாங்கிய நெஞ்சம் எதிரியின் கைகளில் அநாதைப் பிணமாய் போகிறதே. ஈரமுள்ள நெஞ்சங்களே யாராவது இவன் உடலை உரிமை கோரினீர்களா? உங்களுக்காய் இவன் தன் இளமையையே தொலைத்தானே! நீங்கள் அன்று தூக்கி வைத்துக் கொண்டாடிய இப்புலிவீரன் எமது ஈழக் கோரிக்கைகள் போல் கேவலமாய் போனானே.
இப்பாடையில் போவது புலி வீரனோ பிரபாகரனே அல்ல. எம்மக்களின் தலைவிதி, சுயநிர்ணய உரிமை இதுமட்டுமல்ல எம்தேசமும் எமக்கிழைத்த நாசமுமே. உலகெங்கும் கொடி பிடித்துக் கோசம் போட்ட சமூகமே! உங்களுக்காய் ஒரு தேசம் அமைக்கபோய் எதிரியின் கையில் ஒரு ஈனனாய் அநாதைப் பிணமாய் போகும் இவனுடலை யார் உரிமை கோரினீர்கள்? ஈன இனமே உனக்கு விடுதலை ஒருகேடா?
அன்று ஈழவிடுதலை என்று ஆயுதம் தாங்கிப் புறப்பட்ட ஒவ்வொருவனும் தன்நலனை விட்டு மக்களுக்காக என்றே புறப்பட்டனர். எந்த நேரமும் தன்னுயிர் போகலாம் என்றே பயணத்தைத் தொடங்கினர். இதில் மாற்றுக்கருத்து எவருக்கும் இருக்க இயலாது. பாதைகள் மாறின, பயணங்கள் தடுமாறின, எதிரியை நோக்கிய துப்பாக்கிகள் எங்களை நோக்கியும் திரும்பின. காலம் இந்த ஈனவினத்தை அழிக்க நினைத்ததோ என்னவோ?
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது பற்றி ஆராய்ச்சியில் சிலர் இறங்கியுள்ளார்கள். சிலர் கண்மூடித்தனமாக புலிகளின் ஊதுகுழல்கள் கூறுவது நம்புகிறார்கள். பிரபா உயிருடன் இருந்தால் மகிழ்சியானதுதான். ஒரு மரணத்தில் மகிழ்ச்சியுறும் மனம் எனக்கில்லை. ஆனால் பிரபாகரன் என்று அரசுகாட்டும் படம் பிரபாகரன் இல்லையென்று நிரூபிப்பதற்காகவாவது புலம்பெயர்ந்த தமிழர்களோ அன்றி உறவினர்களோ அந்த உடலை உரிமை கோரியிருக்கலாம். அரசின் முகமூடியாவது கிழிந்திருக்குமல்லவா?
கடைசிகாலத்தில் பிரபாகரனும் புலிகளும் எப்படி நடந்தார்களோ அவற்றை ஒருபுறம் வைத்துவிட்டு. எம்மினத்துக்காக துப்பாக்கி தூக்கியவர் என்ற முறையிலும், எமக்காக தலைமறைவு வாழ்க்கைளை மேற்கொண்டவர் என்ற வகையிலும், ஒவ்வொரு இறந்த புலிவீரனும் மரியாதைக்குரியவனே. இராணுவம் அவர்கள் பூதஉடல்களை மரியாதையாகத்தான் நடத்துகிறதா? கார்த்திகையை புனிதமாதமாக்கி 27ம் திகதியை புண்ணிய நாளாக்கி உலகெங்கம் தீபமேற்றினார்கள் புலிகள். அவையெல்லாம் உங்கள் பிள்ளைகளை மேடையில் காட்டுவதற்கான கொண்டாட்டமாகவே கருதியிருக்கிறீர்கள்? இவனைப்போல் எத்தனை புலிவீரர்கள் முகம் தெரியாமல் இடம்தெரியாமல் புதைக்கப்பட்டார்களோ? எரிக்கப்பட்டார்களே?
நீங்கள் துதிபாடிய, நேசித்த, சூரியபுத்திரன் என்று கூவியழைத்துக் கும்பிட்ட பெயரைச் சொல்லிக் கொண்டு அநாதைப் பிணமாய் ஒரு புலிவீரன் போனானப்பா? நெஞ்சு கனக்கிறது. ஈனஇனமே உன்நெஞ்சை தொட்டுப்பார் எங்கே உன்னிதயத்தில் ஈரம்?
புலிகள் குண்டுகளாலோ, போர் விமானங்களினாலோ சிதறவில்லை. எத்தனை துரோகங்கள்? எத்தனை வஞ்சகங்கள்? இத்தனையாலும் தானே புலிகள் சிதறினர். ஒரு சிலரை மட்டும் நம்பி இயக்கம் நடத்தியதன் விளைவுதான் இது. ஒரினமே சில தனிமனிதர்களின் கையில் அடைவு வைக்கப்பட்டு, விடுதலை என்ற சொல்லையே உச்சரிக்காதவாறு ஆக்கப்பட்டது. ஒரு தனிமனிதனுக்காகவே ஒரு கட்டமைப்பு இருக்கக் கூடாது. கட்டமைப்பானது மக்களுக்காக இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் புலிகள் நிச்சயம் வீழ்திருக்க மாட்டார்கள்.
கப்பல் கப்பலாய் 19 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. ஒரு கப்பல் சரி இரண்டு கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்பும் அதேவழியில் யுத்தளபாடங்களை எந்த மடையன் அனுப்புவான். யார் பதில் சொல்வார்களா? இங்கேதான் பெரும் சதி நடந்தேறியிருக்கிறது. கப்பல் மூழ்கினால் கணக்கு யாருக்குக் காட்டுவது. வந்த சரக்கு கோடிகள் என்பது தானே கணக்கு. வெளிநாட்டில் மலசலகூடம் தேய்த்து போருக்காக, மக்களைக்காக்கவென கண்மூடித்தனமாகக் கொடுக்கப்பட்ட பணமல்லவா அவை.
போதிய யுத்த தளபாடங்கள் இருந்திருந்தால் நிச்சயம் புலிகள் இராணுவத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியிருப்பார்கள். ஒரு விமானத்தை விழுத்த வக்கில்லாமல் போனது ஏன்? அதுவும் பழைய இரஸ்சிய மிக்29ஐ விழுத்தப் புலிகளால் முடியாமல் போனது ஏன்? சதி இங்கேயும் சரசமாடியே இருக்கிறது. இரஸ்சிய விமானத்தை விழுத்த இரசியாவிலேயே ஏவுகணைகளை வாங்கலாம். சதிகளால் மட்டுமே புலிகள் விழுந்தார்கள் என்பதுதான் உண்மை. இச்சதிகாரர்கள் யார்? தமிழர்களின் தலைவிதியை அடைவுவைத்த துரோகியார்? ஈனச்செயலுக்கு துணைபோய் நம்பிக்கை மோசடி செய்தவன் யார்? துரோகிகள் என்றும் அருகிலேயே இருப்பார்கள் இருந்திருப்பார்கள் என்பதை அறிக.
அப்பிணமானது பிரபாகரனினது இல்லையாயினும் யாரோ ஒரு புலி வீரனினுடையதாகக் கூட இருக்கட்டுமே? ஏன் இறந்தவர்களை யாருமே உரிமை கோரவில்லை? சரி இறந்துபோன உறுதிப்படுத்தப்பட்ட மற்றய தளபதிகளின் உடல்களை ஏன் உறவினர்கள், நண்பர்கள், ஊதுகுழல்கள் ஏன் உரிமை கோரவில்லை? இவனுக்கும் எம்மைப்போல் தாய், தந்தை, சகோதரம், உறவுகள் என்று இருந்துதானே இருந்திருக்கும். இவர்கள் வீரர்கள் இல்லையா? அறிவுள்ள சனங்களே அநாதையாக அனுப்பினீர்களே. ஒரினத்தை நெஞ்சில் தூக்கியவர்கள் அல்லவா இவர்கள். பொங்கு தமிழிலும், மாவீரர் தினங்களிலும் மேடை மேடையாய் தெருத்தெருவாய் கேட்டோமே எல்லாம் பொய்யா?
இராணுவம் ஒரு புலிவீரனையும் கொலை செய்யவில்லை என்கிறீர்களா? இக்கட்டுரையை பலர் பலவாறு கருத்துக் கூறினாலும் உ.ம் புலிகள் என்ன செய்தார்ளோ அதுவோ புலிக்கு நடந்தது எனலாம். இதற்கெல்லாம் அப்பால் நின்று ஒவ்வொரு தமிழனையும் கேட்கிறேன். இப்படி எம்புதல்வர்கள் அநாதைப் பிணமாய், ஏதிலியாய், யார் யாரோ எள்ளி நகையாட பிணமாய் போனார்களே. தெருவில் செத்த பிச்சைக்காரப் பிணத்துக்குக் கிடைத்த மரியாதை இவர்களுக்குக் கிடைத்ததா? எலும்பும் தசையுமாய் அள்ளி எடுத்து கூழம் குப்பை போல் எரிக்கப்பட்டார்களே! எரிகிறதையா இதயம், நோகிறதையா நெஞ்சம். எத்தனை புலி வீரர்களின் உடல்கள் உரிமை கோரப்பட்டன? அடையாளம் கண்டபின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டன? பிரபாகரன் வாழ்கிறாரா? செத்தாரா? என்று தேடுகிறீர்களே உண்மையில் செத்தவர்களை என்ன செய்தீர்கள்? இறந்தவர்களில் ஒருவராய் பிரபாவாக இருந்தாலும் அவருக்கும் இன்நிலைதான். இந்த நன்றி கெட்ட ஈனத் தமிழ்சாதிக்கு உயிர்கொடுத்தவர்களும் ஈனராய் போனார்களே. இந்த இனத்துக்கு விடுதலை ஒருகேடா?
இது என்வேதனையின் விசாரமே தவிர வேறில்லை.
nathan
அஞ்சலி
புலிகளின் தலைமையை விமர்சிக்கின்ற வேளையில் இனவாத அரசினாலும் சர்வதேச சதியாலும் சூழப்பட்ட நிலையில் கொல்லப்பட்ட தேசபக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் எமது அஞ்சலியைச் செலுத்துகின்றோம். மக்களுக்காக தமது இறுதி மூச்சுவரை எண்ணியே வாழ்ந்த தேசபக்தர்களை புலி என்ற காரணத்திற்காக நாம் அவர்களின் தியாகத்தை மதிக்காமல் இருக்க முடியாது. இந்த தியாகிகளின் அழிவில் இருந்து எமது எதிரிகள் இனவாத அரசுமாத்திரம் அல்ல. பிராந்திய வல்லரசு போலிகம்யூனிச சீனா ஐரோப்பா,யப்பான், அமெரிக்க ஏகாதிபத்தியமே என்று தமது தியாகத்தின் மூலம் வெளிப்படுத்திச் சென்றிருக்கின்றார்கள்.
Nackeera
புலிகள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்கு அப்பால் அவர்களின் தியாகங்களுக்கு தமிழினம் தலைவணங்கித்தான் ஆகவேண்டும். இவர்களும் எம்மண்ணின் மைந்தர்களே. ஒரே பெற்றோருக்கு வித்தியாசமான உருவ அமைப்பிலும் அங்கக் குறைகளுடனும் பிள்ளைகள் பிறக்கவில்லையா? இதனால் பிள்ளை பெற்றோர் வெறுப்பதில்லையே. புலிகளுக்கு மட்டுமல்ல மக்களுடன் மக்களாய் நின்று மக்களுடனே மரணித்த பிரபாகனுக்கும் என்னிதயத்தின் கண்ணீர் அஞ்சலிகள். எம்மினம் ஒருவிடயத்தை என்றும் மறக்கக் கூடாது. அரசு எனும் ஆதிக்க வெறியர்களை ஆயுதத்தாலும் விரட்டலாம் என்று துணிந்து நின்று கடைசிவரை நின்றவர்கள் புலிகள். அவர்கள் மக்களை விட்டு விட்டுச் சென்ற பாதைதான் பிழையே அன்றி அவர்கள் எமக்குச் சொல்லிவிட்டுப்போன பாடம் மிகப்பெரியது. என்னால் உறுதியாகக் கூறமுடியும் எடுத்ததற்கெல்லாம் துரோகி துரோகி என்றார்களே இந்தத் துரோகம் தான் புலிகளை அழித்தது. பிரபாகரன் அவர்கள் மரணமடையும் வேளையிலும் துரொகியிடமே புலிகளை ஒப்படைத்து விட்டுச் சென்றாரா என்ற கேள்வியைத்தான் எம்மனம் மீண்டும் மீண்டும் வினாவுகிறது.
Hg
மண்ணில் போராடிய புலித்தலைமையை அழித்தன் மூலம் எதிரியும், புலித் தலைமையைக் காட்டிக் கொடுத்த புதிய புலித் துரோகிளுமே, இந்த யுத்தத்தை வென்றுள்ளனர்.
இவர்களால் எம்மக்கள் அரசியல் அனாதையாகியுள்ளனர். கடந்த காலத்தில் தமிழ்மக்களின் அனைத்து சமூக கூறுகளையும் அழித்தவர்களை, ஒரு துரோகம் மூலம் அழித்துள்ளனர். இதன் மூலம் மக்கள் அரசியல் அநாதையாக்கப்பட்டுவிட்டனர். எதிரியின் இனவழிப்பு விருப்பங்களும் இதுதான்.
எம் மக்களின் பொது எதிரிக்கு எதிராக போராடி மரணித்துப் போன அனைவருக்கும், நாம் அஞ்சலி. பொது எதிரிக்கு எதிராக, இவர்கள் பெயரால் போராடக் கோருகின்றோம். இந்த யுத்தத்தில் இறந்த அனைத்து மக்களுக்கும் இதைக் காணிக்கையாக்கின்றோம்.
எதிரிக்கு எதிரான நட்பு சக்திகளை கடந்த காலத்தில் எதிரியாக்கி அழித்த தவறுகளை இனம் காண்பதும், அதேநேரம் எதிரிக்கு எதிரான சக்திகளிடம் விமர்சனம் சுயவிமர்சனத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்த மக்களுக்கான அரசியல் செயல்பாட்டைக் கோருகின்றோம்.
S.JeyaKumar
மன்னவனே மன்னவனே
என் மகனே!
என்னென்னவோ செவிக்கேட்டேன்
மெய்ப்படுமோ ராசா
அது
மெய்ப்படுமோ?
பல்லாண்டாய்
பல்லாண்டுகளாய்
பிடரி மயிற் தெறிக்க
ஓடிய பேய்களெல்லாம்
பல் இழிக்கும்
செய்தி கேட்டேன்
என் மகனே!
ஒரு வேளை?
வஞ்சக நரிக்குலத்தின் தந்திரத்தில்
வீழ்ந்து போனாயேர்?
நம்பமுடியவில்லையே தம்பீ!
புகழ்ந்து புகழ்ந்தே
உனை
உச்சியில் வைத்தவர்கள்
பேசாமல் போயினரோ?
வாழ்ந்திருக்கப்
பொறுக்காத மனிதரப்பா!
நீயும்
மதி கேளா மன்னவனே
என் மகனே!
ஏற்றவேளையில்
முடிவெடுக்கா உன் தவறு
எல்லோரையும்
வதைக்குதப்பா.
ஆயிரம் ஆயிரம் உன் தோழர்களுடன்
களமாடி இறுதியில்;
வஞ்சனையால் வீழ்ந்தனையோ ?;
எம் குமாரத்திகளுக்கெல்லாம்
தகப்பன்போல் இருந்தாயே!
நீ பிறக்கின்றாய்
ஆம்.
அதுவே தான்
நீ இறப்பதில்லை!
ஆயிரம் உடல்களைக் காட்டலாம்
உன்னதென்று.
நம்புவரோ! நம்புவரோ!!
உன்னதென்று?
எம் குமாரத்திகளுக்கெல்லாம்
தகப்பன்போல் இருந்தாயே!
நம்புவரோ! நம்புவரோ!!
உன்னதென்று?
S.JeyaKumar
தமிழ் போராளி
எமது இனத்திற்காக 30 வருடங்கள் எமது பிரதேச உரிமைக்காக தமது வாழ்லை அர்ப்பணித்து போராடிய வீரர்கள் இந்த விரர்கள் பாதையில் தவறுகள் விட்டிருக்கலாம் ஆனால் அவர்கள் போராடியது தமிழர்களின் தன்னாட்ச்சி உரிமைக்கே இது அடையும் வரையில் புலிகள்- புலிகளின் வளங்கள் -புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்து செயற்ப்பட வேண்டும் இதுவே இந்த புலிவீரர்களுக்கு செய்யும் சரியான அஞ்சலியாகும்.
thevi
மண்ணில் போராடிய புலித்தலைமையை அழித்தன் மூலம் எதிரியும், புலித் தலைமையைக் காட்டிக் கொடுத்த புதிய புலித் துரோகிளுமே, இந்த யுத்தத்தை வென்றுள்ளனர்”/
ரஜாகரன் சொல்வது போல இருக்கிறது!
புலிகள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்கு அப்பால் அவர்களின் தியாகங்களுக்கு தமிழினம் தலைவணங்கித்தான் ஆகவேண்டும்”/
இங்கு தியாகம் புரிந்தவர்கள் அடிமட்ட உறுப்பினர்களே! புலித்தலைமை சரணடைய தயாராக இருந்தார்கள். அவர்களுக்கு தலையை சுற்றி ஒளிவட்டம் கட்டி, தியாகம் புரிந்தவர்களையும்- துரோகம் செய்த, செய்ய இருந்த பிரபாகரன் கும்பலையும் ஒரே தட்டில் வைக்காதீர்கள்.
kulan
இக்கட்டுரை மூலம் நான்கேட்டுக் கொண்டது இதுதான்: களமாடி இறந்த அடிமட்டப்போராளியினுடைய உடலம் கூட உரிமை கோரப்படாமல் அனாதையாகப் போயினவே என்பதுதான். களமாடிய அனைவரும் தம்மிதயத்தில் எங்கோ ஒரு மூலையில் எம்மண்ணையும் மக்களையும் நேசித்தவர்கள் தான். போகும் வழிபிழைத்தது என்பதற்காக இவர்கள் எவருமே எம்மக்களைகளையும் மண்ணையும் கொஞ்சம் கூட நேசிக்கவில்லை என்று கூறிவிடமுடியாது. தலைமைகள் உட்பட. இக்கட்டுரையின் ஆதங்கம் அடிமட்டப்போரளியின் உடல்கூட உரிகைகோராது அநாதையாயினது என்ற ஆதங்கம்தான்.
palli
ஜெயகுமார் உங்கள் ஆதங்கம் உனர்வு அத்தனைக்கும் மதிப்பழிக்கும் நாம் நாமும் பல தலைவர்களை இந்த தலவரால் இழந்து தவித்து தனியாய் தழ்ழாடி வீழ்ந்து எழுந்து இன்று அகதியாய். துரோகியாய். ஒட்டுகுழுவாய். புறம்போக்காய். பேசமுடியாதவர்களாய். ஏன் தமிழனே இல்லை என சான்றிதழ் வாங்கபட்டு கேவலமான பிறவிகளாய் தங்களால் வறுதெடுக்கபட்டு காயபோடபட்டோம். ஆனால் அந்த வலி தங்களுக்கு தெரியாது. இருப்பினும் இறப்பிலே இன்பம் காணும் கொடியநோயை நாம் கற்கவில்லை. இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் தங்கள் தங்கள் தலைவனுக்கு எழுதிய கவிதையை கண்மூடி உணர்கின்றபோது தடாலடியாய் சில கற்க்கள் ஏம்மீதும் கவிதை வடிவில் விழுந்த போது திடுக்கிட்டு முழித்து விட்டோம். இத்தனைக்கு பின்னுமா நீங்கள் திருந்தவில்லை. ஆனாலும் உங்களுடன் எதிர்கவிபாட நாம் இப்போது தயாராக இல்லை.
thevi
“இவர்கள் எவருமே எம்மக்களைகளையும் மண்ணையும் கொஞ்சம் கூட நேசிக்கவில்லை என்று கூறிவிடமுடியாது. தலைமைகள் உட்பட”
தலைமைகள் தேசத்தை நேசித்தன என்பதை என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை. புலித்தலைமை ஒரு போதும் மக்களுக்காக போராடியது கிடையாது. அடுத்தடுத்து தாம் செய்த குற்றங்களை நியாயயப்படுத்த தொடர்ந்து குற்றங்களை செய்தார்களே ஒழிய இனத்தைப் பற்றி கவலைப்படவில்லை. புலித் தலைமை வல்வெட்டித்துறை கள்ளக்கட்த்தலின் பாரம்பரியமே அன்றிஅரசியல் உணர்மை கொண்ட இயக்கம் இல்லை. புலித் தலைமையும் அடிமட்ட போராளிகளும் தனிதனித் தனியே பார்க்கப்பட வேண்டியவை.
அடிமட்டப்போரளியின் உடல்கூட உரிகைகோராது அநாதையாயினது என்ற ஆதங்கம்தான்”
இது உண்மைதான். சந்தர்ப்பவாத தலைமைகளின் பின் சென்றால் இப்படி அநாதைகளாவதுதான் நடக்கும்!
palli
உன்மையில் குலன் கட்டுரை பல்லியின் கண்ணில் நீரை வரவழைத்து விட்டது. ஆனாலும் நாம் மனதுக்குள்தான் பிராத்திக்க முடியும். காரணம் எம்மை பார்க்கும் புலி என புகழ்ந்தவர்கள் (புண்ணாக்குகள்) இப்போது உங்களுக்கு மகிழ்ச்சிதானே என கேக்கும் போது எமக்கே நாம் தமிழரா என ஒரு நிமிடம் சந்தேகம் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு அவர்களுக்கு எம்மீது அன்பு. ஆனால் இப்போதாவது இந்த புலம் பெயர் புலி வியாபாரிகளை மக்கள் இனம் காண்பார்களா? நாம் பல தடவை அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து விட்டோம் இப்போதும் அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.
தமிழ் போராளி
பல்லியின் கருத்துடன் உடன்படுவதோடு நானும் அனைவர்க்குமாக பிரார்த்திக்கிறேன்.
thevi
“எம் குமாரத்திகளுக்கெல்லாம்
தகப்பன்போல் இருந்தாயே
எம் குமாரத்திகளுக்கெல்லாம்
தகப்பன்போல் இருந்தாயே”
ஜெயக்குமார் யோசித்து எழுதுங்கள். பொதுமக்களிடம் தருமஅடி வாங்கப் போகின்றீர்கள்.
S.Jejakumar
அன்புடன் பல்லிக்கு எழுதுவது
சில மாதங்களுக்கு முன் த.யெயபாலனுடைய மனையின் சகோதரியும் அவரது குழந்தைகளும் வன்னியில் மரணமடைந்த செய்தியினை தேசம் நெற் ஊடாக அறிந்து அந்த முகமறியாச் சகோதரர்களுக்காகக் கண்ணீர் வடித்தேன்.1986 ல் ரெலோத் தோழர்களுக்கு புலிகள் செய்த மிகுந்த அக்கிரமங்களால் புலிகளின் நெருங்கிய தொடர்புகளை விட்டு விலகி இன்று வரையும் அவர்களோடு எந்த விதத் தொடர்புகளுமில்லாமல் இருந்து வருகின்றேன்.எல்லோருடைய வலிகளையும் அறீந்திருக்கின்றேன். இள வயதில் அன்னை இந்திரா காந்திக்கு இரங்கல் பாடிய நான் தலைவனுக்காகப் புலம்பல் பாடுவது ஆகாததா?அது ஆதங்கம். உள்ளுணர்வு. பிடரி மயிர் தெறிக்க என்று அந்நிய இராணுவங்களை குறிக்க மாத்திரமே எழுதினேன்.
rohan
யோசித்துப் பேச வேண்டியவர் நீங்கள் தான் தேவி.
எங்கள் குமாரத்திகளை குமரித் தாய்களாக்க முற்பட்ட இந்திய இராணுவம் அதே குமாரத்திகளிடம் அடி வாங்கும் அளவுக்கு கொண்டு வந்தவன் யார்? வீட்டுக்குள்ளேயே நடந்து பின் கதவு மூடப் பயந்த குமாரத்திகள் பின்னாளில் காட்டையே ஆண்டார்கள். தனது குமாரத்தியை நையாண்டி செய்த குமரன்களைக் கண்டிக்கப் பயந்த் தகப்பனகளின் காலம் போய் வாலாட்டும் குமாரன்களுக்கு வால் அறுக்க குமாரத்திகளுக்குள் வல்லமை வளர்த்தவன் அவன்.
BC
S.JeyaKumarன் கவிதையை சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
palli
ஜெயகுமார் சில வரிகள்தான் வலித்தன. கவிதையல்ல. அதைதான் நான் எழுதினேன். தவறாயின் வருந்துகிறேன்.
S.Jejakumar
குலனுடைய மிகைப்படுத்தப்படாத அம்பு போன்ற கட்டுரை என்னையும் குத்தியது. மீண்டும் இன்று என்னைக் கண்ணீர் சிந்த வைத்துவிட்டது. அதனால்த்தான் எனது மூத்த சகோதரனுக்காகச் சோகத்தில் புலம்பினேன்.
S.Jejakumar
rohan on May 25, 2009 12:07 pm
யோசித்துப் பேச வேண்டியவர் நீங்கள் தான் தேவி.
எங்கள் குமாரத்திகளை குமரித் தாய்களாக்க முற்பட்ட…..
Note: thanks a lot to rohan.
S.Jejakumar
thevi
“எங்கள் குமாரத்திகளை குமரித் தாய்களாக்க முற்பட்ட இந்திய இராணுவம் அதே குமாரத்திகளிடம் அடி வாங்கும் அளவுக்கு கொண்டு வந்தவன் யார்? வீட்டுக்குள்ளேயே நடந்து பின் கதவு மூடப் பயந்த குமாரத்திகள் பின்னாளில் காட்டையே ஆண்டார்கள். தனது குமாரத்தியை நையாண்டி செய்த குமரன்களைக் கண்டிக்கப் பயந்த் தகப்பனகளின் காலம் போய் வாலாட்டும் குமாரன்களுக்கு வால் அறுக்க குமாரத்திகளுக்குள் வல்லமை வளர்த்தவன் அவன்..”
எங்கள் குமாரத்திகளை கற்பவதிகளாக்கியே குண்டோடு அனுப்பியவனா தகப்பன்? தாயின் மடியிலிருந்து விலக முன்னம் தனது அர்த்தமில்லாத யுத்தத்திற்கு இரக்கமே இல்லாமல் அரைகுறைப் பயிற்சியோடு துரத்தி விட்டவனா தகப்பன்? அக்கா பய்ந்தால் தங்கையை விடு தங்கை பயந்தால் அக்காவை விடு என இழுத்துச் சென்றவன் தகப்பனாக முடியுமா? இன்றைக்கு முகாம்களில் பதின்மவயதுகள் முடிவதற்கு முன்னமே கையில் குழந்தையுடன் புருசனையும் இழந்து நிர்க்கதியாக வைத்தவன் எப்படி தகப்பனாக முடியும். உலகின் நான்காம் இராணுவத்தை வென்றதாக பிதற்றியவர்கள் இலங்கையின் இராணுவத்தால் துடைத்தெறியப்பட்ட நிலையிலும் உங்கள் வீம்பிற்கு குறைவில்லை. காட்டை பெண்கள் ஆண்டார்களா? ஆனானப்பட்ட உங்கள் தலைவரையே காணவில்லை. எவ்வளவு காலம் தான் இன்னமும் ஏமாற்றுவீர்? நையாண்டி செய்த குமரன்களைக் கண்டிக்கப் பயந்த் தகப்பனகளின் நிலைமை உங்கள் தலைவனால் ஊக்குவிக்கப்படடதால் வந்த வினை. வல்வெட்டித்துறையில் சேட்டை விட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் நேற்று வெளியானதை படிக்கவில்லையா?
santhanam
பல்லி உயிரா அல்லது மரணமா என்ற இழுபறிக்கு உம்மால் தீர்வு காணமுடியும் இல்லையேல் தமிழன் வாழ்ந்த இடமாக தமிழர் பிரதேசம் இருக்காது.
thurai
புலிகளின் பெயரால் குற்ரங்கள் புரிந்தவர்கள் யாவரும் தலவரை வணங்கத் தவறவில்லை. இப்படியான் துரோகிகள் உலகமெங்கும் புலியின் பெயரால் வாழ்கின்றனர் என்பதை தெரிந்தோ தெரியாமலோ அனுமதிக்க வேண்டிய நிலமையிலேயே 30 வருடங்களாக தலைவர் வாழ்ந்துள்ளார்.
தலவ்ரின் மறைவால் புலிகழுடன் இருந்த துரோகிகளே உலகில் அதிகமாக சந்தோசமடைகின்றன்ர்.
துரை
பார்த்திபன்
thevi
தேவி தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை என்றும் எழுப்ப முடியாது. சிலருக்கு உண்மைகள் என்றும் செவிடன் காதில் ஊதும் சங்கு தான்.
kanapathi
ஜெகன் – ரெலி
ஒபரேதேவன் – ரெலா
ஞானவேல் – தமிழீழநாகப்படை
சிறீ சபாரத்தினம்– ரெலோ
விஸ்வானந்ததேவா – என்.எல்.எவ்.ரி
தங்கச்சிமடம் மைக்கல் – ஈரோஸ்
உமாமகேஸ்வரன் – புளொட்
அமர்தலிங்கம் – நீலன் திருச்செல்வம் – யோகேஸ்வரன் – ரி.யூ.எல்.எவ்.
யோகேஸ்வரன் – ரி.யூ.எல்.எவ்.
பத்மநாபா – யோகசங்கரி – கிருபாகரன் – சாம் தம்பிமுத்து – சுபத்திரன் – ஈ.பி.ஆர்.எல்.எவ்.
விமலேஸ்வரன் – விஜிதரன் – யாழ்; பல்கலைக்கழக மாணவர் தலைவர்
மாத்தையா – புலிகள்
ரவிராஜ் – ரி.என்.ஏ …………………….. இன்னும் பல புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களே உங்களுக்கு எங்கள் இதய அஞ்சலிகள்
Kulan
நான் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்றோ அன்றி சர்ச்சைகளை உருவாக்க வேண்டும் என்றோ இக்கட்டுரையை எழுதவில்லை. நான் என்றும் புலிகளை எதிர்த்து மிகமோசமாக விமர்சித்தவன் வேறு வேறு பெயர்களில். புலிப்பக்தர்களுக்கு என்னுடன் கதைக்கவே பிடிக்காது. நானும் ஈழவிடுதலையில் ஆரம்பகால உறுப்பினன் என்பதை அடக்கமாகச் சொல்கிறேன். புலிகள் செய்த இனத்துரோகம் கொடுமைகள் தேவி போன்றவர்களின் மனங்களில் ஆறாத வடுவாக உள்ளன.
தேவி! இக்கட்டுரையில் பிரபாகரனுக்கு மட்டுமல்ல எல்லா என் மொழியை தன்வாயில் உச்சரித்த என்தேசத்து மறைந்த மக்களுக்குமே அஞ்சலி வேண்டினேன். எவன் எப்படியாயினும் என்மொழி பேசியவன் நாமிருக்கும் போதே அநாதையாய் போனார்களே என்ற ஆத்திரமும் ஆதங்கமுமே என்கட்டுரையை எழுதத்தூண்டியது மட்டுமல்ல இதன் பின்புதான் நித்திரையே வந்தது. என்மனச்சாட்சியின் தண்டனையையே வார்த்தைகளால் இங்கு கட்டுரையாகக் கொட்டினேன். தயவு செய்து யான் யாரையும் காயப்படுத்தும் நோக்கில் எழுதவில்லை.
பல்லி எழுதிய /உன்மையில் குலன் கட்டுரை பல்லியின் கண்ணில் நீரை வரவழைத்து விட்டது/. யெயக்குமார் போன்றோர் எழுதிய /குலனுடைய மிகைப்படுத்தப்படாத அம்பு போன்ற கட்டுரை என்னையும் குத்தியது. மீண்டும் இன்று என்னைக் கண்ணீர் சிந்த வைத்துவிட்டது/ இந்தவரிகளைப் பார்த்து நானும் கலங்கிப்போனேன். ஈரம் என்னினத்தில் இதயத்தில் இன்றும் உயிரோடு இருக்கிறது என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை. உங்கள் பின்னோட்டங்கள் தொடரட்டும்.
வெள்ளைவாகனன்
வடமராட்சியில் வைத்து அரச படைகளினால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் பிரபாகரனின் உயிரை காத்த ராஜீவ் காந்திக்கு கிடைத்த பரிசுதான் அவரின் மீதான தற்கொலை தாக்குதல். இந்திய இராணுவத்திடமிருந்து காப்பாற்றிய பிரேமதாசவுக்கு பிரபாகரன் கொடுத்த பரிசுதான் அவரின் மீதான தற்கொலை தாக்குதல். கிட்டு எங்களுக்குள் இருக்கும் பிரசனைகளை நாம் பேசி தீர்போம் என ரெலோ தலைவர் ஸ்ரீ சபாரட்ணம் கோண்டாவில் குமரகோட்டத்தில் உள்ள குடிசை ஒன்றிற்கு வெளியே வைத்து உயிர் தஞ்சம் கோரிய போது புலிகள் செய்த கொலை எவ் வகையானது?
மட்டக்களப்பில் புளொட் இயக்கத்துடன் சமாதான பேசுவதாக சென்று பேசி விட்டு மறுநாள் தமது அலுவலகத்திற்கு விருந்திற்கு வருமாறு அழைத்து விட்டு வீதியில் மறைந்திருந்து அந்த இயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளர் வாசுதேவா, இராணுவ துறை பொறுப்பாளர் கண்ணன் உட்பட 12 இற்கு மேற்பட்ட உயர்மட்ட தலைவர் கொல்லப்பட்டது, எவ் வகையான கொலை? பேச வாருங்கள் என புளொட்டின் தளப்பொறுப்பாளர் மெண்டிசை அழைத்து சென்று அவரை அடித்து கொன்றமையினை எவ் வகையான கொலையென அழைப்பது? புலிகளை ஆதரித்து வளர்த்து விட்ட அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்றவர்களுடன் அமைதியான முறையில் பேசுவதாக கூறி மங்கையற்கரசி கொடுத்த தேனீரை அருந்தி கோரத்தனமாக கொலை செய்தமையினை எப்படி அழைப்பது?
ஆண்டவனை வணங்கி கொண்டு இருக்கையில், விளக்கினை அணைத்து விட்டு ஆண்டவனின் ஸ்தலத்திலேயே வைத்து நூற்றுக்கணக்கான முஸ்லீம் மக்களை கொன்றொழித்தமையினை எவ்வாறு அழைப்பது?. வவுனியாவில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு காணிகளை வழங்கி குடியமர்த்திய பாரூக்கை கடத்தி சென்று அவர் விரும்பி சென்றதாக தெரிவித்து அவரின் படங்களை பிரசுரித்து விட்டு சுட்டு கொன்றமையினை எப்படி அழைப்பது? புலிகளின் தலைவர் எவ்வாறு ஏனைய அமைப்புக்களின் தலைவர்களை உறுப்பினர்களையும் நம்ப வைத்து நயவஞ்சகமாக கொன்றொழித்தாரோ அதே பாணியில் அவரின் கதையும் முடிக்கப்பட்டு விட்டது.-வெள்ளைக்கொடி வெள்ளைவாகனன்
santhanam
(இதை நான் பல்லியிடம் விட்டுவிடுகிறேன் ) வதந்திகளை நம்ப வேண்டாம் பொறுமைகாக்கவும் இதன் நிதர்சனம் என்ன ஒட்டு மொத்த தமிழ் இனமும் இப்பவும் மந்தைகளா அல்லது பிறேமதாசா விலிருந்து ராயபக்சே வரை எங்கள் இனத்தை விலைபேசி அழிக்கபட்டதா?? எதையும் கற்பனைகளாகவும் புனைகதையாகவும் திரிபுபடுத்தபட்ட கொலைகள் தான் தமிழ்இனத்தில் அதிகம். தேசத்தில் எழுதுவதைவிட உங்கள் மனச்சாட்சிகளை திறவுங்கள் அப்ப ஆவது எமது தமிழ் இனம் தலைநிமிரும்.
Kulan
சந்தானம்! நீங்கள் சொல்வது போல் ஆம் போதும் கொலைகள் வெறியாட்டங்கள்; மரணதண்டனைகள். எம்தலையில் இருந்து உதிர்ந்து விடும் ஒரு மயிரையே உருவாக்க முடியாத மனிதனால் எப்படி கொலைசெய்ய முடியும். வெள்ளைவானன் கூறியதில் உண்மைகள் இருந்தாலும் இவற்றை வைத்து தொடர்ந்து பகைபாராட்டி தொடர்ந்து தொகை தொகையாய் கொல்லப்போகிறீர்களா? கொலைகளை நிறுத்தமாட்டீர்களா? அவன் நிறுத்தட்டும் நாங்கள் நிறுத்துகிறோம் என்கிறீர்களா? நண்பர்களே! எல்லாவற்றுக்கும் ஒரு மாற்றுவழி உண்டு. ஒரு மெல்லிய தாளுக்கே இரண்டு பக்கம் 4 கரையும் உண்டு. தண்டிக்கும் உரிமைய இயற்கை யார் கையிலும் தரவில்லை. இயற்கை இயல்பானது அது பார்த்துக்கொள்ளும். உங்கள் மனச்சாட்சிக்கு மட்டும் மரணதண்டனை கொடாது பார்த்துக் கொள்ளுங்கள்
Hg
“ஒரு மெல்லிய தாளுக்கே இரண்டு பக்கம் 4 கரையும் உண்டு. தண்டிக்கும் உரிமைய இயற்கை யார் கையிலும் தரவில்லை. இயற்கை இயல்பானது அது பார்த்துக்கொள்ளும். உங்கள் மனச்சாட்சிக்கு மட்டும் மரணதண்டனை கொடாது பார்த்துக் கொள்ளுங்கள்” Thanks Kulan!
In this time i want to remember my friend புலிகளால் படுகொலை செய்யப்பட்ட KARAMPON ANTON . Rest in peace my fridend. and all my people who is no more….
Nanpi
குலன் உங்கள் கருத்தே என் கருத்தும். நமது இலக்கு ஒன்று பாதைகள்தான் வேறாயின. நீண்ட தூரப்பயணத்தில் இலக்கும் வேறாகியது. நமது பாதையைச் சிலர் திசை திருப்பினார்கள். திசைதிருப்பிய புண்ணியத்தில் நம் அன்னைபூமிக்கும் பங்குண்டு. நாம் சிறு துரும்புகள். இப்புயலில் அகப்பட்டு அங்குமிங்கும் அல்லாடி புகலிடத்தில் நாம் தத்தளிக்க பிறந்த பூமியிலேயே அகதியாய்ப் போய் தத்தளிக்கும் எம் உடன்பிறப்புகளுக்கு ஏதாவது நன்மை செய்ய இனிமேலாவது நாம் முயலக் கூடாதா? சுயபுகழுக்காக மட்டும் பேசுபவர்களை நாம் ஒரு புறத்தில் வைத்து விடுவோமே. இவர்கள் அவர்களது புத்திக்கெட்டியது போல் எதையாவது பிதற்றட்டுமே. புலி எதிர்ப்பாளர்கள் பாதிக்கப்பட்டதால் அப்படிப் பேசுகின்றார்கள். எல்லாப் பிழைகளையும் தலைமை நேரில் கண்காணிக்க முடியாது. இதே பிழைகளை மாற்று இயக்க உறுப்பினர்களும் செய்தார்கள். இதனால் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்டுத் துன்பப்படுபவர்கள் பொது மக்கள். எல்லாப் பாவமும் பழியும் தலைமை தாங்குபவரின் தலையில் இடியாய் இறங்கும். இதுவே புலிக்கும் நடந்தது. மற்ற இயக்கத் தலைவர்களுக்கு நடக்கும் போதும் மக்கள் இதனாலேயே பாராமுகமாய் இருந்தார்கள். இது சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனுக்கும் தெளிவாகத் தெரிந்த உண்மை.
இப்போ தாயகத்தில் என்ன நடக்கின்றது? யாருமே விமர்சிக்கக் கூடப் பயந்து மெளனித்திருப்பதாக தொலைபேசிக் கலந்துரையாடல்கள் கூறகின்றன. இதுவா நாம் எதிர்பார்த்த விடிவு? முடிவு விடிவு அருகிலில்லை. நமக்காக யாரும் போராடப் போவதுமில்லை. பரிந்து பேசப்போவதுமில்லை. போராட வந்தவன் போராடத் துணிந்தவன் போராடியவன் இப்படி ஒவ்வொருவராய்த் தொலைத்து விட்டோம். தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். புரியாத வயதில் ஏதோ ஓர் உணர்வில் சென்றவர்களை மீட்பது நமது கடமையில்லையா? அவர்களை மீட்டெடுத்து புதிய வழியில் செல்ல வழி தேட முயல்வோமே.
thevi
“தொடர்ந்து பகைபாராட்டி தொடர்ந்து தொகை தொகையாய் கொல்லப்போகிறீர்களா? கொலைகளை நிறுத்தமாட்டீர்களா”
இங்கே யாரும் யாரையும் கொலை செய்யுமாறு நினைக்கவும் இல்லை. கொலைகளுக்கு ஊக்குவிக்கவும் இல்லை. நடந்த அநியாயங்களை ஒரு போதும் மக்கள் மறக்காதிருக்கும்படி அவை ஞாபகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.
palli
சந்தானம் தங்களுடன் வாதிக்க நான் இப்போது வரவில்லை; ஆனால் நேரம் வரும்போது அதுபற்றி விவாதிப்போம்; உயிரா? மரணமா? இதுக்கு பல்லியின் பின்னோட்டங்களை பார்க்கவும்; பல்லி எவரது மரணத்தையும் ஆதரிக்கவும் மாட்டேன்; அதில் மகிழ்ச்சி அடையவும் மாட்டேன்; கொலையென பார்த்தால் எந்த அமைப்பும் குறைந்தவர்கள் அல்ல;ஆனால் சிலரது கொலையை மக்களும் முட்டாள்தனமாக ஆதரிக்கின்றனர்; சிலரது கொலையை எதிர்க்கின்றனர்; ஆக கொலையில் கூட தரம் பார்க்குது தமிழ் இனம்; சந்தானம் பல்லி இங்கே பிரபாவுக்கு வாதாட வரவில்லை; அந்த மக்களுக்காக வாதாடுகிறேன்; புலிசெய்த கொடூரத்தை நான் மூடி மறைக்கவில்லை; பழிக்கு பழியாக எனிநடக்கபோகும் அலங்கோலங்களை எண்ணி கவலை கொள்கிறேன்; பிரபாகரன் இருக்கிறாரா இல்லயா என்பதை விட மக்கள் இருப்பார்களா இல்லயா என்பது தான் என் கேள்வி;
Kulan
நாம் மனச்சாட்சி உள்ளவர்களாக இருந்தால் மட்டும் போதாது. தூரநோக்குடையவர்களாக இருப்பதும் முக்கியம். தூரநோக்கு இருந்திருந்தால் எம்மினம் இன்நிலைக்கு வந்திருக்காது.இன்று அகதிகள் முகாங்களின் தம்விருப்பப்படியே குழந்தை குட்டிகள் என்றும் பார்க்காமல் குட்டிப்புலியாக்கி பிடித்துப் பிரிக்கிறார்கள். தன்னினம் என்றும் பார்க்காமல் களனிகங்கையில் வெட்டியெறிந்தவர்கள் எம்பிள்ளைகளை சும்மாவா விடுவார்கள். புலிகளுடன் கதைத்தவனும் புலியெனப்பிடிக்கப்பட்டுள்ளான். இவர்களின் கணக்கில் 7200 என்கிறார்கள் ஊரிலிருந்து வரும் செய்திகள் 15000 க்கு மேல் என்கிறார்கள். 7200க்கு அதிகமாக உள்ளவர்களின் நிலை என்ன? சிங்களப்பகுதிக்கே கொண்டு போகப்பட்டுள்ளார்கள். இவர்களைக் கொல்வதற்காகவே ஒரு கலவரம் உருவாக்கப்படலாம். இதற்கு நாம் உடன் என்ன செய்யலாம் என்று யோசியுங்கள் முடிந்தால் எமக்கும் சொல்லுங்கள் எங்களாலானதை செய்கிறோம்.
கிடைக்க விருக்கும் நிவாரணங்களை சரியானவர்களுக்குப் போய் சோர்வது முக்கியமானது. போர் செலவு அதிகமாக இருப்பதால் அகதிகளின் நிவாரண நிதி இராணுவச் செலவுகளை ஈடுசெய்யப் போய்விடும். அரசியல் நிலையைப்பற்றி நினைக்கும் நிலையில் அங்கு வன்னிமக்கள் இல்லை. அரசியல் பற்றிக் கேட்டால் ஆளைவிடு எல்லாம் சூனியம் என்றே சொல்வார்கள். கொடிபிடிப்பதும் கோசம் போடுவதுடன் எல்லாம் முடிந்து விடாது. எதிரி என்மினத்தைத் திட்டமிட்டே அழிக்கிறான் என்பது எமக்குத் தெரியும். இதை சரியான முறையில் திட்டமிட்டு நிதானமாக சரியானவர்களை அணுகி அரசின் பரப்புரைகளையும் வெளிநாட்டுவரை குடி கூத்தி கொடுத்து மடக்கி தம்காரியத்தைச் சாதிக்க நினைக்கும் அரசுக்கு உடன்போகா வகையில் எமது ஆக்கபூர்வமான செயல்திட்டங்கள் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டியுள்ளது. இதில் ஊடகங்களின் பங்கும் முக்கியமாகிறது.