பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்கு 50 கோடி ரூபா மருத்துவ உதவி

medicine.jpgஇலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 50 கோடி ரூபா மதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை அமெரிக்காவின் “டிரக்ட் ரிலீப் இன்டர்நேஷனல்’ தன்னார்வ அமைப்பின் மூலம் அனுப்ப ஸ்ரீ நாராயணி பீடம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்ரீசக்தி அம்மா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;

“ஸ்ரீநாராயணி பீடத்தின் சார்பில் ஆன்மிகப் பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பீடத்துக்கு உலக நாடுகள் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். அவர்கள் இந்த பணிகளுக்கு உதவி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து டிரக்ட் ரிலீப் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச திட்ட அமைப்பாளர் மேட் மெக்காலா பீடத்துக்கு தரிசனத்துக்காக வந்தார்.

பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யும் பணியை இந்த சேவை நிறுவனம் செய்து வருகிறது.  அவரிடம் இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவ உதவி செய்யக்கோரினோம். அவர் முறைப்படி அந்த நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பக்கோரிக்கேட்டுக் கொண்டார்.  அதன்படி நாங்கள் கடிதம் அனுப்பியதும் உடனடியாக ஒரு இலட்சம் பேருக்கான அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

சுமார் 50 கோடி ரூபா மதிப்பிலான இந்த மருந்துகளை இலங்கையில் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்ய இலங்கையில் உள்ள சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மகிபாலஹேரத், சமுதாய மேம்பாட்டு கட்டுமானத்துறை பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் ஆகியோரிடம் கேட்டுக் கொண்டோம்.

இதில் முத்துசிவலிங்கம் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் பேசி ஒப்புதல் பெற்றுள்ளார். இதற்கான முறையான நடைமுறை உத்தரவுகள் கிடைத்ததும் முதல் கட்டமாக 25 ஆயிரம் பேருக்கான மருந்துகள் அமெரிக்காவிலிருந்து நேரடியாக விமானத்தின் மூலம் இலங்கைக்கு அனுப்பப்படும். 75 ஆயிரம் பேருக்கான மருந்துகள் கப்பல் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை நேரடியாக ஒப்படைக்க நாம் இலங்கைக்கு செல்ல உள்ளோம். இலங்கை அரசு அனுமதி கிடைத்த ஓரிரு நாட்களில் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் ஆசியும் வழங்கி திரும்புவோம்.

கொடுக்கப்படும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சையளிக்க டாக்டர்கள் தேவை என்று இலங்கை அரசு கேட்டுக் கொண்டால், ஸ்ரீநாராயணி மருத்துவ ஆராய்ச்சி மையம் மூலம் தேவையான டாக்டர்களை அனுப்பி வைக்கவும் தயாராக உள்ளோம். உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு சில அடிப்படை விதிகள் உள்ளன. அதனடிப்படையில் உதவக்கூடிய பல அமைப்புகளை தொடர்பு கொண்டு உதவ நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ உதவி முதலில் அந்த மக்களுக்கு கிடைக்கட்டும், பின்னர் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அதனை செய்யலாம்’.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *