உள்ளூராட்சி சபைகள் திருத்த சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் அது தொடர்பில் நாம் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில், அது வேறொரு உருவில் மீண்டும் கொண்டு வரப்படலாமென எச்சரித்துள்ள இ.தொ.கா. சிரேஷ்ட தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ஆர். யோகராஜன், இந்த சட்டமூலத்தை கடுமையாக எதிர்த்ததன் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் பாதுகாத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
உள்ளூர் அதிகார சபைகள் திருத்த சட்டமூலத்தின் மூலம் சிறுபான்மை இனங்களுக்கும் சிறிய கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் விளக்கும் முகமாக மு.கா. தலைமையகமான தாருஸ்ஸலாமில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த யோகராஜன் மேலும் கூறியதாவது;
“கிழக்கு மாகாண சபை, உள்ளூர் அதிகார சபைகள் திருத்த சட்டமூலத்தை எதிர்த்து இன்று முறியடித்திருக்கிறது. இம் மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க., ஜே.வி.பி. கட்சிகளுக்கு அரசாங்கத்தை விட 2 ஆசனங்கள் குறைவாக 17 ஆசனங்கள் இருக்கின்ற நிலையில் அரச தரப்பில் 2 பேர் இச்சட்டமூலத்தை எதிர்த்தால் அல்லது வாக்களிக்காமல் தவிர்த்துக்கொண்டால் சட்டமூலம் நிராகரிக்கப்பட்டதாகிவிடும். தானிருந்து வந்த அமைப்பைக் காட்டிக் கொடுத்து வந்தவர் என்று என்னால் விமர்சிக்கப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனை முழுமையாக எதிர்த்ததினால் தான் இது சாத்தியமாகியுள்ளது. அந்த வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தென்னிலங்கையில் வாழும் எல்லாச் சிறுபான்மை மக்களையும் காப்பாற்றி இருக்கிறார். அதற்கு அவரை நான் பாராட்டாதிருக்க முடியாது.