சர்ச்சைக்குரிய கருத்துகளை தவிர்க்கவும் ! தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவுறுத்தல் !
தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் உள்ளுராட்சிப் பிரிவுகளுக்கு கண்ணை மூடிக்கொண்டு நிதி வழங்குவோம் மற்றைய உள்ளுராட்சிப் பிரிவுகளுக்கு ஊழல் இல்லை என்பதை ஒன்றுக்கு பத்து தடவை பார்த்துத்தான் நிதி வழங்குவோம் என ஜனாதிபதி அநுர, தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தெரிவித்த கருத்து அரசியல் ரீதியாக சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது போன்ற கருத்துகளை வெளியிடுவதைத்
தவிர்க்குமாறு ஜனாதிபதிக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதியின் அறிக்கை உள்ளுராட்சித் தேர்தல் சட்டத்தின் பிரிவுகள் 92 சி (தவறான செல்வாக்கு) மற்றும் 82 டி
(அதிகபட்ச நன்மைக்கான வாக்குறுதிகள்) ஆகியவற்றின் தெளிவான மீறலாகும் என்று கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.