அனுர – தமிழர் தேன்நிலவு, ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாளையும் தாண்டி ஓகோ என்றுள்ளது ! ஜனாதிபதி அனுரா தமிழ் மக்களின் மனங்களோடு உறவாடுகிறார் !
ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்காவின் வடக்கு – கிழக்கு சுனாமிப் பயணம் மீண்டுமொரு அலையைக் கிளப்பியுள்ளது. அனுர ஜனாதிபதியாகி ஏழுமாதங்களான பின்னும் தமிழ் மக்களுக்கும் அனுராவுக்குமான தேன்நிலவு தொடர்கின்றது. ஏப்ரல் 17ம் திகதி வடக்கிற்கும் அதற்கு முன் கிழக்கிற்கும் பயணித்த ஜனாதிபதி மக்களின் எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தும் வகையில் தனது உரையை நிகழ்த்தினார்.
இராணுவ வசமிருந்த காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும், தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்படும், தமிழ் மக்களின் கடல்பரப்பு பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு உறுதியளித்தார். மக்களும் கைதட்டி ஆரவாரித்து தங்கள் அதரவை வழங்கினர்.
பாதுகாப்பு காரணத்துக்காக மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டு காணப்படுகின்றன எனவும் தற்போது யுத்தம் என்ற ஒன்று நம் நாட்டில் இல்லை எனினும் பாதுகாப்பு காரணத்தை முன்னிறுத்தி பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் தன் வசம் வைத்திருப்பதற்கு எவ்வித உரிமை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் தையிட்டி விகாரையும் ஒரு பெரிய பிரச்சினையில்லைஇ வடக்கில் இதனை வைத்து அரசியல் செய்யும் தமிழ் கட்சிகள் அதிலிருந்து விலத்த வேண்டும். தெற்கில் இதனை வைத்து அரசியல் செய்யும் சிங்களக் கட்சிகள் விலத்த வேண்டும். இப்பிரச்சினையை சாதாரணமாகத் தீர்த்துவிட முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
வடக்கில் மீனவர் பிரச்சினை தொடர்பில் நாங்கள் இந்தியப் பிரதமருடன் பேசியுள்ளோம். எமது எல்லைகளைப் பாதுகாக்கும்படி கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் இந்திய மீன்பிடிப் படகுகளின் வருகை கணிசமான அளவு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியான கைதுகுள் மற்றும் அபராதம் என்பன இலங்கைக் கடற்பரப்பினுள் நுழையும் இந்திய மீனவர்களுக்கு லாபத்தைத் தராது என்ற நிலையேற்பட்டுள்ளது.
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதி வழங்கி இருந்தார். தமிழ் – சிங்கள தேசியவாதத்தை முன்நிறுத்தும் கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாக இனவாதத்தை, மதவாதத்தை வளர்க்க முற்படுகின்றனர். ஆனால் தேசிய மக்கள் கட்சி அதற்கு அனுமதிக்காது என ஜனாதிபதி அனுர கண்டிப்புடன் தெரிவித்தார்.
மே 6இல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் இடம்பெற்ற பிரசாரத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
விடுவிக்க கூடிய அனைத்து காணிகளையும் நாம் விடுவிப்போம், அதில் சென்று மக்கள் வசிக்கலாம், அதில் விவசாயம் செய்யலாம், நாம் அந்த காணிகளை உங்களுக்கு மீண்டும் வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படும் என நினைத்து ஏனையவர்கள் காணிகளை தொடர்ந்தும் இராணுவ முகாம்களாக அவ்வாறே வைத்திருந்தனர் எனினும் நாம் அவ்வாறு செயல்படுவதில்லை. மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படும் என்ற எண்ணத்துடன் நாம் செயல்படவில்லை, மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாது என்றும் ஜனாதிபதி அனுரா உறுதியளித்தார்.