பாலின சமத்துவக்கல்வி பாலியல் குற்றங்களை குறைக்கும்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலை விடுதியில் வைத்து பெண் வைத்தியரை கத்தி முனையில் பாலியல் துன்புறுத்தல் செய்த சந்தேகநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்றும், அவர் பௌத்த தேரராகவும் இருந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் குறித்த பெண் வைத்தியரின் கைகளையும் கண்களையும் கட்டி, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த பெண் மருத்துவருக்கு நடந்த துஷ்பிரயோகத்தை கண்டித்து விரைந்து சட்ட நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி இலங்கையின் பல வைத்தியசாலை வைத்தியர்களும் நேற்றைய தினம் முழுமையான பணிப்புறக்கணிப்பு மற்றும் எதிர்ப்புப் ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேமாதிரியொரு சம்பவம் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளது. நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் ஊழியர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையில் துப்பரவு பணியில் ஈடுபட்டு வந்த 36 வயதுடைய வைத்திய சாலை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானப் பணிப்பெண்கள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புலம்பெயர் தமிழர் ஒருவரும் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாலியல் தொல்லை கொடுத்த நபர் யாழ்ப்பாணம் – நயினாதீவு பகுதியை சொந்த இடமாக கொண்ட ஸ்வீடன் நாட்டில் வசிக்கும் இரட்டை குடியுரிமை கொண்ட நபர் எனத் தெரியவந்துள்ளது.
இலங்கையில் அதிகரித்துள்ள பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சுரண்டல்கள் தொடர்பிலான சமூகத்தின் மனப்பாங்கு மாற்றமடைய வேண்டும்.
கல்வி கொள்கைகளை வகுப்பவர்கள் பாலின சமத்துவம், பாலியல் கல்வி மற்றும் மனிதாபிமான சிந்தனைகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.