தமிழர் பகுதிகளில் தமிழர்கள் அல்லது தமிழ்மொழி தெரிந்தவர்களை நியமிக்கப்படுவார்கள் !
தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியறிவுடைய அரச உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மக்களுக்கு அவர்களது தாய் மொழியில் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை கவலைக்குரியதாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அமைச்சர், கடந்த காலங்களில் கூட இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. எவ்வாறிருப்பினும் இது குறித்த புரிதல் எமக்கிருக்கிறது. எனவே தமிழ் மொழி பேசக்கூடிய மக்கள் வாழும் பிரதேசங்களில் முடிந்தவரை தமிழ் உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு அல்லது சிங்கள உத்தியோகத்தர்களுக்கு தமிழ் பயிற்றுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எமது முதலாவது 5 ஆண்டு ஆட்சி காலத்துக்குள் இதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். அரசாங்கம் என்ற ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அறிந்தவர்கள் என்ற ரீதியில் விரைவில் உரிய தீர்வினை வழங்குவோம் என்றார்.