வருடாந்தம் அழிக்கப்பட்ட இருநூறு மில்லியன் தேங்காய்கள் – தட்டுப்பாட்டுக்கான காரணத்தை வெளியிட்ட முன்னாள் விவசாய அமைச்சர் !
சடுதியாக தேங்காயின் விலை அதிகரித்துள்ள சூழலில் இதற்கான முழுமையான பொறுப்பும் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் திட்டமிடப்படாத பொருளாதார கொள்கைகளின் விளைவே என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், அண்மைக்காலமாக இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன் விலையும் உயர்வடைந்துள்ளமை குறித்து முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வருடாந்தம் 200 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் அழித்தமையே தேங்காய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது, இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டமாக, இலங்கையின் குரங்குகளை சீன மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று தடுத்து நிறுத்தி, மரத்தில் புடவை கட்டுதல், தாள்களை தொங்கவிடுதல், நிலத்தின் ஒரு பகுதியை மீண்டும் புல்வெளிக்கு விடுதல் போன்ற நடைமுறைக்கு மாறான தீர்வுகளை வழங்கியதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில் குரங்குகளை சீனாவுக்கு திருப்பி அனுப்ப இன்னும் வாய்ப்பு இருப்பதால், அந்த பிரேரணையை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.