மதுவரி அனுமதிப்பத்திரங்களை சட்டத்திற்கு முரணான வகையில் கையாள வேண்டாம் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு !
ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் பட்டியல் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
குறித்த காலப்பகுதியில் 361 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 172 பேர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அரசியல் லஞ்சமாக வழங்கப்பட்டவை எனவும் புதிதாக வேறு மதுபான சாலை அனுமதி வழங்குவதை நிறுத்திவைக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
இதேவேளை மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அதிகாரிகள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டத்திற்கு முரணான விடயங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டத்தை நடைமுறைபடுத்துவது அவசியம் எனவும் வலியுறுத்திய ஜனாதிபதி, உரிய நேரத்தில் வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களிடையில் நல்லபிப்பிராயம் கிடையாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான வகையில் அந்த நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.