இலங்கையைக் கையாள எங்களைப் பயன்படுத்துங்கள் – இந்தியாவிடம் கெஞ்சுகிறது தமிழ் தேசியம்!

இலங்கையைக் கையாள எங்களைப் பயன்படுத்துங்கள் – இந்தியாவிடம் கெஞ்சுகிறது தமிழ் தேசியம்!

1. இலங்கையைக் கையாள எங்களைப் பயன்படுத்துங்கள் – இந்தியாவிடம் கெஞ்சுகிறது தமிழ் தேசியம்: பிரித்தானியாவில் நன்கு அறியப்பட்ட மதிப்பிற்குரிய இராணுவ அரசியல் ஆய்வாளர் கலாநிதி அரூஸ் இலங்கையைக் கையாள்வதற்கு இந்தியா, தமிழர்களைக் கையாள வேண்டும் என்று கருத்துக்களை வெளியிட்டுள்ளதுடன் தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என இந்தியத் தூதுவர் காட்டிய சமிக்ஞ்சையை ஆகோ ஓகோ என்று புகழ்ந்துள்ளார்.

 

இலங்கையை பக்கத்தில் உள்ள பலசாலியை வைத்து மிரட்டலாம் என்ற தமிழ் தேசியவாதத்தின் மிகமட்டமான போர்மிலாவே கடந்த ஐந்து தசாப்தங்களாக நடைமுறையிலிருந்து வருகின்றது. இந்திய உளவுத்தறையான ரோவின் பாதுகாப்பில் உள்ள மு திருநாவுக்கரசு கோட்பாட்டின் கீழ் இயங்கும் றோ புலிகள் போலவே தற்போது கலாநிதி அரூஸ் தனது ஆய்வை மேற்கொண்டுள்ளார். அவர் இதற்கும் ஒருபடி மேலே போய் அத்தானி குழுமத்தின் ஊழலை நியாயப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் பிடியாணையை அத்தானியின், இந்தியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் திட்டமாகவும் கருதுகிறார். கொழும்பு துறைமுகக் கட்டுமானம், மன்னார் காற்றாலைக் கட்டுமானம் ஆகியவை இலங்கை மக்களின் நலனுக்கு விரோதமாக மோசடியாக செய்யப்பட்ட ஒப்பந்தம் என்பதை மறைக்கின்றார். இலங்கையைப் பழிவாங்குகின்றோம் என்ற போர்வையில் அத்தானி போன்ற பெரும் முதலைகளுக்கு இலங்கையில் உள்ள அனைத்து மக்களையும் பலியிடுவதை நியாயப்படுத்துவதாகவே இப்போக்குள் உள்ளது. இது கலாநிதி அரூஸின் ஆய்வு விசிலடிச்சான் குஞ்சுகளை திருப்திப்படுத்த மேற்கொள்ளும் ஆய்வாக உள்ளதாக சில இடதுசாரிச் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

 

2. அத்தானி குழுமத்தை – இந்தியாவை ஆட்டும் அமெரிக்கா: அத்தானியின் குஜராத் வீட்டிற்கு அமெரிக்காவின் Security Exchange Commission இலிருந்து பிடியாணைக்கான கட்டளை வந்து சேர்ந்துவிட்டது. அடுத்த 21 நாட்களுக்குள் நேரடியாக சமூகமளித்து அதானி தன் மீதான முறைப்பாடுகளுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

 

பிடியாணைக்கான கட்டளையை ஏற்க மறுத்தாலோ நேரடியாக சமூகமளிக்காவிடிலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதே அழைப்பாணை அத்தாயின் மருமகன் சாதர் அதானிக்கும் வந்துள்ளது. சாதர் அதானியின் கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக்கணினிகளை சோதனையிட்ட போதே இந்த லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

இந்த விவகாரம் ஆளும் மோடி அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. அதானி முறைகேடு விவகாரத்தால் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை என்பன செப்ரம்பர் 25 திகட்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

மேலும் இப்பிரச்சினையின் எதிரொலியாக அதானி கொடுத்த 100 கோடி நன்கொடையை தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந் ரெட்டி ஏற்க மறுத்து இரத்துச் செய்துள்ளார். தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் இளைஞர்களுக்கு தொழில்துறையில் திறண்சார் பயிற்சிகளை அளிக்கும் பல்கலைக்கழகத்திற்கே இந்த நன்கொடைக்கான காசோலை அத்தானியால் கடந்த மாதம் முதலமைச்சரை சந்தித்து நேரடியாக வழங்கப்பட்டிருந்தது.

 

அத்தானி முறைகோடு விவகாரத்தை எதிர்கட்சியான காங்கிரஸில் புதிதாக இடைத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்டு எம்பியாக வந்துள்ள பிரியங்கா காந்தியால் சிறப்பாக கையாளப்படும் எனவும் மோடி எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர்.

 

மறுபுறம் இது தொடர்ச்சியான இந்திய நிறுவனங்கள் மீதான தாக்குதல் எனவும். சம்பந்தப்பட்ட அத்தானி குழும இலஞ்ச முறைகேடு விவகாரத்தை உள்நாட்டிலேயே அதாவது இந்தியாவிலேயே விசாரிக்கலாம். இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பெரியண்ணர் சட்டம்பியார் விளையாட்டு எனவும் மேற்கின் மேலாதிக்கத்திற்கெதிரான கண்டனக்குரல்களும் எழாமல் இல்லை. ரஷ்யாவிடம் இருந்து பெற்றோலியத்தை குறைந்த விலைக்கு வாங்கி மேற்குலகிற்கு கூடிய விலைக்கு விற்று பணம் பார்க்கும் இந்தியாவுக்கு, பிரிக்ஸில் (BRICS) உள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா வைக்கும் ‘செக்’ இது எனவும் பார்க்கலாம்.

 

3. ஊசி அர்ச்சுனா ஊழல் அர்ச்சுனாவாக மாறுகிறாரா?: வடக்கு கிழக்கு மக்கள் கூட்டாக இணைந்து இனவாதமற்ற இலங்கை என்ற கருத்தியலில் தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பளித்துள்ளனர். மருத்துவ மாபியாக்களையும் – மருத்துவ சீர்கேடுகளையும் பகிரங்கப்படுத்திய ஊசி அர்ச்சுனாவையும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் ஊசி அர்ச்சுனா ஊழல் அர்ச்சுனாவாக மாறுகிறாரா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

 

தான் எதற்காக தெரிவு செய்யப்பட்டோம் என்பது பற்றிய அடிப்படை புரிதலே இல்லாமல், மேலும் மேலும் தன்னை ஓர் ஒப்புயர்வற்ற நபர் என கருதி செயற்பட்டு வரும் ஊசி அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வைத்து விடுதலை புலிகள், பிரபாகரன் என்றெல்லாம் பேஸ்புக் நேரலையில் பிரபலம் தேடுகின்றார். இந்த நிலையில் அவர் மீது சி.ஐ.டியில் வழக்குகள் பதிவாகியுள்ளன. வேறு வழியில்லாமல் பாராளுமன்ற சபாநாயகர் அசோக ரங்வல, ஊசி அர்ச்சுனாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட முடிவெடுத்துள்ளார். அவர் முன்வைத்த பிரிவினைவாத கருத்துக்கள் தொடர்பிலேயே அவர் கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகின்றது. அர்ச்சுனா தனது முகநூல் பிரபல்யத்திற்காக எதுவும் செய்வார் என்ற நிலையில் உள்ளார். தனது முகநூல் கணக்கில் உள்ள தொண்ணூறாயிரம் பின்தொடர்பவர்களுக்கு புதிதாக ஒரு கதையை ஊசி அர்ச்சுனா அடித்து விடப்போகிறார் என பலரும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். மக்களின் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்க சட்டவாக்க உறுப்பினர்கள் கூடும் இடத்தில் அரச்;சுனாவின் கோமாளிக்கூத்துக்கள் அவரின் பிரபல்யம் தேடலுக்காக மக்களுடைய வாழ்வியல் பிரச்சினைகளை பேசவிடாமல் செய்வதாகவே உள்ளது. பாராளுமன்றத்திற்குச் சென்ற அன்றே குழுப்பம் விளைவித்து எதிர்க்கட்சித் தலைவரின் கதிரையில் இருந்து, நேரலைக்குச் சென்று, வீரவசனங்களை விட்டவர், நேற்று பாராளுமன்றத்தில் தன்னுடைய செயலுக்காக மன்னிப்புக் கேட்டார். தேர்தலின் போதும் தேர்தலுக்குப் பின்னும் மருத்துவ மாபியாக்கள் தொடர்பில் அரச்சுனா எவ்வித ஆரோக்கியமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பது சாவகச்சேரி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

4. தமிழ் தேசிய அரசியலின் சிரோக்கள் ஹீரோக்களாக முடியுமா?: தமிழ் தேசியத்தின் சீரழிவுக்கு கட்சிகள் காரணமல்ல. இதன் சூத்திரதாரிகள் தங்களை கருத்துருவாக்கிகள் என்று அடையாளப்படுத்தும் சி. அ. யோதிலிங்கம், நிலாந்தன், நரசிங்கம் வவுனியா தமிழ் சிவில் சமூக அமையம், செல்வின் யாழ் சிவில் சமூக மையம் என்கிறார் இன்னுமொரு கருத்துருவாக்கியும் தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பை முன்னெடுத்தவர்களில் ஒருவருமான ஜதி ஜதீந்திரா.

 

உண்மையிலேயே ஊசி அர்ச்சுனா தமிழ்தேசிய ஆசன பலத்தை உடைத்துவிட்டார் என்கின்ற அவருடைய கருத்து ஒருபுறம் இருக்க நிலாந்தன் உள்ளிட்ட பத்தி எழுத்தாளர் குழுவினர் ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்தேசியத்துக்கான வாக்கெடுப்பு எனக் கூறி லைக்காவின் நிதி உதவியுடன் சங்கு அரியத்தாரை களமிறக்கி அடிவாங்கினர். அதன் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை மேலும் உடைத்து சங்கு சின்னத்தை பாராளுமன்ற தேர்தலிலும் களமிறக்கி தமிழர்கள் சார்ந்த ஆசன பலத்தை மேலும் உடைத்தவர்களும் இவர்கள் தான். இந்த நிலாந்தன் உள்ளிட்ட குழுவினர் இன்றுவரை ஜனாதிபதி பொதுவேட்பாளர் பற்றியோ…? அவருக்கான இரண்டு லட்சம் வாக்களுக்கான முடிவு தொடர்பிலோ..? அல்லது தோல்விக்கான விமர்சன ரீதியான கலந்துரையாடல்களையோ இன்று வரை செய்யவில்லை.

 

அனைத்து தமிழ்த்தரப்பையும் ஓர் புள்ளியில் இணைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வைக்க முன்வந்த பொதுக்கட்டமைப்பை நாசமாக்கியது பற்றியோ கிஞ்சித்தும் வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைகளில் மட்டும் பிறரை ‘மிஸ்டர் பீன்’ என நக்கலடித்து வரும் நிலாந்தன் உள்ளிட்ட குழுவினர்தான் உண்மையான பீன் என பலரும் விமர்சித்து வருகின்றனர். இதேவேளை நிலாந்தன் உள்ளிட்ட குழுவினர் ஹீரோக்கள் என பரப்புரை செய்துவந்த பார் லைசன்ஸ் புகழ் விக்கியரின் மான் சின்னம், சித்தார்த்தன் உள்ளிட்டோரின் சங்கு சின்னம் ஆகியவை தான் மிஸ்டர் பீன்களாகிப்போயுள்ள அதேவேளை நிலாந்தன் பீன் என கூறிய ஊசி அர்ச்சுனா பெற்ற இருபதாயிரம் வாக்குகளின் பக்கத்தில் கூட நிலாந்தன் குழுவினரின் ஹீரோக்களால் நெருங்க முடியவில்லை. சீனப் பழமொழியில் ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை’ என்கிறார் ஜதி ஜதீந்திரா.

 

5. மற்றுமொரு தமிழ்ப் பெண் பிரதி அமைச்சராக நியமனம்: புதிதாக நேற்றைய தினம் இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்களாக இரண்டு பெண்களை ஜனாதிபதி அனுர அரசு நியமித்துள்ளது. அதில் கிராம அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக மலர்மதி கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இலங்கை தமிழர்களின் தமிழ்தேசிய அரசியல் பரப்பிலும் சரி, வடக்கு கிழக்கு மாகாண நிர்வாக நடவடிக்கைகளிலும் சரி பெண்களுக்கு எப்போதுமே முன்னுரிமை இருந்தது கிடையாது. அது பற்றி இந்த ஆணாதிக்க சமூகத்தின் ஆர்வலர்கள் கவனம் செலுத்தியது கிடையாது. இப்படியான நிலையில் தேசிய இன நல்லிணக்கம், பால்நிலை சமத்துவம் என அனைத்திலுமே வடக்கின் அரசியல் கட்சிகளை விட தான் ஒரு படி முன்னிலையில் தான் நிற்கிறேன் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசு செயலிலும் காட்டி வருகின்றது. இந்த நிலையில் மாற்றமான ஓர் நல்லிணக்க அரசியலை முன்னெடுத்து வருகின்ற போதும் கூட, தேசிய மக்கள் சக்தியை ஓர் இனவாத அரசு என தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தொடர்ந்தும் குற்றச்சாட்டி வருகின்றனர். இது தமிழ் மக்கள் தங்கள் தேசியவாத அரசியலை நிராகரித்துவிட்டார்களே என்ற அச்சத்தின் – ஏக்கத்தின் வெளிப்பாடே தவிர வேறொன்றும் இல்லை என மூத்த அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம் தேசம் நெற்க்கு தெரிவித்தார்.

 

6. தமிழ் தேசியம் முஸ்லீம் அமைச்சர் இல்லையென முதலைக் கண்ணீர் விடத்தேவையில்லை: முஸ்லீம் தலைவர்கள் அமைச்சரவையில் இருந்த போதும் அவர்கள் முஸ்லீம்களின் நலனை முன்னெடுக்கவில்லை அதனால் அது தங்களுக்கொரு பிரச்சினையில்லையென முஸ்லீம்களில் பலர் கருதுகின்றனர். அதனால் தமிழ் தேசியவாத ஓநாய்கள் ஆடு நனைகிறது என அழ வேண்டிய தேவையில்லை என்கிறார் ஆய்வாளர் வி சிவலிங்கம்.

 

வேண்டாத மனைவி கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் என்பது போல நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் மண் கவ்விய தமிழ் தேசிய பரப்பில் உள்ள அரசியல்வாதிகள் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இல்லை இது ஓர் இனவாத அரசு என பேசுவது நாட்டை முன்னேற்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டை போடுவது போல ஓர் செயல் என மூத்த அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம் தேசம் நெற்க்கு மேலும் தெரிவித்தார்.

 

இதேநேரம் தேசிய மக்கள் சக்தி மீது முன்வைக்கப்பட்ட முஸ்லீம் அமைச்சர் ஒருவர் இல்லையே என்ற சமூக வலைத்தளவாசிகளின் கருத்துக்கு அக்குரணை பிரதேச முஸ்லிம் மக்களுடனான சந்திப்பில் அமைச்சர் விஜித ஹேரத் பதிலளித்துள்ளார். அங்கு பேசிய அவர், முஸ்லீம் அமைச்சர் ஒருவர் இல்லை என்று அதைப் பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள். தேவையான இடங்களில் தேவையானவர்களை நியமித்துள்ளோம். 2004இல் நான் அமைச்சரவை அமைச்சர். இஸ்லாமிய மகளிர் அணியும் ஹிஜாப்பிற்காக துணி வழங்க வேண்டுமென அமைச்சரவையில் யோசனை முன் வைத்தேன். அதை முஸ்லிம் அமைச்சர்கள் செய்யவில்லை, நான்தான் செய்தேன். மேலும் அம்பாறையில் இருந்து எங்களுக்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கூட வரவில்லை. ஆனால் ஆதம் பாவாவை தேசிய பட்டியலிலிருந்து நியமித்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.

 

7. யாழ் பாடசாலைகளின் வெளிநாட்டு ஓபிஏ OBA க்கள் ஊழலை ஊக்குவிக்கின்றன: யாழில் உள்ள முன்னணிப் பாடசாலைகளின் வெளிநாடுகளில் உள்ள மாணவர் சங்கங்கள் அனுப்புகின்ற நிதி பாரிய அளவில் ஊழலை வளர்த்துவிடுவதாக ஆளுநர் நா வேதநாயகம் குறிப்பிட்டது முற்றிலும் உண்மையென யாழ் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் ஓய்வுபெற்ற துணை அதிபர் நடராஜா பவன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

 

“யாழ் பாடசாலைகள் சில நேரடியாக வெளிநாடுகளிலிருந்து பழைய மாணவர் சங்கங்களுடாக நிதியைப் பெறுகிறார்கள். ஆனால் அவை எவ்வாறு செலவிடப்படுகின்றது என்ற பொறுப்புக் கூறல் எதுவும் அங்கில்லை” என்பதை லண்டன் ஹம்டன் உள்ளுராட்சி சபையில் பொறியியலாளராக இருந்து தற்போது யாழில் தனது சேவையை வழங்கிவரும் மயில்வாகனம் சூரியசேகரமும் உறுதிப்படுத்துகின்றார்.

இலங்கையிலேயே நிதிவளம் கூடி அதனை என்ன செய்வது என்று தெரியாது செலவு செய்யும் யாழ் இந்துக்கல்லூரி உட்பட்ட யாழ் முன்னணிப் பாடசாலைகள் சட்டவிரோதமாக அன்பளிப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் லட்சக் கணக்கிலும் அன்பளிப்புக் கோருகின்றனர். பாடசாலைகளில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுக்கும் மாணவர்களிடமோ ஆசிரியர்களிடமோ பணம் கோரக்கூடாது என ஆளுநர் நா வேதநாயகம் அங்கு அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டத்திலேயே இக்கருத்தை ஆளுநர் வெளியிட்டார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *