இரண்டு அமைச்சகங்களில் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இரண்டு புதிய அமைச்சு செயலாளர்களை நியமித்துள்ளார்.
அது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கிராம அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக திருமதி மலர்மதி கங்காதரன் என்கின்ற தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழர்களின் தமிழ்தேசிய அரசியல் பரப்பிலும் சரி – வடக்கு கிழக்கு மாகாண நிர்வாக நடவடிக்கைகளிலும் சரி பெண்களுக்கு எப்போதுமே முன்னுரிமை இருந்தது கிடையாது. அது பற்றி கிஞ்சித்தும் இந்த ஆணாதிக்க சமூகத்தின் ஆர்வலர்கள் கவனம் செலுத்தியது கிடையாது. இப்படியான நிலையில் தேசிய இன நல்லிணக்கம் – பால்நிலை சமத்துவம் என அனைத்திலுமே வடக்கின் அரசியல் கட்சிகளை விட தான் ஒரு படி முன்னிலையில் தான் நிற்கிறேன் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசு செயலிலும் காட்டி வருகின்றது. இந்த நிலையில் மாற்றமான ஓர் நல்லிணக்க அரசியலை முன்னெடுத்து வருகின்ற போதும் கூட தேசிய மக்கள் சக்தி ஓர் இனவாத அரசு என தொடர்ந்தும் தேசிய மக்கள் சக்தி மீது குற்றச்சாட்டுகளை தமிழ் அரசியல் பரப்பில் உள்ளவர்கள் அனைவரும் முன்வைப்பதானது அவர்களை மக்கள் நிராகரித்துவிட்டார்களே என்ற அச்சத்தின் – ஏக்கத்தின் வெளிப்பாடே தவிர வேறொன்றும் இல்லை என மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் தேசம் நெற்க்கு தெரிவித்தார்.