முல்லைத் தீவு பாதுகாப்பு வலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் சபையினால் பிடிக்கப்பட்ட அந்தரங்கச் செய்மதிப்படங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது குறித்து இலங்கை அரசாங்கம் கொழும்பிலுள்ள ஐ.நாவின் இலங்கைக்கான இணைப்பாளர் (பிரதி நிதி) நீல்புஹுனேயிடம் விளக்கம் கோரியுள்ளது.
மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க, கொழும்பிலுள்ள ஐ.நா. பிரதிநிதி நீல் புஹுனேயை நேற்று அவசரமாக அழைத்து, ஐக்கிய நாடுகளினால் மிகவும் அந்தரங்கமாகப் பேணப்பட வேண்டிய உணர்ச்சி பூர்வமான படங்களை ஊடகங்களுக்கு கசிய விட்டது எப்படியென்று உடனடியாக விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கேட்டார்.
அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹன்னாவும் கூட இருந்தார். இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அரசு அறிவித்த ஆட்சேபத்தை அறிவிப்பதாக நீல் புஹுனே அமைச்சரிடம் தெரிவித்தார்.