தனி நபர் ஒருவரை அழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்தம் ஒருபோதும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாதென தமிழர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. பிரபாகரனை பிடிப்பதனை மட்டுமே இலக்காகக் கொண்டு நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் பயனளிக்கப் போவதில்லை என அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தவிர்ந்த ஏனையோருக்கு பொது மன்னிப்பு வழங்க யோசனை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், இந்த யோசனைத் திட்டத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுப்புத் தெரிவித்து வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழர் பிரச்சினைகளுக்கு செவிமடுக்க கொழும்பு அரசாங்கங்கள் காட்டி வரும் தயக்கமே ஆயுதப் போராட்டத்திற்கு வழி கோலியதாக தமிழர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.