அதிகாலையில் திடீர் உண்ணாவிரதம்: தாக்குதல் நிறுத்துவதாக இலங்கை அறிவிப்பாம்?- உண்ணாவிரதத்தை பகலில் முடித்துக் கொண்டார் கருணாநிதி- ஏகாந்தி

27-karuna-fast.jpgஇலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் எற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.கருணாநிதி கால வரையறையற்ற உண்ணாநிலை போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளார்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இன்னொரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையினால் உயிர் நீத்ததாக வரலாறு என்னை பற்றி பேசட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ச் சகோதரர்களுக்காக தாம் இந்தத் தியாகத்தை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனவும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் உடனடியாக தாக்குதலை நிறுத்துவதாக மத்திய அரசிடம் அந்நாடு உறுதிமொழி தந்துள்ளதாம். இதையடுத்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முதல்வர் கருணாநிதி முடித்துக் கொண்டார் என இந்திய இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதியின் உண்ணாவிரதத்தையடுத்து இலங்கை அரசிடம் மிகக் கடுமையான பேச்சுவார்த்தையை மத்திய அரசு தொடங்கியதாகவும். போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என நெருக்குதல் தந்ததாகவும். இதையடுத்து இலங்கை பாதுகாப்பு கவுன்சில் கூடி விவாதம் நடத்தி, போரை உடனடியாக நிறுத்துவதாக மத்திய அரசுக்கு உறுதிமொழி தந்ததாகவும் இந்திய இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.

இத் தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொலைபேசி மூலம் முதல்வர் கருணாநிதியிடம் தந்ததையடுத்து தனது முதல்வர் உண்ணாவிரதத்தை நிறுத்துவதாக அறிவித்தார். முன்னதாக இலங்கையில் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் கோரி அண்ணா சமாதி அருகே இன்று காலை 5 மணிக்கு திடீர் உண்ணாவிரதம் தொடங்கினார்.

வழக்கம்போல் இன்று காலை 4.45 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் வழக்கமான யோகா பயிற்சிக்காக அண்ணா அறிவாலயம் செல்வதாக வீட்டினர் நினைத்திருக்க, காரை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு செலுத்துமாறு கருணாநிதி உத்தரவிட்டார்.

அங்கு சென்றதும் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு திடீரென ஒரு நிழற் குடையின் கீழ் தனது வீல் சேரிலேயே அமர்ந்து உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகளும் உதவியாளர்களும் முதல்வரின் வீட்டினருக்குத் தகவல் தரவே அவர்கள் விரைந்து வந்தனர். அவரது மருத்துவர் கோபாலும் விரைந்து வந்தார்.

டாக்டர்கள் கருணாநிதியின் உடல்நிலையை பரிசோதித்து காலையில் சாப்பிடும் மாத்திரையை சாப்பிடுமாறு கோரினர். ஆனால்,  கருணாநிதி அதை சாப்பிட மறுத்து விட்டார். இதையடுத்து மூத்த அமைச்சர்களுக்கு தகவல் தரப்பட்டு அவர்களும் ஓடி வந்தனர். உண்ணாவிரதம் இருக்க வசதியாக ஏற்பாடுகளை செய்தனர், பந்தல் அமைத்ததோடு, அருகில் கட்டிலும் போடப்பட்டது.

இதற்கிடையே முதல்வர் உண்ணாவிரதத்தை அறிந்து ஏராளமான திமுக தொண்டர்கள் அண்ணா நினைவிடம் முன் குவிந்தனர். இதையடுத்து தொண்டர்கள் அமர பந்தல் மற்றும் நாற்காலிகள் போடப்பட்டன. கருணாநிதியி்ன் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரும் உடன் அமர்ந்தனர்.

காலை 9.15 மணிக்கு இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் தலைமையிலான டாக்டர்கள் குழு கருணாநிதியின் உடல்நிலையை பரிசோதித்து அவரை படுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து படுத்தபடி அவர் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வந்தார்.

உண்ணாவிரதம் நடக்குமிடத்தில் மத்திய அமைச்சர் பாலு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் இருந்தனர்.

இந் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர் வாசன், முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், குமரி அனந்தன் உள்பட ஏராளமானோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் மத தலைவர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சிலர் உண்ணாவிரத்ததை கைவிடவும் கோரினர். ஆனால், அதை ஏற்க கருணாநிதி மறுத்துவிட்டார்.

உண்ணாவிரதம் இருந்து வரும் முதல்வர் கருணாநிதியை, நடிகர்கள் சத்யராஜ், ராதாரவி ஆகியோர் சந்தித்து, உடல் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதேபோல நடிகை விஜயகுமாரியும் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இந் நிலையில் போரை நிறுத்துவதாக மத்திய அரசிடம் இலங்கை உறுதி மொழி தந்துள்ளதாகவும், இனி ராணுவத்தை தாக்குதலுக்கு பயன்படுத்த மாட்டோம், மறுசீரமைப்புக்கும் மற்றும் மக்களை இடம் அமர்த்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் மத்திய அரசிடம் இலங்கை உறுதியளித்துள்ளதாக ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்தார்.இதையடுத்து பகல் 12.30 மணியளவி்ல் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக கருணாநிதி அறிவித்தார்.

உண்ணாவிரதம் உச்சகட்ட நாடகம்: வைகோ

முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதப் போராட்டம் உச்சகட்ட நாடகம் என்று மதிமுக ‌பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஊட்டி அருகே கூடலூரில் ‌செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் கருணாநிதி இதுவரை நடத்திய நாடகங்களில் இந்த உண்ணாவிரதம் தான் உச்சகட்ட நாடகம். கருணாநிதி அவரது குடும்பத்துக்காக காங்கிரசு‌டன் சேர்ந்து தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டார். போரை நிறுத்த வேண்டும் என இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஏதாவது உத்தரவு அனுப்பியதற்கான ஆதாரம் ஒன்றை காட்டினாலும், நான் தீவிர அரசியலில் இருந்து விலகி விடுகிறேன்.

கடந்த 5 ஆண்டு காலமாக இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி அளித்து வருகிறது. அதைத் தடுக்க கருணாநிதி என்ன செய்தார். இப்போது ஏன் இந்த திடீர் உண்ணாவிரதம்?.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழக மக்களை உலுக்கிப் போட்டுள்ளது. இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்தில் மிகப் பெரிய அடி விழும், படு தோல்வியைச் சந்திப்பார்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், திமுக அரசும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டனர், காக்கத் தவறி விட்டனர் என்ற உணர்வு தமிழக மக்கள் மனதில் விஸ்வரூபம் எடுத்து வியாபித்துள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கும்.

கடந்த ஆறு மாதங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் பெருத்த அமைதி காத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக 14 பேர் இதுவரை உயிர் நீத்தும் கூட அவர்களது மவுனம் கலையவில்லை.

சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்திற்கு எதிராக பிரசாரம் செய்த 50 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது என்றார் வைகோ.

கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென இராணுவத்திற்கு அரசு உத்தரவு

கனரக ஆயுதங்கள் மற்றும் விமானங்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.  மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக அயுதங்கள் பயன்படுத்தப்படின் பொதுமக்களிர்கு உயிர்ச்சேதங்கள் அதிகளவில் ஏற்படும் என்பதால் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்,” இராணுவ நடவடிக்கைகள் முடியும் தறுவாயில் உள்ளன. பொதுமக்களிற்கு உயிர் சேதங்கள் ஏற்படுத்தும் கனரக துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான் தாக்குதல் ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென எனது பாதுகாப்பு படையினரிற்கு அறிவுறுத்தியுல்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • ajeevan
    ajeevan

    யுத்த நிறுத்தம் பற்றிய செய்தி தவறானது. சிறீலங்கா அரசு, யுத்த சூன்ய பகுதிகளில் கனரக ஆயுதங்களை பாவிப்பது மற்றும் விமானத் தாக்குதல்களை நடத்துவது ஆகியவற்றை இடை நிறுத்தியுள்ளதாக பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

    யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு அரசு வந்துள்ளதான செய்தி குறித்து அவரிடம் கேட்ட போது, அப்படியான ஒரு தீர்மானத்துக்கு இன்னும் சிறீலங்கா அரசு வரவில்லை எனவும், யுத்த சூன்ய பகுதிகளில் விடுதலைப் புலிகளால் தடுத்து வைத்துள்ள மக்களை மீட்கும் பணி தொடர்வதாக உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

    சிறீலங்கா அரசு யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் NDTV தொலைக்காட்சிக்கு அளித்துள்ள தகவல் குறித்து சிறீலங்கா அரச பேச்சாளர் கெகெலிய ரபுக்வெலவிடம் கேட்டபோது, வாரம் தோறும் நடைபெறும் பாதுகாப்பு கவுன்சில் இன்று கூடியிருப்பதாகவும் யுத்தம் நிறுத்தம் பற்றி உத்தியோகபூர்வ முடிவொன்று சிறீலங்கா அரசு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

    இந்தியாவின் மத்திய அரசு, சிறீலங்காவும் விடுதலைப் புலிகளும் யுத்தம் நிறுத்மொன்றுக்கு வந்திருப்பதாகக் கூறி தமிழ்நாட்டின் முதலமைச்சர் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதத்தை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சிறீலங்கா அரச பேச்சாளர் கெகலிய ரபுக்வெல கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

    யுத்தம் தொடர்பாக இன்று (27) அரசு சற்று முன் வெளியிட்டுள்ள அறிவித்தல் ஒன்றில் பாதுகாப்பு படைகள் யுத்தத்தின் இறுதி அத்தியாயத்துக்கு வந்துள்ள வேளையில், மாயாஜால ஊடகங்கள் கனரக ஆயுத மோதல்களைத் தவிர்ப்பதாக தெரிவித்த தமது கருத்தை யுத்தநிறுத்தமாக திரித்து தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டிலுள்ள தொலைக் காட்சிகள் இன்று, சிறீலங்காவில் யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டுள்ளன.

    இன்று காலையில்´கியுமன் றைட்ஸ் அலர்ட்ஸ்´ எனும் நிறுவனம் இங்கிலாந்து, பிரான்ஸ், சுவீடன் ஆகிய நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க சிறீலங்கா யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.இச் செய்திகள் எதுவும் சிறீலங்கா அரசிலிருந்து அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. யுத்த நிறுத்தமொன்றுக்கான அழுத்தங்கள் வெளியேயிருந்து அதிகரித்த வண்ணமிருப்பதாக தெரிகிறது.

    Reply
  • செல்வன்
    செல்வன்

    தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், ‘’இலங்கையில் சிங்கள அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்லை. அங்கு தற்போது போர் தீவிரமாக நடந்து வருகிறது’’ என்று கூறியுள்ளார்

    இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்துவிட்டதாக சிதம்பரம் அறிவித்துள்ளது மிகைப்படுத்தப்பட்டுள்ள தகவல். இலங்கை அரசு முமுமையாக போரை நிறுத்திவிடவில்லை. அப்படி செய்யவும் மாட்டார்கள். தமிழர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதாக இலங்கை அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என்றுதான் கூறியிருக்கிறது. சிதம்பரம் இலங்கை அரசுக்கு வக்காளத்து வாங்கும் விதத்தில் பேச கூடாது. இலங்கை அரசின் அறிவிப்பை போர் நிறுத்தம் என மிகைப்படுத்தி சொல்லக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    “His Holiness Sri Sri Ravi Shankar had visited the Internally Displaced People (IDP) welfare centres in Vavuniya, Sri Lanka on April 21st, 2009.According to him, Sri Sri also asked: “How will the political drama and commotion happening in the State [Tamil Nadu] help the refugees in any case? Fasting or street demonstration or self-immolations will not help to bring solace to thousands of people in the camps.
    “Sri Sri acknowledged that the facilities in the camps are “MUCH BETTER” compared to those that the Indian Government has provided for the Kashmiri pundits and those provided for Sri Lankan Tamils in Tamil Nadu. Sri Sri appreciated the selfless service of Col. Induneel de Silva and his dedicated team of army personnel in the Vavuniya Menik farm welfare centres. They had extended complete co-operation for Sri Sri and the Art of Living to distribute clothes and other relief materials in the camps.
    “How will the political drama and commotion happening in the state(TAMILNADU) help the refugees in any case? Fasting or street demonstration or self-immolations will not help to bring solace to thousands of people in the camps. Instead of reaching out and helping the people who are in need, these incidents will only create fear and anger in society, Sri Sri said.”

    Reply
  • damilan
    damilan

    கருணாநிதிக்கு நன்றாக கதைவசனம் எழுதத் தெரியும் என்பது ஏற்கனவே எமக்குத் தெரியும். இப்போது நன்றாக நடிக்கவும் தெரியும் என்று விளங்க முடிகிறது.

    Reply
  • அகிலன் துரைராஜா
    அகிலன் துரைராஜா

    இத்தனை பெரிய இந்தியா, தமிழ் நாட்டில் இலங்கை அகதிகளுக்கு வழங்கிய வசதிகளை விட, நூறு மடங்கு மேலான வசதிகளை, இலங்கை அரசு இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குகிறது.

    ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லீம் மக்களை ஒரு இரவில் காசு நகை எல்லாம் பறித்து அநாதவராக அவர்களின் பூர்வீக பூமியில் இருந்து பிரபாகரன் கலைத்த போது ஒரு தமிழ் பேசும் இந்துக்களோ அன்றி கிறிஸ்தவரோ ஒரு வார்த்தை பிரபாகரனின் இன சுத்திகரிப்புக்கு எதிராக சொல்லவில்லை.

    ஆனால் இன்று அகதிகளான தமிழ் பேசும் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இலங்கை வாழ் முஸ்லீம்கள் உதவி செய்கிறார்கள்.

    பிரபாகரனின் தமிழ் ஈழத்தில் பிரபாகரனுக்கு ஆமா போட மட்டும் வாயை திறந்தவர்கள் மக்கள், எங்குபோவது என்றாலும் பிணைவைத்து பாஸ்எடுத்து தான் நடமாடமுடிந்த சுதந்திரத்தைதான் பிரபாகரன் கொடுத்திருந்தார்.

    இத்தகைய பிரபாகரனை காப்பாத்த புலன் பெயர்ந்த தமிழர் “வீ வோன்ட் தமிழ் ஈழம்” “அவர் லீடர் பிரபாகரன்” என்று தெரு தெருவாக ஊளை இட்டு திரிகிறார்கள்.– அகிலன் துரைராஜா நல்லூர் யாழ்ப்பாணம்

    Reply
  • BC
    BC

    //ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லீம் மக்களை ஒரு இரவில் காசு நகை எல்லாம் பறித்து அநாதவராக அவர்களின் பூர்வீக பூமியில் இருந்து பிரபாகரன் கலைத்த போது ஒரு தமிழ் பேசும் இந்துக்களோ அன்றி கிறிஸ்தவரோ ஒரு வார்த்தை பிரபாகரனின் இன சுத்திகரிப்புக்கு எதிராக சொல்லவில்லை.//

    வெட்கப்படுகிறேன்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    இராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது,மட்டக்களப்பை இலங்கை இராணுவம் இதேமாதிரி பிடித்தபோது,கிளிநொச்சியப் பிடித்த போது,ஒரு தமிழ் பேசும் இந்துக்களோ அன்றி கிறிஸ்தவரோ அன்றி “முஸ்லீம்களோ”,இப்படி “ஆர்ப்பாட்டம்” உலகெங்கிலும் செய்யவில்லை ஆனால்,அகதிகளுக்கு செய்யும் உதவிகளில்,தமிழ்நாட்டுக்கும்,இலங்கையினுள்ளும்,உள்ள வித்தியாசம் தெரிகிறது- இலங்கைக்குள் இந்தியா அளிக்கும் உதவிகள் கண்ணில் தெரியவில்லை,நன்றி கெட்ட உலகமடா!.வரும் முன் காப்பவன்தானே அறிவாளி!.

    Reply
  • rajan
    rajan

    எல்லோரும் தினமும் இலங்கை இராணுவத்தின் கொலைவெறியாட்டத்திற்கும் பட்டினிச்சாவிற்கும் முகம் கொடுத்துள்ள மக்கள் மீதே குதிரை ஓட்ட இருக்கின்றனர். வன்னிச்சனம் என்ன பாவம் செய்து பிறந்தார்களோ தெரியவில்லை. ம்…… என்ன செய்வது…. இப்பவே மொனறாகலையில் தமிழருக்கு ஆப்பு தொடங்கி விட்டது.. இனித்தான் தெரியும் நிணலின் அருமை.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    //இந்துக்களோ கிறீஸ்தவர்களோ ஒரு வார்த்தை பிரபாகரனின் இனசுத்திகரிப்புக்கெதிரா சொல்வில்லை//அகிலன் துரைராஜா
    இது முழுமையான உண்மையில்லை. புலிகளின் “ரம்போ” ஆயுதங்களுக்கு முன்னால் ஈவு இரக்கமற்ற மிருகவெறிக்கு முன்னால் தமிழ்மக்களின் உணர்வுகள் ஆடிஅடங்கிப் போயிருந்தது என்பது தான் உண்மை. அதில் வர்க்கநலன்கள் புதையுண்டு இருந்தது என்பது இன்னொரு உண்மை.
    முஸ்லீம் மக்கள் வெளியேற்றும் போது நல்லொண்னம் கொண்ட இந்துக்களும் கிறீஸ்தவர்களும் கையால்யாதவர்களாக இருந்தார்கள். இந்த மிருகபலத்தை சவால் செய்யக்கூடிய கட்சியோ தொழில்சங்களோ இருக்கவில்லை. ஏற்கவே அவைகள் புலிகளால் அழித்தெழிக்கப் பட்டிருந்தது.

    திருநெல்வேலிச் சந்தியால் தினம் கச்சேரிக்கு வேலைக்கு ஒரு போகும் அரசஊழியர் ரெலோ போராளிகளை எரித்து நரபலிவேட்டை நடத்தியதை பார்த்து “ஐயோ எமக்கு தமிழ்ஈழம் வேண்டவே வேண்டாம்” என மறைமுகமாக கதறி அழுதகாட்சி இன்றும் எம்மனத்தில். புண்ணிய பாவம் என்று சொல்வார்களே அதுதான் இன்று புலிகளின் கழுத்தை இறுக்கபற்றி இறுதிமூச்சை போக்க துடிக்கிறது என்று சொன்னால் ஏதாவது மிகையிருக்க முடியுமா?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இனித்தான் தெரியும் நிணலின் அருமை.-rajan//

    எதை நிழலின் அருமை என்கின்றிர்கள் விடுதலைப்புலிகளையா?? இதைத்தான் சொல்வார்கள் யானையைப் பார்த்த குருடனைப் போல் என்று….

    Reply
  • damilan
    damilan

    1990 ல் மன்னார். வவுனியா. முல்லைத்தீவு. கிளிநொச்சி. யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இருந்து புலிகளால் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையானது துரவதிஸ்டமானது. இதற்காக தமிழ் மக்கள் புலிகளிடம் வாய்திறந்து நியாயம் கேட்கும் நிலை இருக்கவில்லை. அந்த நிலைமையையும் தமிழ் மக்களின் சூழ் நிலையையும் புரிந்து கொள்கிறோம்.

    சில மக்கள் இதையும் பிறக்கப் போகும் தமிமீழத்திற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள். அதே போல் சொந்த அரசியல் தலைமை மற்றும் மாற்று இயக்கத்தை கொண்ட போதும் தமிழ் ஈழத்திற்காக வாய்மூடி ஏற்றனர் அல்லது ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டனர்.

    கிட்லரின் ஆட்சியின் போது ஒரு கவிஞரால் எழுதப்பட்டது

    அவர்கள் தொழிற்சங்கவாதிகளை
    கொண்டு சென்றார்கள். நான்
    எதுவும் பேசவில்லை. ஏனெனில்
    நான் தொழிற்சங்கவாதி அல்ல.

    யூதர்களை கொண்டு சென்றார்கள்
    நான் எதுவும் பேசவில்லை. ஏனெனில்
    நான் யூதனல்ல.

    கடைசியாக என்னைக் கொண்டு
    சென்றார்கள்.எனக்காக பேச
    யாருமில்லை.

    இதே நிலைதான் இன்று புலியால் பிடிக்கப்பட்டுள்ள மக்களின் நிலை. யாருக்காகவுமே வாய் திறக்காத மக்களால் தமக்காகக் கூட வாய் திறக்க முடியாத நிலை.

    Reply