ஈழத்தில் தற்போது சண்டை நடந்து வருகிறது. எனவேதான் தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சாதாரண பிரச்சினைதான் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பினர். அது ஒரு தீவிரவாத அமைப்பு. எனது தந்தையையும், அப்பாவி மக்கள் பலரையும் கொன்ற அமைப்பு அது.
இலங்கைப் பிரச்சினை சாதாரணமானதுதான். அங்கு தற்போது போர் நடந்து கொண்டிருக்கிறது. எனவே தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்படும் தமிழர்களின் பாதிப்புகளைக் குறைக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது. தமிழ் மக்களின் நிலை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.
அதை நாங்கள் குறைக்க முயற்சிப்போம். இதுகுறித்து இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறது இந்தியா. இலங்கை தமிழர்களின் உரிமைகள் அவர்களுக்கு கிடைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பாடுபடும். அவர்களின் துயரை துடைப்பதுதான் எங்களின் தலையாய கடமை.