“வடக்கு கிழக்கில் மாகாணசபை தேர்தல்களை நடத்தி அங்கே மாகாணசபைகளை  ஏற்படுத்த ரணில் தயாரில்லை .” – மனோ கணேசன்

“வடக்கு கிழக்கில் மாகாணசபை தேர்தல்களை நடத்தி அங்கே மாகாணசபைகளை  ஏற்படுத்த ரணில் தயாரில்லை .” என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் அறிக்கையொன்றில் மேலும் கூறியதாவது,

உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்களை, தடை நீக்கம் செய்து, அழைத்து ஜனாதிபதி ரணில் பேசுவது நல்லதே. அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் உள்நாட்டில் தமிழருக்கு தொடர்ந்து தவறான சமிக்ஞைகளை தருகிறார். இதில் ஒன்று, மக்களுடன் எந்தவித நேரடி தொடர்புகளும் இல்லாத அமைச்சர் டிரான் அலசின் பேச்சை கேட்டு, எனது தொகுதி கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவுகளை ஆரம்பித்துள்ளமை ஆகும்.

இரண்டாவது, வடக்கு கிழக்கிலாவாது மாகாணசபை தேர்தல்களை நடத்தி அங்கே மாகாணசபைகளை  ஏற்படுத்த ரணில் தயாரில்லை என்பதாகும். மூன்றாவது, பாதிட்டில் ரணில் உறுதியளித்த, மலைநாட்டில் 10 பேர்ச் காணி வழங்கல் பொறுப்பையும், அதற்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 400 கோடி ரூபாவையும் இப்போது யார் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியாமையாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கடந்த வாரம் அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து மூன்று விடயங்கள் குறித்து கேள்விகளை எழுப்பி கோரிக்கை விடுத்தேன்.

தற்போது ஜனத்தொகை புள்ளிவிபர கணக்கெடுப்பு சிவில் அதிகாரிகள் செய்யும் வேலைகளுக்கு மேலதிகமாக, உங்கள் அமைச்சர் டிரான் அலசின் பொலிஸ்காரர்களை தமிழர்களின் வீடுகளுக்கு சிங்களம் மட்டும் படிவங்களுடன் அனுப்பி, சிவில் அதிகாரிகள் செய்யும் வேலைகளை செய்து, எனது தொகுதி கொழும்பில் வாழும் தமிழர் மத்தியில் தேவையற்ற பதட்டங்களை ஏன் ஏற்படுத்துக்கிறீர்கள்?

குறைந்தபட்சம் உடனடியாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலாவது மாகாணசபை தேர்தல்களை நடத்தி, அங்கே முதற்கட்டமாக மாகாணசபை  நிர்வாகங்களை ஏற்படுத்தலாம். அதை ஏன் இழு, இழு என்று இழுத்துகொண்டே போகிறீர்கள்?

மலைநாட்டு பெருந்தோட்டங்களில், நீங்கள் பாதிட்டில் உறுதியளித்த 10 பேர்ச் காணி துண்டுகளை, பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கு வழங்கலாம்.

இந்திய, இலங்கை வீடமைப்பு திட்டங்களின் வீடு கட்டும் பணிகள், அரச நிர்வாக கட்டமைப்புகளின் ஊடாக நடைமுறையாக தாமதம் ஆகும். ஆகவே காணி வழங்களுக்காக நீங்கள் ஒதுக்கிக்கொண்டுள்ள 400 கோடி ரூபாயை பயன்படுத்தி, காணிகளை பிரித்து வழங்கலாம். ஆனால், இந்த 10 பேர்ச் காணி வழங்கல் பொறுப்பையும், அதற்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 400 கோடி ரூபாவையும் இப்போது யார் வைத்திருக்கிறார்கள்?

இந்த கேள்விகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதில் கூற வேண்டும். அல்லது அவருடன் கூட்டு குடித்தனம் செய்கின்றவர்கள் பதில் கூற வேண்டும். இவை தொடர்பில் கடந்த வாரம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பில், இலங்கைக்கான அமெரிக்கா, இந்தியா, சுவிஸ், நெதர்லாந்து, கனடா, பிரான்ஸ், தென்னாபிரிக்கா, இத்தாலி நாடுகளின் தூதுவர்களும் ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளின் துணை தூதர்களும், முதன்மை அதிகாரிகளும் கலந்துக்கொண்ட நிகழ்விலும் அவர்களுக்கு விளக்கமாக நான் எடுத்து கூறி இருந்தேன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *