தேசம் திரை

தேசம் திரை

சினிமா அறிமுகம், விமர்சனம் மற்றும் பதிவுகளும் செய்திகளும்.

தேசம்நெற் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியத்தின் 7 வது திரையிடல் நிகழ்வில் 5 குறும்படக் காட்சிகள்

Film_Screeningதேசம் நெற் இணையத்தளமும் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் இணைந்து வழங்கும் 7வது திரையிடல் நிகழ்வு சேர்பிற்றன் சறேயில் இடம்பெறவுள்ளது. யூன் 12 மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகவுள்ள இத்திரையிடல் நிகழ்வில் சதா பிரணவனின் இடி முழக்கம், பொன் சுதாவின் நடந்த கதை, பிரேமா சந்தானகுலத்தின் நோய் வீதி, ஜ வி ஜனாவின் மூன்று இரவு நாலு பகல், பாஸ்கரின் நதி ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது. இத்திரைப்படங்கள் இந்தியாவிலும் ஜரோப்பிய திரைப்பட விழாக்களிலும் பரிசில்கள் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2008 முதல் தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைப்படக் கழகமும் ஏற்பாடு செய்துவரும் குறும் திரைப்பட முயற்சிகளின் 4வது காட்சி நிகழ்வாக இது அமைகிறது. புலம்பெயர் சினிமாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் மற்றுமொரு குறுந்திரைப்படக் காட்சி இதுவாகும்.

தேசம்நெற் ஈழநண்பர்கள் திரைப்படக் கழகத்தின் காட்சியிடலில் உங்கள் படைப்புகளையும் காட்சிப்படுத்தி கலந்துரையாடலை மேற்கொள்ள விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் தொடர்பு கொள்ளவும்.

7வது திரையிடல் நிகழ்வு:
     காலம்: 12.06.2010
     நேரம்:  மாலை 6 மணி
     இடம்: The Cornerhouse, 116 Douglas Road, Surbiton, Surrey.

    படத்தின் பெயர்                              நேர அளவு         இயக்குனர்

1) இடி முழக்கம்                                  21 நிமிடம்            சதா பிரணவன்

2) நடந்த கதை                                    23 நிமிடம்            பொன் சுதா

3) நோய் வீதி                                       20 நிமிடம்            பிரேமா சந்தானகுலம்

4) மூன்று இரவு – நாலு பகல்     21 நிமிடம்            ஜ.வி. ஜனா

5) நதி                                                         8 நிமிடம்            பாஸ்கர்

படங்கள் குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கப் படும். சிற்றுண்டி- பானம் அத்துடன் இராப் போசனமும் வழங்கப்படும்.

கடந்த திரையிடல் நிகழ்வில் இலாபமாக வந்த £50.00  மன்னாரில் உள்ள பார்வை குறைந்த சிறுவர்களுக்கு கண்ணாடி வழங்குவதற்காக அனுப்பி வைத்துள்ளோம்.

அன்பளிப்பு: £5.00  தனிநபர். சிறுவர்கள் அனுமதி இலவசம்.

தொடர்புகளுக்கு: ஆர் புதியவன்     07988  589 923
                                     த ஜெயபாலன்    07800  596 786

கனடாவில் திரைப்படக் காட்சியும் கலந்துரையாடலும் : தேடகம்

Lumumba_posterலுமூம்பா Lumumba (2000)
இயக்குநர்: Raoul Peck

06-02-2010  அன்று தேடகத்தினால்    லுமூம்பா  திரைப்படமும்    கலந்துரையாடலும்  ஒழுங்குசெய்யபட்டுள்ளது. அனைவரையும்  அழைக்கின்றோம். 

இத் திரைப்படம் 1960களில் பெல்ஜியத்திலிருந்து விடுதலைபெற்ற கொங்கோவின் முதல் பிரதமர் பற்றீசியா லுமும்பாவின் இறுதி நாட்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. விடுதலை பெற்ற கொங்கோ, இரு மாதங்களுக்குள் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் துணையுடன் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, லுமும்பா உள்ளிட்ட தலைவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்கள்.

இத் திரைப்படம் France, Belgium, Germany,Haiti கலைஞர்களால் இணைந்து எடுக்கப்பட்ட போதும், கொங்கோவின் அரசியல் நெருக்கடிகளால் இது Zimbabwe, Beira, Mozambique போன்ற நாடுகளிலேயே எடுக்கப்பட்டது.

…வரலாறு ஒருநாளில் தனது தீர்ப்பை எழுதும். இந்த வரலாறு ஐ.நா.விலோ வாசிங்டனிலோ பரிசிலோ பூருலசிலோ கற்பிக்கப்படும் வரலாறாக இருக்காது. மாறாக, காலனி ஆதிக்கத்திடமிருந்தும் அதன் கைப்பாவைகளிடமிருந்தும் விடுதலை பெற்ற நாடுகளில் கற்பிக்கப்படும் வரலாறாக இருக்கும். ஆபிரிக்கா தனது சொந்த வரலாற்றைத் தானே எழுதும். அது சகானா பாலைவனத்திற்கு வடக்கிலும் தெற்கிலும் பேரின்பமும் கண்ணியமும் நிறைந்திருப்பதைச் சொல்லும் வரலாறாக இருக்கும்.
(லுமூம்பா தனது மனைவிக்கு சிறையிலிருந்து எழுதிய கடிதத்தில் இருந்து)

“லுமூம்பா: இறுதி நாட்கள்” (மொழிபெயர்ப்பு: எஸ். பாலச்சந்திரன். விடியல் பதிப்பகம்)

Lumumba_Poster
 
தொடர்புகட்கு   thedakam@gmail.com

தேடகம்.

ஐரோப்பிய எழுத்தாளர் சோபாசக்தி ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்!!!

Sobasakthyதனது எழுத்துக்களால் ஊடகங்களில் அறியப்பட்ட ஐரோப்பிய எழுத்தாளர் சோபாசக்தி தற்போது முற்றிலும் வேறுபட்ட காரணத்திற்காக ஊடகங்களில் இடம்பிடித்துள்ளார். தனுஷ்கோடியில் ‘செங்கடல்’ ஆவணப் படம் எடுக்கும் குழுவினரிடையே நடந்த தகராறு தொடர்பாக கதாசிரியர் சோபாசக்தியை அப்பகுதிப் பொலீசாரினால் கைது செய்யப்பட்டார். ஐரோப்பிய எழுத்துலகில் நன்கு அறிமுகமான சோபா சக்தி தமிழக எழுத்துலகிலும் அறியப்பட்டவர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸை வாழ்விடமாகக் கொண்ட இவர் கமராமென் தீபக் என்பவரைத் தாக்கியதற்காகக் கைது செய்யப்பட்டார். விசாரணைகளைத் தொடர்ந்து இவர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இது பற்றித் தெரியவருவதாவது, கடந்த 20 நாட்களாக இலங்கை அகதிகள் சம்பந்தபட்ட செங்கடல் என்ற ஆவணப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் இடம்பெற்று வந்தது. ஜனவரி 2 இரவு செங்கடல் படத்தின் மானேஜர்கள் வெங்கட், தனுஷ் ஆகியோரிடம் உதவி கெமிராமேன்கள் தீபக், கனி, வெங்கட் உட்பட 3 கெமிராமேன்கள் ஊதியம் கேட்டதாகவும் ஊதியம் வழங்காமல் அவர்கள் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. அதனால் ஆத்திரமடைந்த உதவி கெமராமன்கள் கனி, வெங்கட் ஆகியோர் படம் பதிவு செய்யப்பட்ட கேசட்டை எடுத்துக்கொண்டு சென்னை சென்றுவிட்டார்கள். இதையடுத்து மானேஜர்கள் வெங்கட், தனுஷ், கதாசிரியர் சோபாசக்தி ஆகியோர் தீபக்கை தாக்கி கேசட்டை கேட்டதாக கூறபடுகிறது.

இச்சம்பவம் குறித்து ஜனவரி 3 மதியம் ராமேசுவரம் கோவில் பொலீஸ் நிலையத்தில் தீபக் புகார் செய்தார். இப்புகார் தொடர்பான விசாரணையை மேற்கொண்ட பொலீசாரிடம் படத்தின் டைரக்டர் லீனா மணிமேகலை தகராறு செய்ததாகவும் அதை போலீஸ்காரர் நாகராஜ் என்பவர் செல்போன் மூலம் படம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அடைந்த லீனா மணிமேகலை போலீஸ்காரர் கையில் இருந்த செல்போனை பிடுங்கியதாக கூறபடுகிறது.

இறுதியில் பொலிசார் தீபக்கை தாக்கியது தொடர்பில் கதாசிரியர் ஷோபாசக்தியை கைது செய்து பொலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கெமராமேனை தாக்கியதாக கூறபடும் மானேஜர்கள் வெங்கட், தனுஷ் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொலிஸாரின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அல்லது ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்திகள் தொடர்பாக கதாசிரியர் எழுத்தாளர் சோபாசக்தி எவ்வித கருத்தையும் தனது இணையத்தில் பதிவு செய்யவில்லை. அவருடன் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

பழம்பெரும் நடிகை எஸ் வரலட்சுமி காலமானார்.

230909varalakshmi.jpgபழம் பெரும் நடிகை எஸ். வரலட்சுமி சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 84. கடந்த ஆறுமாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த அவருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இரவு 8.20 மணிக்கு காலமானார்.

1938-ம் ஆண்டு முன்னோடி இயக்குநர் கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த “சேவாசதனம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எஸ். வரலட்சுமி. இவர் மிகச் சிறந்த பாடகியும் கூட.  சக்கரவர்த்தி திருமகள், வீரபாண்டிய கட்ட பொம்மன், ராஜராஜ சோழன், கந்தன் கருணை, நீதிக்குத் தலைவணங்கு, பூவா தலையா, குணா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தவர் எஸ் வரலட்சுமி.

இவர் பாடிய ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்….’ என்ற பாடல் மிகப் புகழ்பெற்றது, கேட்போரை உருகவைப்பது.

கலைமாமணி, கலைவித்தகர், கண்ணதாசன் விருது  உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த எஸ். வரலட்சுமிக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர். இறுதிச் சடங்கு புதன்கிழமை (நேற்று) மாலை நடைபெற்றது. .

”அஜீவன் காணாமல் போகவில்லை. எனது தளத்தை மாற்றிக் கொண்டேன்.” அஜீவனுடன் ஒரு நேர்காணல்.

Ajeevanஅஜீவன் சிறுவயது முதலே மேடை நாடகங்கள் வானொலி தொலைக்காட்சி என பலவேறுபட்ட அனுபவங்களைக் கொண்டவர். சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனத்திலும் இவர் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. சுவிஸ்க்கு புலம்பெயர்ந்த பின்னரும் இன்று வரை அவருடைய ஊடகப் பயணம் அனுபவம் தொடர்கின்றது.

புலம்பெயர்ந்த பின்னர் குறும்படங்களை இயக்கி சினிமாத்துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பதித்துக் கொண்டவர். அண்மைக்காலத்தில் பல சினிமா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவற்றுக்கு முன்னதாகவே 2000 ஆண்டு காலப்பகுதியிலேயே மாற்று சினிமாவுக்கான ஒரு தளத்தை உருவாக்கியவர். 2002 மார்ச் 30 – 31ல் தேசம்நெற் ஏற்பாடு செய்த குறும்படப் பயிற்சிப் பட்டறையில் பயிற்சிகளை வழங்கி இரு குறும்படங்கள் அதில் உருவாக்கப்பட்டது.  http://www.oruwebsite.com/tamil_eelam_videos/musicvideo.php?vid=e593271b8

தற்போது சுவிஸ் நாட்டு தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகின்ற அஜீவன் ‘ஜீவன் போர் யு’ என்ற பெயரில் சுவிஸ் வானொலியில் வாராவாரம் தமிழ் சிங்கள நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருகின்றார். தனது சினிமா அனுபவங்களை தேசம்நெற் வாசகர்களுடன் அஜீவன் பகிர்ந்து கொள்கின்றார். உங்களுடைய மேலதிக கேள்விகளைப் பதிவு செய்தால் அஜிவன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார். (இந்நேர்காணல் மின் அஞ்சலூடாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.)

._._._._._.

Ajeevanபுலம்பெயர்ந்த மண்ணில் யாத்திரை கவிக்குயில், ரீஸிங், பீல்ட் த பெயின், நவ் அன் போரெவர், நிழல் யுத்தம், எச்சில் போர்வை, பவர் அழியாத கவிதை என்று குறிப்பிட்டுச் சொல்லப்படக் கூடிய குறும்படங்களை இயக்கி உள்ளீர்கள். இந்த அனுபவங்களினூடாக தற்போதுள்ள புலம்பெயர் சினிமா பற்றிய உங்களுடைய மதிப்பீடு என்ன?

பூத்து குலுங்கும் என்று எதிர்பார்த்த சினிமா, முட்களுக்குள் சிக்கிக் கொண்டதனால் தன்னையே இறுக்கி தன்னை நசுக்கிக் கொண்டது. வளரும் போதே வளைந்து போனது. சுதந்திரமாக பேசப்பட வேண்டிய சினிமா, விருதுகளை வெல்வதற்கு சுயநலமாகிப் போனது. இலங்கை தமிழ் சினிமாவை தோற்கடித்த அதே தமிழன் புலத்திலும் புலத்து தமிழ் சினிமாவை தோற்கடித்தான் என்பதை வருத்தத்தோடாவது மனம் திறந்து சொல்லியே ஆக வேண்டும். சினிமாவை உருவாக்கிய படைப்பாளிகளது பெயரைக் கூட, படம் காட்டியவர்கள் தட்டிப் பறித்துக் கொண்டார்கள். அதாவது திரையிட்டவர்கள் பெற்ற புகழின் ஒரு சதவீதத்தையாவது, அதை உருவாக்கியவனால் பெற முடியவில்லை. அரசியல் தளங்களைக் கொன்டோர் கையில் புலம் பெயர் சினிமா சிக்கிய போது, சாவுச் சங்குச் சத்தம் கேட்கும் என்பதை உணர்ந்தேன்.

நேர்மையான கலைஞர்களை மெளனிக்க அது வழி வகுத்தது. ஏதோ அதிஸ்டத்தில் வென்றவர்கள் அப்போதைய அலையோடு அடங்கிப் போனார்கள். திறமையான சிலர் மனப்புழுக்கத்தில் வெந்து வெறுத்து ஒதுங்கினார்கள். பலருக்கு ஆசை இருந்த அளவு, அந்த கலை குறித்து அறிவு இருக்கவில்லை. அதை வளர்த்துக் கொள்ளவும் யாரும் முயலவில்லை. அது குறித்து சொன்னாலும் அதை யாரும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. சினிமா தெரிந்த இளைஞர்களுக்குக் கூட அடுத்த முயற்சிக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. பாவம் அந்த இளைஞர்கள்.

புலம்பெயர் சினிமாவிற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் புலம்பெயர் சினிமா தனது தனித்துவத்தை நிலைப்படுத்திக் கொள்ள முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றது. கனடா, லண்டன், பிரான்ஸ், சுவிஸ் என சினிமாவுக்கான அமைப்புகளும் குறும்பட விழாக்களும் உருவாகிய போதும் அவை விளலுக்கு இறைத்த நீராகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இந்நிலைக்குக் காரணம் என்ன?

குறும்பட விழாக்களின் தேர்வுக் குழுவினர், சினிமா தேர்வுக் குழுவுக்கு எப்படித் தேர்வானார்கள் என்ற வினாவை எழுப்பினால் இதற்கான பதில் கிடைக்கும். எழுதவே தெரியாதவன் பரீட்சை தாள் திருத்தியதன் விளைவை இப்போது அனுபவிக்க வேண்டி வந்துள்ளது.

இரண்டாயிரமாம் ஆண்டின் முற்பகுதிகளில் அஜீவன் என்ற இயக்குநரிடம் இருந்து தொடர்ச்சியாக சில படைப்புகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் தற்போது புலம்பெயர்ந்த தமிழ் சினிமாச் சூழலில் அஜீவன் காணமற் போனது ஏன்?

அஜீவன் காணாமல் போகவில்லை. எனது தளத்தை மாற்றிக் கொண்டேன். நான் வாழும் சுவிஸ் சினிமாவோடும் தொலைக் காட்சிக்குள்ளும் என்னை பதித்துக் கொண்டேன். இலங்கை சிங்கள சினிமாவில் என் குழுமத்தோடு எப்போதும் போல் இருக்கிறேன். என்னைப் போல்தான் நாளைய இளைய புலம் பெயர் தலைமுறையும் செய்யும். இருள் படிந்ததால் சூரியன் இல்லாமல் போய் விட்டதாக யாரும் அர்த்தம் கொள்ளக் கூடாது. அது மறு புறத்தில் ஒளி கொடுத்துக் கொண்டு தன் பணியை தொடர்ந்து செய்கிறது.

குறிப்பாக ஈழவர் திரைக் கலை மன்றத்தின் அணுசரணையுடன் உங்களின் சில படைப்புகள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஈழவர் திரைக்கலை மன்றத்தின் சினிமா முயற்சிகளும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. ஏன்?

உண்மையானவர்களை யாரும் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. அதை அவர்கள் உணரும் போது, காலம் கடந்து இருக்கும். பணம் இருக்கும் அல்லது இல்லாமல் போகும். கற்ற கல்வியை எவராலும் அழிக்க முடியாது. எனவே பணத்தாலும், பலத்தாலும் மட்டும் எதையும் வெல்ல முடியாது. ஜால்ராக்கள் எங்கும் சூழலாம். நல்ல நண்பர்கள் எங்கும் சூழ்ந்து இருக்க மாட்டார்கள். உண்மை பேசுவோர் எதிரிகளாகத் தெரிவார்கள். ஆனால் உண்மைகள் பொய்யாவதில்லை. மெதுவான வளர்ச்சியை கொள்ளாமல், அகலக் கால் பதிக்க முயன்றதும், சுயநலவாதிகள் சூழப் பெற்றதும், அவர்களை ஏற்றுக் கொண்டதும், ஈழவர் திரைக்கலை மன்றத்தின் ஸ்தம்பிதத்துக்குக் காரணம்.

நான் ஏனையவர்களது படைப்புகளை கொண்டு வர ஆதரவும், ஆலோசனையும் வழங்கினேன். அதுவே எனது அவாவாகவும் இருந்தது. பிரான்சில் படைப்புகளை செய்ய அடிப்படை தேவைகள் மற்றும் முன்னெடுப்புகளை எப்படிச் செய்வதென ஆலோசனை வழங்கினேன். அங்கே படப்பிடிப்பு நடத்தி, அதன் வெளியீட்டின் பின்னேதான் என்ன செய்துள்ளார்கள் என பார்க்க முடிந்தது. அதுவும் அரைப் பிரசவமானது.

ஜெர்மனியில் ஒரு படத்தின் மேற்பார்வைக்காகச் சென்று, அதன் ஒளிப்பதிவையும், அவர்களுக்கான உதவிகளையும் என் செலவிலேயே செய்தேன். இன்றுவரை அந்த படத்தின் ஒரு பிரதி கூட எனக்குக் கிடைக்கவில்லை. காட்டவும் இல்லை. நான் பிரான்ஸ் சென்ற போது, படத்தொகுப்புக்கு முன்னரான பகுதிகள் நடிகர் ரகுநாதனிடம் வந்துள்ளதாக சொன்னார். அடுத்த நாள் அவர் வீட்டுக்கு சென்று, அனுப்பியுள்ள ஒளிப்பதிவு செய்து உங்களிடம் வந்துள்ள பகுதிகளை பார்க்கலாமா என்று கேட்டேன். அதை அனுப்பி விட்டேன் என ஒரு பெரும் பொய்யை சொன்னார். நான் எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். ஒளிப்பதிவாளருக்கு காட்டாமல் படத்தை எடிட் செய்யும் கொடுமையை அன்றுதான் உணர்ந்தேன்.

சினிமா என்பது இயக்குனர் மீடியா என்றாலும் இயக்குனர் நினைப்பதை ஒரு ஒளிப்பதிவாளனே செதுக்குகிறான். அவன் எடுத்த ஷாட்களில் தவறானதை பாவிக்காதீர்கள் என்று சொல்லக் கூட ஒளிப்பதிவாளருக்கு உரிமையில்லாத கொடுமையை இவர்களிடம் கண்டேன். இவையெல்லாம் இவர்கள் செய்த மாபெரும் தவறுகள். சமைத்த சமையல்காரருக்கு ருசி பார்க்ககூட சந்தர்ப்பம் அளிக்காது விருந்தினருக்கு பரிமாறியதில் உணவு விடுதியை மூடவேண்டி வந்துள்ளது.

இங்கே சிலதை சொல்லியே ஆக வேண்டும். இது பலருக்கு மனவேதனை தந்தாலும், புதியவர்களுக்கு வழிகாட்டியாக நான் சொல்பவை சிலவேளை அமையலாம்.

எனது சினிமா ஆசான் அன்றூ ஜயமான்ன சொல்வார் ” ஒன்று வேலை தெரிந்தவனோடு வேலை செய். அல்லது வேலை தெரியாதவனோடு வேலை செய்.” என்பார். அரை குறைகளோடு மட்டும் வேலை செய்யாதே என்பார். வேலை தெரிந்தவர்களோடு வேலை செய்தால், அவர்களிடமிருந்து நீ எதையாவது கற்றுக் கொள்வாய். வேலை தெரியாதவனோடு சேர்ந்து வேலை செய்தால் நீ சொல்வதை அவன் ஏற்றுக் கொள்வான். அவனும் எதையாவது கற்றும் கொள்வான் என்பார். காரணம் அரை குறைகளோடு வேலை செய்தால் நீ சொல்வதை அவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அவன் சொல்வதை உன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்பார். அதை நம்மவர்களிடம் அநேகமாக பார்க்கலாம்.

ஸ்டார்ட், கட் சொன்னால் அல்லது ஒரு நல்ல கேமரா இருந்தால் படம் எடுக்கலாம் என்பதை விட அநேக விடயங்கள் இருக்கிறது என்பதை நம்மில் பலர் உணராமல் இருப்பது வேதனையானது. என்னோடு பேசிய அநேக தமிழர்கள் இப்படியான தமிழ் சினிமா ஆர்வலர்கள். அரசியல் மற்றும் போராட்ட வரலாறு கொண்டவர்களுக்கு அவர்கள் சார்ந்த கருத்து திரைப்படம் எடுக்க ஆவல். அது எனது குறிக்கோள் அல்ல.

இலங்கையில் நாங்கள் எடுத்த இரு சிங்கள திரைப்படங்களின் இயக்கத்தையும் என் நண்பனே செய்தான். ஆரம்பம் தொட்டு இறுதிவரை நான் அவனோடு இருந்தேன். முதலாவது படம் அவனை தொலைக் காட்சியிலிருந்து, வெள்ளித் திரைக்கு கொண்டு வந்தது. அவன் இலங்கையின் 3 தொலைக் காட்சிகளை உருவாக்கிக் கொண்டு வர அடிப்படையாக இருந்தவன்.

இவற்றில் பணியாற்றிய நாங்கள், இலங்கையின் திரைப்பட மேதையும் இடதுசாரியுமான காலஞ்சென்ற திஸ்ஸ அபேசேகரவின் சினிமா குழந்தைகள். http://en.wikipedia.org/wiki/Tissa_Abeysekara , http://www.bbc.co.uk/sinhala/news/story/2009/04/090418_tissa.shtml . அவர் எமக்கு ஆசீர்வாதமாக மட்டுமல்ல, அடித்தளமாகவும் இருந்தார். நாங்கள் உலக சினிமாவுக்குள் செல்ல வழிகாட்டியாக இருந்தார். ஈகோக்கள் உருவாகாத மனதை கொடுத்தார். தவறானதை செய்யாதே, தூக்கி எறிந்துவிட்டு வெளியேறு. அதுவே உன்னை உண்மையான படைப்பாளியாக அடையாளம் காட்டும். என்னதான் கிடைத்தாலும் தவறான படைப்புகளை உருவாக்க வேண்டாம் என அறிவுரை தந்தார். தவறான ஒரு திரைப்படம் ஒரு சமூகக் கொலைக்கு சமன் என்றார்.

இலங்கையில் உருவான திரைப்படங்கள் தொடர்பாக, நாங்கள் அரசியலுக்குள் சிக்கிக் கொள்வில்லை. அது கலைஞனுக்கு மாபெரும் ஆபத்து. முதல் திரைப்படத்தில் இலங்கைக்குள் தடம் பதிப்பதை குறியாகக் கொண்டோம். அத்திரைப்படம் போர் காலத்தில் திரைப்பட்டதால் பெரும் வசூல் கிடைக்கவில்லை. எம்மைக் காத்துக் கொண்டோம். அதனால் உலக சினிமாவுக்குள் எம்மை அறிமுகம் செய்து கொண்டோம். அது அடுத்த நகர்வுக்குத் தேவையாக இருந்தது. காலம் தாழ்த்தாது உடனடியாகவே அடுத்த படத்தை உலக சினிமாவுக்காக கொண்டு வந்தோம். அத் திரைப்படம் இலங்கை அரசியல் களம் மற்றும் யுத்தம் காரணமாக வெளியிட வைக்காது தாமதிக்க வைத்தது. ஆனால், உலக சினிமா எம்மை அடையாளம் கண்டுள்ளது. தற்போது அடுத்த படத்தை தொடங்கியுள்ளோம். அது இலங்கை பாதாள உலகம் குறித்த திரைப்படம்.

இங்கே பணிபுரியும் அனைவரும் நான் என்பதை விட, நாங்கள் என்று படைப்புகளை உருவாக்குகிறோம். என்னை விட, இலங்கை பிரச்சனை தெரிந்த என் நண்பர்கள் சினிமா வல்லுனர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அந்த தளத்தில் உள்ளவனே அதற்கு சிறந்தவன். நான் உலக சினிமாவுக்கு எமது படைப்புகளை கொண்டு செல்லவும், தயாரிப்பு மற்றும் வினியோகம் குறித்தும் இந்தியாவில் லேப் வேலைகள் தொடர்பாகவும் எனது பணியை முன்னெடுக்கிறேன். இதற்கும் என்னை விட என் நண்பர்களே நேரடியாக பணியாற்றுகிறார்கள். நான் போய்ச் செய்வதை பல வேளைகளில் தொலைபேசி வழியே பணிக்கிறேன். எனவே புரிந்துணர்வுள்ள நாங்கள் ஒரு குழுமமாகவே பணியாற்றுகிறோம். முடிந்தளவு செலவுகளை கட்டுப்படுத்த இவை உதவுகின்றன. இதை எம்மவரோடு செய்வது கடினமாக உணர்கிறேன்.

எம்மவர் மருத்துவரை ஒதுக்கி விட்டு, ஓடலிகளை வைத்து மருந்து கொடுக்க முற்படுவதாக சொன்னால் நம்பவா போகிறார்கள். என்னை அடிக்கத்தான் வருவார்கள். அதுவே தொடர்கிறது. காலம் வரும். அப்போது தமிழில் நல்ல படைப்புகளையும் நிச்சயம் தருவோம். அதற்கான தருணம் உருவாகிறது என நம்புகிறேன்.

அண்மைக் காலங்களில் சிங்கள மொழிப் படங்கள் இரண்டை இயக்கியதாக அறிந்துள்ளேன். அவை பற்றி சற்று கூற முடியுமா?

இயக்கவில்லை. எனது ஆசான்களோடும், நண்பர்களோடும் இணைந்து இரு சிங்கள திரைப்படங்களை உருவாக்கி இருக்கிறோம். Sankranthi’ (The Tender Trap), 2006 இந்திய திரைப்பட விழாவிலும், கனேடிய திரைப்பட விழாவிலும், சுவிஸ் திரைப்பட விழாவிலும் பங்கேற்றது. Sankranthi’ இலங்கையில் திரையிடப்பட்டு விட்டது. இத் திரைபடத்தின் உரிமை சிரச தொலைக் காட்சிக்கு விற்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு உரிமை என்னிடம் உள்ளது.
http://img19.imageshack.us/img19/24/ajeevanfilmteam.jpg
சென்னையில் திரைப்பட குழுவினர் இறுதிக் கட்ட பணிகளுக்கு சென்ற போது….

http://www.cyberstudio.biz/HB/static/anujaya/sankranti-html/film-makers.html

http://www.youtube.com/watch?v=6WMQaUWqGFk&feature=channel_page

http://sundaytimes.lk/061231/TV/012tv.html

http://www.cfi-icf.ca/index.php?option=com_cfi&task=showevent&id=14

http://iffi.nic.in/MoreFilm.asp?id=307

அடுத்த Cruel Embrace / Dhawala Duwili. 2007, 35 mm, Colour, 90 mins, Sinhala திரைப்படம் சோவியத் திரைப்பட விழாவில் விருதொன்றையும், இந்திய திரைப்பட விழாவில் பங்கு கொண்டும் உள்ளது. இன்னும் திரையிடப்படவில்லை. இலங்கையில் இடம் பெற்று வந்த, யுத்தம் காரணமாக போர்களம் செல்லும் படையினரால் சின்னா பின்னமாகும் சிங்கள கிராமத்து மக்களின் வாழ்வின் ஒரு பகுதியான போர்க்கால விதவைகள் குறித்து பேசும் இத் திரைப்படத்தை சில அரசியல் காரணங்களால் இன்னும் திரையிட முடியவில்லை.
http://www.cyberstudio.biz/HB/static/anujaya/davala_duvili-html/davala-duvili.html

http://www.iffigoa.org/iffi2007/SCREENINGSCHEDULE07.doc

சுவிஸ் திரைப்பட அமைப்பின் உத்தியோகபூர்வ உறுப்பினராக உள்ள நீங்கள் அதன் அனுபவத்தை சுருக்கமாக சொல்ல முடியுமா?

நான் வாழும் நாட்டு திரைப்படத் துறையினரோடு வாழ்வதற்கும், அவர்களுக்குள் இருப்பதற்கும் ஒரு வரமாக அதைக் கருதுகிறேன். நான் செய்வது குறைவு, மதிக்கப்படுவது அதிகம். அதில் மகிழ்வாக இருக்கிறது.

அண்மையில் பேர்ளின் திரைப்பட விழாவில் திரையிடத் தெரிவு செய்யப்பட்ட ஆர் பிரதீபனின் ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்’, ஆர் புதியவனின் துறுத வின்டோ போன்ற குறும்படைப்புகள் என அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வெளிவந்துள்ளது. ஆர் புதியவன் தொடர்ச்சியாக முழுநீளப் படங்களை இயக்கி வருகின்றார். அண்மையில் ‘லண்டன் மாப்பிளை’ என்ற படத்தின் காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டது. இவை புலம்பெயர் சினிமாவில் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றனவா?

மகிழ்வாக இருக்கிறது. நல்ல படங்கள் அனைத்து தரப்பாலும் வர வேண்டும். அவர்களை வாழ்த்துவேன். எனக்கு அவர்களது வேதனையை உணரத் தெரியும். முன்னரெல்லாம் எனது எண்ணங்களை சொல்ல முயன்றேன். புலம் பெயர் படைப்பாளிகளை உருவாக்கவும் முயன்றேன். அதன் பிரதி பலனை எப்போதோ அனுபவித்து திருந்தி விட்டேன். இப்போது அதைச் செய்வதை தவிர்த்து வருகிறேன். முதுகில் குத்தியவர்களை விட்டு எப்போதோ பாதையை மாற்றிக் கொண்டேன். இப்போது உலக மக்களுக்காக சினிமா செய்கிறேன். அது எந்த மக்கள் என தரம் பிரிப்பதல்ல என் நோக்கம். எனவே என்றும் மகிழ்வாக இருப்பேன்.

புலம்பெயர் தமிழ் சினிமா – மாற்றுச் சினிமா எதிர்கொள்கின்ற தடைகள் என்ன? அவற்றை எவ்வாறு தாண்ட முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

இது அவரவர் திரைப்படம் செய்யும் கரு மற்றும் தளத்தைப் பொறுத்தது. எங்கும் தடை வரலாம். தடைகளை தாண்டி நேர்மையோடு நடக்கிறவன்தான் கலைஞன். நம் மனதுக்கு சரியென்று பட்டு, அதைச் செய்தால் தோல்வியிலும் மகிழலாம். வித்தியாசமாக படைப்பவனால் மட்டுமே படைப்பாளியாக உலக சினிமாவில் தடம் பதிக்கலாம். அதற்காக நம் இதயத்துள் இரத்தம் சிந்தி நமக்குள்ளேயே போராட தயாராக இருக்க வேண்டும். தோல்விகள் என்பவைதான் வெற்றிக்கான வழி காட்டல்கள். நம்மில் பலர் மரத்தை வெட்டி வீழ்த்தி விட்டு பழம் புடுங்கி சாப்பிட நினைப்பவர்கள். அல்லது நினைத்தவர்கள். பழம் புடுங்க மரம் இருந்தால்தான் தொடர்ந்தும் பழம் புடுங்கலாம் என அவர்களாகவே உணரும் காலம் வரை நம்மால் உயர்வடைய முடியாது. அதை உணர்ந்தால், அடுத்த நொடியே நம் சமூகம் அனைத்து தடைகளையும் உடைத்துக் கொண்டு உயர்வடையும். அந்த நாள் வரை பொறுப்போம்.

நீங்கள் தேசம் சஞ்சிகையுடன் இணைந்து சினிமா பயிற்சிப் பட்டறை நடாத்திய காலங்களில் குறும்படங்களைத் தயாரிப்பவர்கள் அவற்றை வெளியிடுவதற்கான தளங்கள் இல்லாமல் விரல் விட்டு எண்ணக் கூடிய தங்கள் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு போட்டக் காட்டி விட்டதுடன் முடிந்துவிடும். இன்று யூ ரியூப் போன்ற தொழில்நுட்பங்கள் பார்வையாளர் தளத்தை உலகளாவிய தளத்திற்கு விரிவுபடுத்தி உள்ளது. அதனை புலம்பெயர் தளத்தில் உள்ளவர்கள் ஏன் முழுமையாகப் பயன்படுத்தத் தவறுகின்றனர்?

நான் செய்த தவறுகளில் இதுவும் ஒன்று. புலத்து திரைப்பட படைப்பாளிகள் உருவாக வேண்டும் என நினைத்தேன். இலவசமாக பயிற்சி பட்டறைகளை நடத்தினேன். அந்த காலத்தில் நான் வேறு ஏதாவது செய்திருக்கலாம். ஒரு சிலரைத் தவிர பலரால் தலை காட்ட முடியவில்லை. திறமையை விட ஜால்ரா அடிக்க கற்றுக் கொண்டால்தான் எம்மவர் மத்தியில் நிற்க முடியும். அது எனக்கு வராது. எனவே இங்கே தோற்பதே என் வெற்றி.

யூ டியுப்பினால் கூட கலைஞர்கள் ஏழ்மை நிலைக்குத்தான் போகிறார்களே தவிர, பொருளாதாரத்தில் எவரும் முன்னேறவில்லை. பொழுது போக்கிற்காக இது பரவாயில்லை. வீட்டு அடுப்பு எரிய இந்த வழி பயன்தராது. இது சில நினைவலைகளை மீட்க உதவலாம் அல்லது ஒருவரை வெளிக்காட்டிக் கொள்ள உதவலாம். ஒரு கலைஞனை வாழ வைக்காது. முதலில் ஒரு கலைஞனை வாழவைக்க முயலுங்கள். அதைக் கண்டு அடுத்த கலைஞன் தோன்றுவான். அதிக சம்பளம் கிடைக்கும் ஒரு இடத்துக்குத்தான் எவரும் வேலை மாறுகிறார்கள். தனக்கு பிடித்த இடத்தில் இலவசமாக எவராவது வேலை செய்வதை யாராவது பார்த்திருக்கிறீர்களா? அதை நம் கலைஞர்களிடம் மட்டுமே காணலாம். பாவப்பட்ட ஜென்மங்கள்.

படைப்புகளிலும் பார்வையாளரின் ரசனையிலும் புலம்பெயர் மண்ணில் தோன்றிய தொலைக்காட்சிகள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?

பாவம் புலம் பெயர் தமிழ் பார்வையாளர்கள். வானோலி நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் பார்க்கிறார்கள். இந்திய படைப்புகள் இல்லையென்றால், எவரும் தொலைக் காட்சியையே பார்க்க மாட்டார்கள். தொலைக் காட்சியை பார்த்து முட்டாள்கள் ஆன மக்கள் குறித்து ஒரு ஆய்வு நடத்தினால், எந்த மக்களில் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பதை நான் சொல்லி எவரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை? அந்த அளவுக்கு நம் தொலைக் காட்சிகள் நம் சமூகத்துக்கு கெடுதல் செய்து கொண்டு உள்ளன.

40 கோடியை இழந்தேன் : நடிகர் கமல் வேதனை

09-kamal-marmayogi.jpgபிரமிட் சாய்மீரா பட நிறுவனம் கமலஹாசனை வைத்து மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்திருந்தது. பின்னர் இத்திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், மர்மயோகி படம் கைவிடப்பட்டதால், தாங்கள் வழங்கிய அட்வான்ஸ் தொகையான 10 கோடியே 90 லட்சத்தை வட்டியுடன் அளிக்க வேண்டும் என கமலஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், செய்தியாள்ர்களிடம் பேசிய கமலஹாசன், மர்மயோகி திரைப்படம் முடியும் வரை வேறு படங்களில் நடிக்கக்‌கூடாது என்ற நிபந்தனையினால், தமக்கு 40 கோடி இழப்பு ‌ஏற்பட்டதாகவும், சட்டரீதியான நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காகவே, சாய்மீரா நிறுவனம் தன் மீது திட்டமிட்டு பொய்பிரசாரம் செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாவும் தெரிவித்துள்ளார்.

ரூ.10.9 கோடி கேட்டு கமலுக்கு நோட்டீஸ்

09-kamal-marmayogi.jpgமர்மயோகி படத்துக்காக தங்களிடம் முன் பணமாகப் பெற்ற ரூ 10.90 கோடியை உடனடியாகத் திருப்பித் தரவேண்டும் என பிரமிட் சாய்மிரா நிறுவனம் நடிகர் கமல்ஹாஸனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸை அந்நிறுவனத்தின் வழக்கறிஞர் சிதம்பரம்  அனுப்பியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் பிரமீட் சாய்மீரா நிறுவனமும், கமல்ஹாஸனின் ராஜ்கமல் நிறுவனமும் இணைந்து மர்மயோகி எனும் படத்தை பிரமாண்ட முறையில் தயாரிக்க முடிவு செய்தனர். கமல் இயக்கி நடிப்பதாக இருந்த அந்தப் படம் பொருளாதார நெருக்கடி காரணமாக தள்ளிப் போடப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தப் படத்துக்காக கமல்ஹாஸனுக்கு ரூ.10 கோடியே 90 லட்சம் முன்பணமாக வழங்கப்பட்டிருந்தது. மொத்த பட்ஜெட் ரூ.100 கோடி என முதலில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்தான், கமல் தனது சொந்தப் படமான உன்னைப் போல் ஒருவன் வேலைகளில் பிஸியாகிவிட்டார். இப்போது அந்தப் படம் வெளியாகும் நாளும் குறிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் பிரமிட் சாய்மிரா நிறுவனம் கமல்ஹாஸனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ‘மர்மயோகி’ படத்தை எடுத்து முடிக்காமல் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தை வெளியிடுவது சரியல்ல. ‘மர்மயோகி’ படத்திற்கான பணிகளை துவக்காததால் முன்பணமாக பெற்ற தொகையை நீங்கள் திருப்பி செலுத்த வேண்டும். எனவே உடனடியாக முன்பணத்தை திருப்பிச் செலுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் சட்ட ரீதியான நடவடிக்கை மற்றும் தேவையற்ற செலவீனங்களை தவிர்ப்பீர்கள் என்றும் நம்புகிறோம்…”, என்று கூறப்பட்டுள்ளது.

\

தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகர்- பிரகாஷ் ராஜ்; சிறந்த படம் – காஞ்சிவரம்

pracas-raj.jpgதிரைப் படத்துறையில், கடந்த 2007ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ‘காஞ்சிவரம்’ சிறந்தப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் நடித்த பிரகாஷ் ராஜ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டின் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில், இயக்குனர் ப்ரியதர்ஷன் இயகிய ‘காஞசிவரம்’ சிறந்த படத்துக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இப்படத்தில், கதாநாயகனாக நடித்த நடிகர் பிரகாஷ்ராஜ், சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறார். கடந்த 1998ம் ஆண்டு, மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘இருவர்’ படத்திற்காக, சிறந்த துணை நடிகருக்கான விருதையும் ஏற்கனவே பெற்றவர் பிரகாஷ் ராஜ். இவர் கடந்த 2003ம் ஆண்டில் சிறப்பு ஜூரி விருதும் பெற்றவர்.

சிறந்த நடிகைக்கான விருதுக்கு, ‘குலாபி டாக்கிஸ்’ என்ற கன்னட படத்தில் நடித்த நடிகை உமாஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாலு பெண்கள் என்ற படத்தை இயக்கிய அடூர் கோபால கிருஷ்ணன், சிறந்த இயக்குனருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஷாரூக்கான் நடித்த ‘சக்தே இந்தியா’ சிறந்த பொழுதுபோக்கு படமாக தேர்வாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமீர்கானின் ‘தாரே ஜமீன் பர்’ என்ற திரைப்படம், சிறந்த குடும்பநல திரைப்படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது.

2007ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான விருதுக்கான போட்டியில், ஷாரூக்கானின் ‘சக்தே இந்தியா’வும், அமீர்கானின் ‘தாரே ஜமீன் பர்’ம் முதல் இடத்தில் இருந்தன. இந்த இரு படங்களும் மிகப்பெரிய நடிகர்கள் நடித்த படம் என்பது மட்டுமின்றி, சமூக நலன் மற்றும் தேச நலன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருந்தன.

இதனால், இந்த இரு படங்களில் ஏதாவது ஒன்று, சிறந்த படத்துக்கான விருதை பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு, பிரகாஷ் ராஜின் யதார்த்த நடிப்பில், இயல்பான கதையை சொன்ன தமிழ் படமான ‘காஞ்சிவரம்’ சிறந்தப் படத்துக்கான விருதை தட்டிச் சென்றுள்ளது. இப்படம், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், பட்டு நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையை மிக இயல்பாக சித்தரித்திருந்தது.

‘தாரே ஜமீன் பர்’ படத்தில் பாடிய ஷங்கர் மகாதேவன் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘தார்ம்’ படத்துக்கு, தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படத்துக்கான விருது கிடைக்கவுள்ளது.

‘காந்தி மை ஃபாதர்’ படம் சிறந்த படத்துக்கான சிறப்பு ஜூரி விருதை பெற்றுள்ளது. அதோடு, சிறந்த திரைக்கதை (பெரோஷ் அப்பாஸ்) மற்றும் சிறந்த துணை நடிகர் ( தர்ஷன் ஷாரிவாலா) ஆகிய விருதுகளையும் இப்படம் பெற்றுள்ளது.

‘திங்க்யா’ என்ற மராத்திப் படத்தில் நடித்த சிறுவன் சரத் கோயங்கருக்கு, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்படவுள்ளது. விருதுப் பெறுவோர் பட்டியல் கடந்த வாரமே தயாராகி விட்டது. எனினும், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் திடீர் மரணம் காரணமாக, இதுபற்றிய அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

படக் காட்சியும் கருத்துக் களமும் : கனடிய தமிழ்த் திரைப்பட மேம்பாட்டு மையம்

little_terroristகனடிய தமிழ்த் திரைப்பட மேம்பாட்டு மையத்தின் செயற்பாடுகளில் ஒன்றான திரைப்படக் கருத்துக் களத்தின் நிகழ்வாக, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திரைப்படக் காட்சியும் அதற்கான கருத்துக் களமும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் “Little Terrorist” ,  “Road to Ladkh” ஆகிய இரு குறும்படங்கள் காண்பிக்கப்பட்டு அவை தொடர்பான விமர்சன நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

திரைப்பட ஆர்வலர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

இடம்: 5310 FINCH AVENUE EAST, UNIT – 39, SCARBOROUGH

மேலதிக விபரங்களுக்கு: 416- 457- 8424 / 416- 450- 6833

‘லண்டன் மாப்பிளை’ ஓகஸ்டில் லண்டனில் படப்பிடிப்பு.

London Mappillaiகௌதம் விஷன்ஸ் நிறுவனம் பொலிவூட் சினி புறடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் ‘லண்டன் மாப்பிளை’ திரைப்படம் பாரிய பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது. 90 வீதம் படப்பிடிப்புக்கள் லண்டனிலும் மிகுதி இராமேஸ்வரம் பகுதியிலும் படமாக்கப்படவுள்ளன.

ஆகஸ்ட் முதலாம் திகதி லண்டனில் படப்பிப்புக்கள் ஆரம்பமாகும் இத்திரைப்படம் முழுநீள நகைச்சுவைப் படமாகும். லண்டன் பிரஜையான ஆர் புதியவன்  இயக்கும் இந்தப் படத்தில் இடம்பெறும் காட்சித் தளங்கள் இதுவரை எந்த இந்தியத் திரைப்படங்களிலும் வராத அனுமதி பெறமுடியாத இடங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்தினம் இயக்கும் ராவணா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஸ்வந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் நடிகர் சத்தியராஜின் புதல்வி திவ்யா. இது மாத்திரமல்லாமல் நூற்றுக்கு மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய எஸ். ஏல். பாலாஜி முக்கிய பாத்திரத்தில் தோன்ற இருக்கிறார். நகைச்சுவை கலாட்டாவுடன் வித்தியாசமான  பாத்திரத்தில் முதல் முதல் தோன்ற இருக்கிறார் காதல் சுகுமார். இவர்களுடன் சேர்ந்து கலக்கும் இன்னொரு நட்சத்திரம் மண் படத்தில் தன் நடிப்பால் பாராட்டைப் பெற்ற விஜித்.

ஓளிப்பதிவு சி.ஜே. ராஜ்குமார். நடனம் எஸ்.எல். பாலாஜி. படத்தொகுப்பு சுரேஸ் அர்ஸ். தமிழகம் தலையசைத்து எல்லோரையும் முணுமுணுக்க வைக்கும் அற்புதமான ஜந்து பாடல்களுடன் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் பாலாஜி. கே. மித்திரன். இந்தப் படத்தின் மூலம் இன்னொரு பரிமாணத்துடன் தனது வசனங்களால் பிரமிப்பூட்ட வருகிறார் வசனகர்த்தா வசந்த் செந்தில். பாடல்களை இயக்குனர் புதியவனும் ஏக்நாத் அவர்களும் எழுதியுள்ளனர். கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஆர் புதியவன்.

படப்பிடிப்புக் காலத்தில் சினிமாப் பயிற்சிப் பட்டறை ஒன்றை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக புதியவன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். அப்போது இந்தக் கலைஞர்களுடனான சந்திப்பு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட இருக்கிறது.