அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பதில் பொலிஸ் அதிபராக இளங்ககோன்

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய வெளிநாட்டுக்கான பயணம் ஒன்று மேற்கொண்டு ள்ளதை அடுத்தே பொலிஸ் நிர்வாக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

கொழும்பு இந்திப் பட விழா – அனைத்து சூப்பர் ஸ்டார்களும் புறக்கணிப்பு

amitabh-bachchan.jpgஉலகெங்கும் உள்ள தமிழர்களின் தொடர் கோரிக்கைகள், போராட்டங்களுக்கு மதிப்பளித்து கொழும்பு நகரில் நாளை ஆரம்பிக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்வதில்லை என்று இந்தித் திரையுலகின் அனைத்து சூப்பர் ஸ்டார் நடிகர்களும், நடிகைகளும் முடிவு செய்துள்ளதால், கொழும்புப் பட விழா களையிழந்துள்ளதாக இந்தியசெய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் நாளை ஆரம்பமாகி 3 நாட்களுக்கு இஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட வட இந்திய திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தமிழர் இயக்கம் களத்தில் இறங்கியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து இரத்தக்கறையுடன் உள்ள ராஜபக்சே அரசு, தனது சுய இலாபத்துக்காக இந்த விழாவை கொழும்பில் நடத்த அனுமதி கொடுத்துள்ளது. எனவே இதில் இந்திய திரையுலகினர் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி போராட்டத்தில் குதித்தது தமிழர் இயக்கம். மும்பையில் நூற்றுக்கணக்கான தமிழர்களைத் திரட்டி அமிதாப் பச்சன் வீட்டின் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதேபோல உலகெங்கும் உள்ள பல்வேறு தமிழர் அமைப்புகளும் பாலிவுட்டினர் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி மெயில்களை அனுப்பிக் குவித்தனர். தமிழகத்திலும் திரையுலகினர் யாரும் இதில் பங்கேற்கக்கூடாது என்ற கோரிக்கை வலுத்தது.

இதையடுத்து தமிழ்த் திரையுலகினர் மொத்தமாக, இதில் நாங்கள் யாரும் பங்கேற்க மாட்டோம், யாரும் பங்கேற்கவும் கூடாது. மீறி பங்கேற்றால் அவர்களது படங்கள் எதுவும் தென்னிந்தியாவில் திரையிடப் பட மாட்டாது என்று பகிரங்கமாக அறிவித்தனர்.

இதற்கு முன்பாகவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் உள்ளிட்ட தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார்கள் அனைவரும் பங்கேற்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். தங்களுக்கு அனுப்பப்பட்ட விழா அழைப்பிதழைப் பெறக் கூட இவர்கள் மறுத்து விட்டனர். இதேபோல தமிழர்கள் எங்களுக்கு முக்கியம் என்று கூறி மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கு சூப்பர் ஸ்டார் வெங்கடேஷ், கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் ஆகியோரும் அறிவித்து விட்டனர்.

தொடர் எதிர்ப்பால் உந்தப்பட்ட அமிதாப் பச்சன் தனது குடும்பத்தினர் யாரும் கொழும்பு செல்ல மாட்டார்கள் என்று கூறி விட்டார்.

தற்போதைய நிலவரப்படி அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன்,  ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், ஆமிர் கான், காத்ரீனா கைப், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், இம்ரான் கான் ஆகியோர் கொழும்பு பட விழாவுக்குச் செல்ல மாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது. விவேக் ஓபராய், லாரா தத்தா ஆகியோர் உள்ளிட்ட ஒரு சில 2ம் நிலை நடிகர், நடிகையர் மட்டுமே இந்த விழாவுக்கு போயுள்ளனர்.

மொத்த சூப்பர் ஸ்டார்களும் விழாவுக்குப் போகாததால் கொழும்புப் பட விழா களையிழந்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து எழுந்து சிறிய அளவிலான எதிர்ப்பு உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் பரவி, இந்தியாவின் முக்கிய திரையுலகமான பாலிவுட்டைப் புரட்டி முடக்கிப் போட்டிருப்பதைப் பார்த்து இலங்கை அரசும் அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.

ஆனால் கொழும்பு பட விழாவுக்குப் போனால், தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களை முழுமையாக பகைத்துக் கொள்ள நேரிடும். அது தங்களது பிசினஸுக்கு பெரும் அடியாக அமையும் என கருதியதால்தான் பாலிவுட் நடிகர், நடிகையர் கொழும்பு விழாவுக்குப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

தமிழ்க் கூட்டமைப்பை விரைவில் ஜனாதிபதி பேச்சுக்கு அழைப்பார் – பீரிஸ்

glpeiris.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விரைவில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சந்தித்து பேசவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இதற்கு முன்னதாக இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வொன்றை எட்டும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக அண்மையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தான் சந்திப்பொன்றை நடத்தியிருந்ததாகவும் பேராசிரியர் பீரிஸ் கூறினார். எனினும் இது பூர்வாங்க சந்திப்பொன்றாகவே இது அமைந்திருந்ததாகவும் தொடர்ந்தும் பேச்சுகளை முன்னெடுப்பது தொடர்பாக எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.  இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தலைவர்களுடன் பேசத் தயாராக இருப்பதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையிலேயே அதுபற்றி கேட்டபோது வெளிவிவகார அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுடன் உரையாடும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.அத்துடன், சகல தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுடனும் அரசாங்கம் விரைவில் பேச்சுகளை ஆரம்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை இந்திய உறவை மேம்படுத்த iifa உதவும் – சங்கக்கார, ஜெயசூர்ய

iifa-awards-logo.jpgகொழும்பில் எதிர்வரும் 03 – 05 வரையில் இடம்பெறும் சர்வதேச இந்திய திரைப்பட அகடமியின் விருது வைபவமானது iifa இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சிறப்பான உறவை பேணுவதற்கு பாரிய வாய்ப்பாக அமைந்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்காரவும் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யவும் நம்புகின்றனர்.

இலங்கையிலுள்ள திரைப்படத் துறையினருடன் பொலிவூட் திரைப்படத் துறையினர் உறவை மேம்படுத்துவதற்கு இது பாரிய வாய்ப்பாகக் காணப்படுகிறது. பொலிவூட்டின் மிகப்பெரிய விசிறிகளாக இலங்கையர்கள் உள்ளனர். இலங்கையில் திரைப்படத்துறை மிகவும் அபிமானமிக்கதொன்று என ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில் சனத் ஜெயசூர்ய கூறியுள்ளார்.

இந்தப் பாரிய நிகழ்வை இலங்கையர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது எமது நாட்டுக்கு மிகவும் நல்லது. அத்துடன், இரு நாடுகளினதும் உறவுக்கு இது மிகவும் சிறப்பானது என்று அவர் மேலும் கூறியுள்ளார். இலங்கைக் கிரிக்கெட் அணியினதும் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் இந்தியன் பிரீமியர் லீக் குழுவான கிங்ஸ்துடி பஞ்சாப்பினதும் கப்டனான குமார் சங்கக்கார இலங்கையில் பொலிவூட்டிற்கு அதிக வரவேற்பிருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

பொலிவூட்டுக்கு இலங்கையில் அதிக வரவேற்புண்டு. உலகம் பூராவும் செல்வாக்குள்ளது. பொலிவூட் எவ்வளவு பெரியதென்பதை உலகத்திலுள்ள ஒவ்வொருவரும் அவதானிப்பார்களென நான் நினைக்கிறேன். பொலிவூட்டின் நட்சத்திரங்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருக்கின்றார்கள் என்பதை உலகம் பூராவுமுள்ள ஒவ்வொருவரும் கவனிப்பார்களென நான் கருதுகிறேன் என்று சங்கக்கார கூறியுள்ளார்.

முன்னாள் தமிழ்ப்புலிகளின் சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு உதவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தன்னார்வ சேவை கிரிக்கெட் போட்டிகளில் கப்டன் பதவியை சங்கக்கார மீண்டும் வகிக்கவுள்ளார். “இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.அத்துடன், மனிதாபிமான விடயத்தில் மனதைத் தொடும் விடயமாக அமையும். இதன் மூலம் நூறு குடும்பங்கள் உள்ள கிராமம் கட்டியெழுப்பப்படவுள்ளது. களியாட்ட நிகழ்ச்சியானது ifa வின் மனிதாபிமான நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாகும். அத்துடன், சிறுவர்களுக்கான கிரிக்கெட்டானது சிறுவர் போராளிகளுக்கு மீண்டும் கல்வியூட்டத்தக்கதாக அமையும்.அவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கப்பட்டு வாழ்க்கையில் சிறப்பான வழியைக் கொண்டு செல்வதற்கான பாரிய முன்முயற்சியாக இது விளங்கும்”  என்று சங்கக்கார கூறியுள்ளார்.

2013 இல் இலங்கையில் பொதுநலவாய உச்சிமாநாடு மகாராணி எலிசபெத் கலந்துகொள்வார்

queen-elizabeth.jpgபொது நலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறுமெனவும் இம்மாநாட்டில் பிரிட்டிஷ் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கலந்துகொள்வாரென்றும் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.2013 இல் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டை மகாராணியார் ஆரம்பித்து வைப்பதற்காக இலங்கை வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதரக பேச்சாளர் டொமினிக் வில்லியம்ஸும் கூறியுள்ளார்.பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள். பொதுநலவாயத்தின் தலைவியான மகாராணியார் எலிசபெத் மாநாட்டை ஆரம்பித்து வைப்பது வழமையான நடைமுறையாகும்.

பொதுநலவாய அமைய உச்சி மாநாடு இரு வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறுகிறது.2011 இல் அவுஸ்திரேலியாவிலும் 2013 இல் இலங்கையிலும் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சமாதானம், பாதுகாப்பு, ஜனநாயகம், நல்லாட்சி, அபிவிருத்தி, கடன் முகாமைத்துவம், கல்வி, சுற்றாடல், பால் சமத்துவம், சுகாதாரம், மனித உரிமைகள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், சட்டம், பல்தரப்பு வர்த்தக விவகாரங்கள், சிறிய நாடுகளின் விவகாரங்கள்,  இளைஞர் விவகாரம் என்பன தொடர்பாக பொதுநலவாய அமைப்பு மாநாட்டில் ஆராயப்படுகிறது.இந்த அமைப்பில் 54 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அநேகமான உறுப்பு நாடுகள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளாகும்.

கட்டுநாயக்கா கொழும்பு கடுகதி ரயில் சேவை ஆரம்பம்

katu-colo.jpgகட்டு நாயக்காவுக்கும் கொழும்புக்கும் இடையிலான கடுகதி புகையிரத சேவையை நாமல் ராஜபக்ஷ எம்.பி.நேற்று செவ்வாய்க்கிழமை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.சர்வதேச இந்தியத் திரைப்பட அகடமியின் விருது வைபவம் எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பில் இடம்பெறவிருக்கிறது. இதில் கலந்துகொள்ள பொலிவூட்

நட்சத்திரங்கள் வருகைதர ஆரம்பித்திருக்கும் நிலையில் கட்டுநாயக்காகொழும்பு கடுகதி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இடம்பெற்ற ரயில் சேவை ஆரம்ப நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கொழும்புக்கான இந்த முதலாவது ரயில் பயணத்தில் அமைச்சரும் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இலங்கை அரசின் நிலைப்பாடு அமெரிக்காவால் பூரணமாக ஏற்பு – அபிவிருத்திக்கு கூடுதல் பங்களிப்பை வழங்கவும் தயார்

gl-hilary.bmp

இலங்கை அரசின் இன்றைய நிலைப்பாட்டை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அபிவிருத்திப் பணிகளுக்குக் கூடுதல் பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளதாகவும் வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் மீது அமெரிக்கா திருப்தியும் நம்பிக்கையும் கொண்டுள்ளதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் திருமதி ஹிலாரி கிளின்ரன் தெரிவித்ததாகவும் பேராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கான தமது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய அமைச்சர் பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் நேற்று செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் பீரிஸ்,

எந்தவொரு நாட்டினதும் உள்ளகப் பிரச்சினையின் போது முதன்மையான பொறுப்பு அந்த நாட்டுக்கே உண்டு என்று அமெரிக்கா கருதுகிறது. எமது நாட்டின் தேசிய பொறிமுறைக்குப் பூரண ஆதரவை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது. யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகளை இலங்கை அரசு மேற்கொள்ளும் விதத்தை அமெரிக்கா பாராட்டுகிறது.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த் தும் விடயத்தில் நாம் கடைப்பிடிக்கும் வழிமுறைகளைப் பாராட்டுகிறது. மக்க ளைப் பெளதிக ரீதியாக அன்றிப் பொரு ளாதாரச் சூழலில் குடியமர்த்துவதையே ஜனாதிபதி விரும்புகிறார். இந்தக் கருத்தியலை திருமதி கிளின்ரன் பாராட்டினார்.

பல தசாப்த காலமாக இல்லாதிருந்த ஜனநாயகக் கட்டமைப்பின் மீள்பிரவேசத் திற்கும் பாராட்டும் கிடைத்துள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், அரசியல் தீர்வொன்றுக்காக முன்னெடுக்கப்படும் ஆரம்பக் கட்ட முயற்சிகளையும் விசேடமாகத் தமிழ்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதையும் அமெரிக்கா வெகுவாகப் பாராட்டியதாகக் கூறினார்.

தமது அமெரிக்க விஜயத்தின் போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன், ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உயர்மட்ட ஆலோசகர் மற்றும் செனட் சபை உறுபபினர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், இலங்கையுடன் மிக நெருக்கமான உறவுகளைப் பேணி இலங்கையின் உள்கட்டமைப்பு வளங்களை மேம்படுத்த பங்களிப்புச் செய்வதுடன், பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளைக் கூட்டாக மேற்கொள்வதற்கும் காலம் கனிந்துள்ளதென்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஜீ – 15 நாடுகளின் தலைமைப் பதவியை ஜனாதிபதி ஏற்றுள்ளதோடு ஜீ – 8 நாடுகளுடன் நெருக்கமான கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதையும் அமெரிக்கா வரவேற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மின்சார துறை அபிவிருத்திக்கு ஐந்து பில்லியன் ரூபா ஒதுக்கீடு

மின்சாரத்துறை அபிவிருத்திக்காக இந்த வருடம் 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு கிழக்கில் மின்சார இணைப்புகள், மின் கட்டமைப்பு என்பவற்றை அமைக்க 121 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.எம். சி. பெர்டிணன்டஸ் கூறினார்.

அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துக் கூறிய அவர், வடக்கு அபிவிருத்திக்காக 36 மில்லியன் டொலர்கள் வெளி நாட்டு கடனுதவியாக கிடைத்து ள்ளது. இது தவிர அம்பாறையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 25 மில்லியன் உதவியுடன் மின்சார திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு ள்ளன. மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் சீன அரசின் 60 மில்லியன் டொலர் உதவியுடனும், வட மத்திய மாகாணத்தில் 53 மில்லியன் டொலர் செலவிலும் ஊவா மாகாணத்தில் 60 மில்லியன் டொலர் செலவிலும் பல மின்சாரத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.

முல்லை அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட பசில் இன்று விஜயம் – விவசாய திணைக்கள கட்டடத்துக்கும் அடிக்கல்

bazil.jpgமுல் லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டு அதனை துரிதப்படுத்தும் பொருட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் இன்று அங்கு விஜயம் செய்யவுள்ளனர்.

வட மாகாண அபிவிருத்திக்கான விசேட செயலணியின் தலைவர் என்ற வகையில் நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்களின் நிலைமையை பார்வையிடும் அவர் முதற் தடவையாக முல்லைத்தீவுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் பாரிய வேலைத் திட்டங்கள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இன்று விரிவாக ஆராயப்படவுள்ளதுடன் அதனை துரிதப்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கவுள்ளார். வடக்கிற்கான அவசர மீட்புத் திட்டத்தின் கீழ் நெடுங்கேணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை பார்வையிடவுள்ளார். வேலைத் திட்டத்திற்கான பணம் என்ற அமைப்பில் கிராம அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட திட்டங்களை ஆரம்பிக்கவுள்ள துடன் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கவுள்ளார்.

ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு விஜயம் செய்யும் அமைச்சர் விவசாயத்துறை அமைச்சினால் நிர்மாணிக்கப்படவுள்ள விவசாய அபிவிருத்தி திணைக்கள கட்டடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டவுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், திருமதி இமெல்டா சுகுமார் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

வடக்கு குடிநீர் விநியோக திட்டத்துக்கு நிதியுதவி வழங்க உலக வங்கி இணக்கம்

வட பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கவென அமைக்கப்படவிருக்கும் பாரிய உத்தேச கால்வாய் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் உலக வங்கியின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி கலாநிதி நெவ்கோ இஷிக்குமிடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

வட பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர்த் தேவையை நிவர்த்திக்கவென வடக்குக்கான பாரிய கால்வாய் அபிவிருத்தி திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் வவுனிக்குளம் நீர்த்தேக்கத்திற்கு இக் கால்வாய் ஊடாக நீர்கொண்டு செல்லப்பட விருக்கின்றது. இந்த அபிவிருத்தி திட்டம் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படவிருக்கின்றது.

இந்தடிப்படையில் இந்த கால்வாயை அமைப்பதற்கு தேவையான நிதியுதவியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள உலக வங்கி இக்கால்வாய் அமைப்புக்கான சாத்தியக் கூற்று அறிக்கையைத் தயாரிக்கத் தேவையான நிதியுதவி வழங்கவும் உலக வங்கி இணக்கம் தெரிவித்திருக்கின்றது.