ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விரைவில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சந்தித்து பேசவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இதற்கு முன்னதாக இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வொன்றை எட்டும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக அண்மையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தான் சந்திப்பொன்றை நடத்தியிருந்ததாகவும் பேராசிரியர் பீரிஸ் கூறினார். எனினும் இது பூர்வாங்க சந்திப்பொன்றாகவே இது அமைந்திருந்ததாகவும் தொடர்ந்தும் பேச்சுகளை முன்னெடுப்பது தொடர்பாக எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தலைவர்களுடன் பேசத் தயாராக இருப்பதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையிலேயே அதுபற்றி கேட்டபோது வெளிவிவகார அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுடன் உரையாடும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.அத்துடன், சகல தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுடனும் அரசாங்கம் விரைவில் பேச்சுகளை ஆரம்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.