கொழும்பில் எதிர்வரும் 03 – 05 வரையில் இடம்பெறும் சர்வதேச இந்திய திரைப்பட அகடமியின் விருது வைபவமானது iifa இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சிறப்பான உறவை பேணுவதற்கு பாரிய வாய்ப்பாக அமைந்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்காரவும் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யவும் நம்புகின்றனர்.
இலங்கையிலுள்ள திரைப்படத் துறையினருடன் பொலிவூட் திரைப்படத் துறையினர் உறவை மேம்படுத்துவதற்கு இது பாரிய வாய்ப்பாகக் காணப்படுகிறது. பொலிவூட்டின் மிகப்பெரிய விசிறிகளாக இலங்கையர்கள் உள்ளனர். இலங்கையில் திரைப்படத்துறை மிகவும் அபிமானமிக்கதொன்று என ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில் சனத் ஜெயசூர்ய கூறியுள்ளார்.
இந்தப் பாரிய நிகழ்வை இலங்கையர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது எமது நாட்டுக்கு மிகவும் நல்லது. அத்துடன், இரு நாடுகளினதும் உறவுக்கு இது மிகவும் சிறப்பானது என்று அவர் மேலும் கூறியுள்ளார். இலங்கைக் கிரிக்கெட் அணியினதும் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் இந்தியன் பிரீமியர் லீக் குழுவான கிங்ஸ்துடி பஞ்சாப்பினதும் கப்டனான குமார் சங்கக்கார இலங்கையில் பொலிவூட்டிற்கு அதிக வரவேற்பிருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பொலிவூட்டுக்கு இலங்கையில் அதிக வரவேற்புண்டு. உலகம் பூராவும் செல்வாக்குள்ளது. பொலிவூட் எவ்வளவு பெரியதென்பதை உலகத்திலுள்ள ஒவ்வொருவரும் அவதானிப்பார்களென நான் நினைக்கிறேன். பொலிவூட்டின் நட்சத்திரங்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருக்கின்றார்கள் என்பதை உலகம் பூராவுமுள்ள ஒவ்வொருவரும் கவனிப்பார்களென நான் கருதுகிறேன் என்று சங்கக்கார கூறியுள்ளார்.
முன்னாள் தமிழ்ப்புலிகளின் சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு உதவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தன்னார்வ சேவை கிரிக்கெட் போட்டிகளில் கப்டன் பதவியை சங்கக்கார மீண்டும் வகிக்கவுள்ளார். “இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.அத்துடன், மனிதாபிமான விடயத்தில் மனதைத் தொடும் விடயமாக அமையும். இதன் மூலம் நூறு குடும்பங்கள் உள்ள கிராமம் கட்டியெழுப்பப்படவுள்ளது. களியாட்ட நிகழ்ச்சியானது ifa வின் மனிதாபிமான நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாகும். அத்துடன், சிறுவர்களுக்கான கிரிக்கெட்டானது சிறுவர் போராளிகளுக்கு மீண்டும் கல்வியூட்டத்தக்கதாக அமையும்.அவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கப்பட்டு வாழ்க்கையில் சிறப்பான வழியைக் கொண்டு செல்வதற்கான பாரிய முன்முயற்சியாக இது விளங்கும்” என்று சங்கக்கார கூறியுள்ளார்.