அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

11 புலிகளின் உடல்கள் ஐ.சி.ஆர்.சி. ஊடாக வன்னிக்கு

red_cross.jpg
வவுனியாவிலிருந்து நீண்ட நாட்களின் பின்னர் வன்னிக்கு விடுதலைப்புலிகளின் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. வவுனியா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் 11 உடல்கள் நேற்று வியாழக்கிழமை காலை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் (ஐ.சி.ஆர்.சி.) வன்னிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

கடந்த சில தடவைகள் வவுனியா, மன்னார் மற்றும் அநுராதபுரம் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த புலிகளின் உடல்கள், வன்னியில் புலிகளுடனான தொடர்புகள் சரிவர இல்லாத காரணத்தால் ஐ.சி.ஆர்.சி.யினால் எடுத்துச் செல்லப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தந்த ஆஸ்பத்திரிகளில் வைக்கப்பட்டிருந்த புலிகளின் உடல்கள் அந்தந்தப் பகுதிகளிலேயே அடக்கம் செய்யப்பட்டன.

இந்த நிலையில் மீண்டும் (22) முதல் ஐ.சி.ஆர்.சி.யினர் வன்னிக்கு விடுதலைப்புலிகளின் உடல்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதேநேரம், படையினரால் மேலும் பத்து புலிகளின் உடல்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஆளணி, நிருவாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

karuna.jpgகல்முனை பிரதேச செயலகங்களில் தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தித்தல் மற்றும் நிர்வாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் முரளிதரன் எம்.பி. மேற்கொண்டுள்ளார். 

இது தொடர்பான விசேட கூட்டமொன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.  பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை உரிய முறையில் முழுமையாக நிர்வகிக்கத்தக்க வகையிலும் செயற்படுத்தும் வகையிலும் ஆளணி நியமனம் மற்றும் நிர்வாக உட்கட்டமைப்பு செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களை நிறைவுபடுத்தி செயற்படுவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டன. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான இனியபாரதி உட்பட பல கிராம பெரியார்களும், கல்விமான்களும் கலந்துகொண்டனர்.

ஊடக அடையாள அட்டை வைத்திருந்த புலிகளின் உறுப்பினர் விமான நிலையத்தில் கைது

handcuff.jpgஊடக அடையாள அட்டை வைத்திருந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடகவியலாளருக்கான அடையாள அட்டையை தவறான முறையில் பயன்படுத்தி சிங்கப்பூர் செல்ல முயன்ற போதே அவர் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் (22) காலை நடைபெற்றது. அமைச்சர் மேலும் தகவல் தருகையில்:-
கொழும்பு 7ல் இயங்கும் முக்கிய நிறுவனம் ஒன்றின் மூலமாகவே இந்த ஊடக அடையாள அட்டை தனக்குக் கிடைத்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பிரகாஷ் சக்திவேலுப்பிள்ளை ஆரம்ப விசாரணையின் போது தெரிவித்துள்ளார். சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றமையாலும் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படலாம் என்ற காரணத்தினாலும் இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் மற்றும் நிறுவனம் தொடர்பான மேலதிக விபரங்களை தெரிவிக்க முடியாது என்று தெரிவித்த அமைச்சர் முழுமையான விசாரணைகளுக்குப் பின்னர் இன்னும் ஓரிரு தினங்களில் முழு விபரங்களையும் ஊடகங்களுக்குத் தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்தார். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு வழங்கியுள்ள சலுகைகளை பயங்கரவாதிகள் தமக்குச் சாதகமாக பயன்படுத்த முயன்று வருவதால் ஊடகவியலாளர்கள் மிகவும் விழிப்புடனும், அவதானத்துடனும் செயற்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், தாம் சந்திக்கும் புதிய ஊடகவியலாளர்கள் தொடர்பாக சந்தேகம் ஏதும் நிலவும் பட்சத்தில் ஏனையோரின் நன்மையை கருத்திற்கொண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறும் அமைச்சர் சகல ஊடகவியலாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

கின்னஸ் சாதனைக்கு ரணில் முயற்சி சபையில் தினேஷ் கிண்டல்

denees.jpgஎதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது பெயரையும் கட்சியின் பெயரையும் கின்னஸ் புத்தகத்தில் பதிய வைக்க முயற்சித்து வருவதாக அரசதரப்பு பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை வாய் மூல விடைக்கான வினாவொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் கூறியதாவது;

எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக 15 தேர்தல்களில் தோல்வி கண்டவர். அவரது கட்சியான ஐ.தே.க. அரசுக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதும் வாபஸ் பெறுவதும் சாதனையாகிறது.  இதனடிப்படையிலேயே ரணில் தனது பெயரையும் கட்சியின் பெயரையும் “கின்னஸ்’ புத்தகத்தில் பதிய வைக்க முயற்சித்து வருகின்றார். விரைவில் அவரது ஆசை நிறைவேறட்டும். அரசுக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்த ஐ.தே.க.வினர் அதனை விவாதத்திற்கு எடுத்திருக்க வேண்டும். ஆனால் அரசைப் பற்றி குறை கூறவோ குற்றம் சாட்டவோ எதுவும் இல்லாததாலேயே அவர்களால் அதனை விவாதத்திற்கு எடுக்க முடியவில்லை. இதனால்தான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதும் வாபஸ் பெறுவதுமாக ஐ.தே.க.தடுமாறிக் கொண்டிருக்கிறது.

மன்னார் கடற்பரப்பில் விரைவில் எண்ணெய் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

இலங்கை கடல்பரப்பில் எண்ணெய் அகழ்வு வேலைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இந்திய அரசின் உதவியுடன் இயங்கும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. புதுடில்லியில் இது தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் அகழ்வு வேலைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் வீ.ஆர்.எஸ்.சர்மா மற்றும் இந்திய எண்ணெய் அமைச்சர் முரளி டீ.யூராவையும் பெற்றோலிய வள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி சந்தித்து பேசிய போது இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, மன்னார் வளைகுடாப் பகுதியின் வடமேற்குப் பகுதியில் எண்ணெய் அகழ்வுகளை மேற்கொள்வதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே பகிரங்க கேள்விப் பத்திரம் கோரல் மூலம் இந்திய கெயரன் நிறுவனம் ஒரு எண்ணெய் வளப்பகுதியை அகழ்வுக்காக பெற்றுள்ளது.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஆவணங்களையும் கெயரன் நிறுவனம் தயார் செய்துள்ளது.

உண்மையான பொருளாதார நிலைமையை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வலியுறுத்தல்

sl-parlimant.jpgநாட்டின் நிதி மற்றும் பொருளாதார நிலைவரங்கள் பற்றிய உண்மையான தகவல்களை அரசாங்கம் மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டுமென ஜே.வி.பி.யின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான சுனில் கந்துன்நெத்தி புதன்கிழமை சபையில் வயுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று நாட்டின் நிதி நிலைவரங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை விவாதத்துக்குகென சபைக்கு சமர்ப்பித்து பேசும் போதே கந்துன்நெத்தி எம்.பி.இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்;

“நாடு இன்று பெரும் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. சிலர் இதை கண்டுகொள்வதாகவும் இல்லை, அதற்கு தயாராகவும் இல்லை. வடக்கை மீட்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டிருக்கும் வேளையில், இரண்டாவது மிகப் பெரிய யுத்தமான பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வு காண்பதில் பொறுப்பாளர்கள் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். காரணம் பொருளாதார நெருக்கடி என்பது வடக்கு, தெற்கு என பாகு பாடில்லாமல் சகல பகுதிகளிலும் வாழும் மக்களையும் பாதிக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் தலையில் சுமந்து வந்த திறந்த பொருளாதாரக் கொள்கையே இன்றைய வீழ்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. ஆடைக் கைத்தொழிற்சாலையொன்று தனது ஊழியர்களுக்கு விடுத்திருக்கும் அறிவித்தலில் இலங்கையிலுள்ள 850 ஆடைத்தொழிற்சாலைகளில் 300 தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டதாகவும் இவற்றில் 2008 ஆம் ஆண்டு மாத்திரம் 100 தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இன்று நாட்டின் தேயிலை மற்றும் இறப்பர் போன்ற பெருந்தோட்ட துறை இரத்தினக்கல் வர்த்தகம், சுற்றுலாத்துறை என பல துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. இதனால் அந்நிய செலாவணி வருமானம் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த வருடத்தில் எரிபொருள் உள்ளிட்ட பருப்பு,சீனி,அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யவென பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அந்நிய செலாவணி கையிருப்பானது 3 வருடத்துக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது.

இன்று ஏற்பட்டிருக்கும் நிதி, பொருளாதார நெருக்கடிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை எமக்கில்லை. எனவே, அரசாங்கம் நாட்டின் நிதி, பொருளாதார நிலைமைகள் பற்றிய உண்மையான தகவல்களை மக்களுக்கு வெளியிட வேண்டும். இதனை எமது கட்சி சார்பான யோசனையாக நான் அரசாங்கத்துக்கு முன் வைக்கிறேன் என்றார்.

பாதுகாப்புச் செயலர், இராணுவத் தளபதிக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பாணை

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய இருவரையும் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மனித உரிமைகள் சரத்துக்கு முரணாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் செய்த முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பாதுகாப்புச் செயலாளரையும் இராணுவத் தளபதியையும் ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகுமாறு கேட்டுள்ளது.

இன்றைய விசாரணையின் போது முறைப்பாட்டாளரான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன சார்பில் சட்டத்தரணி சந்திரபால குமாரகே ஆஜராகவிருப்பதாகவும் மேலும் சில சட்டத்தரணிகள் தன்னிச்சையாக ஆஜராகவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்றைய விசாரணையை அவதானிப்பதற்காக மனித உரிமைகள் அமைப்புகள், பொது அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் சமயத் தலைவர்கள் பலரும் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ளவிருக்கின்றனர்

தென்னிலங்கையில் எந்த நேரத்திலும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் -அரசு எச்சரிக்கை

kkhaliya.jpgவிடுதலைப் புலிகள் தலைநகர் கொழும்பிலும் தென்னிலங்கையில் முக்கிய இலக்குகளிலும் எந்த நேரத்திலும் தாக்குதல்களை நடத்தலாமென எச்சரிக்கை விடுத்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு, சுதந்திர தினக் கொண்டாட்ட காலப்பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ள புலிகள் திட்டமிட்டிருப்பதாக புலனாய்வுத்துறைக்கு தகவல்கள் கிட்டியிருப்பதாகவும் தெரிவித்தது. வன்னியில் படு தோல்வியடைந்து விட்ட நிலையில், புலிகள் தெற்கில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் ஏற்கனவே 16 தற்கொலை குண்டுதாரிகள் கொழும்புக்குள் நுழைந்துள்ளதாகவும் மக்கள் விழிப்புடனிருக்க வேண்டுமெனவும் பாதுகாப்புத் தரப்பு எச்சரித்துள்ளது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு நிலைமைகளை விளக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய பாதுகாப்புப் பேச்சாளரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்படவிருக்கும் சுதந்திர தினத்தன்றோ, அதற்கு இடைப்பட்ட காலத்திலோ கொழும்பில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தும் நோக்கில் விடுதலைப்புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகள் 16 பேர் கொழும்புக்குள் ஊடுருவியுள்ளனர். இவர்களில் இருவர் இம்மாத ஆரம்பத்திலேயே பலியாகிவிட்டனர்.மீதமுள்ள 14 பேரும் கொழும்புக்குள்ளேயோ அல்லது தலைநகரை அண்மித்த பகுதிகளிலேயோ பதுங்கியுள்ளனர். எந்த வேளையிலும் கொழும்பில் முக்கிய இலக்குகளை குறிவைத்து புலிகள் தாக்குதல்களை நடத்தக் கூடும். அதேசமயம், கொழும்புக்கு வெளியேயும் முக்கிய நிலைகளைத் தாக்க புலிகள் திட்டமிட்டிருப்பதாக புலனாய்வுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கம் தலைநகரிலும் தெற்கின் முக்கிய பகுதிகளிலும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது. கொழும்புக்குள் பிரவேசிக்கும் சகல நுழைவாயில்களிலும் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் உள்வரக்கூடிய சகல வாகனங்களும் பொது மக்களும் கடும் சோதனைக்குட்படுத்தப்படுவர். அதே சமயம் கொழும்பை அண்மித்த பகுதிகளிலும் விசேட சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள், பயணிகள் சோதனைக்குள்ளாக்கப்படும். பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுகின்ற போதிலும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் பொது மக்கள் இக்காலப் பகுதியில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.

புலிகளின் பிரதான கட்டுப்பாட்டு நிலையம் தர்மபுரத்தில் கண்டுபிடிப்பு

_army.jpg
முல்லைத்தீவு, தர்மபுரம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் நடவடிக்கைகளுக்கான பிரதான கட்டுப்பாட்டு நிலையத்தை பாதுகாப்புப் படையினர் கண்டு பிடித்துள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புலிகள் தங்களது சகல நடவடிக்கைகளுக்கும் இதனையே பிரதான கட்டுப்பாட்டு நிலையமாகப் பயன் படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தலைமையில் நேற்று நடைபெற்றது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில் குறிப்பிட்டதாவது,
முல்லைத்தீவை நோக்கி நாளுக்கு நாள் முன்னேறி வரும் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் புலிகளின் முக்கிய பிரதேசமாக விளங்கிய தர்மபுரத்தை கைப்பற்றினர். இந்தப் பிரதேசத்தை சுற்றி வளைத்து பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவிந்திர டி சில்வா தலைமையிலான படைப்பிரிவினர் புலிகளின் நடவடிக்கைகளுக்கான பிரதான கட்டுப்பாட்டு நிலையத்தை கண்டுபிடித்துள்ளனர். சுமார் 80 x 40 அடி அளவிலான பிரதேசத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் கொங்கிரீட்டினால் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாட்டு அறைக்குள் சகல வசதிகளும் காணப்படுகின்றன.

இலங்கையின் வரைபடங்களுடன் ஒவ்வொரு பிரதேசத்தை தெளிவாக சித்தரிக்கும் வரைபடங்களும் தனித்தனியாக ஒட்டப்பட்டிருந்தன. இராணுவத் தலைமையகம் உட்பட இலங்கை முழுவதிலும் உள்ள இராணுவ மற்றும் முப்படைகளின் முகாம்கள், படைப் பிரிவுகள், படையணிகளின் தலைமையகங்கள் சுட்டிக்காட்டப்பட்ட வரைபடங்கள், புலிகளின் முக்கிய பிரதேசங்கள், முகாம்கள், இராணுவத்தினதும் புலிகளினதும் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை காண்பிக்கும் வரைபடங்களும் இந்த கட்டுப்பாட்டு அறை முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அருகில் புலிகளின் செய்மதி தொலைத்தொடர்பு நிலையம் மற்றும் பிரதான விரிவுரை மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. புலிகளின் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு செல்வதற்கு மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் வழிஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரத்தை புலிகளிடமிருந்த விடுவித்த படையினர் இங்கு அமைக்கப்பட்டிருந்த குண்டு தயாரிக்கும் பிரதேசத்தையும் மூன்று மாடிகளைக் கொண்ட பாரிய நிலக்கீழ் முகாம் ஒன்றையும் கைப்பற்றியிருந்தனர். இந்த முகாம்களுக்கு அண்மித்த பிரதேசத்திலேயே இந்த கட்டுப்பாட்டு நிலையமும் அமைந்துள்ளது.

இதேவேளை முல்லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் பல முனைகளில் படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. இராணுவத்தின் 59வது படைப் பிரிவினர் சிலாவத்தைக்கு வட கிழக்கு கரையோரப் பிரதேசத்திலும் 58வது படைப் பிரிவினர் ஏ-34 வீதிக்கு வடக்கே புளியன்பொக்கரை ஏ-34 வீதிக்கு தெற்காக விசுவமடு பிரதேசத்திலும் இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் இராமநாதபுரத்திற்கு கிழக்கிலும், விசுவமடுவுக்கு மேற்கிலும் படை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதேபோன்று இராணுவத்தின் நான்காவது செயலணியினர் புதுக்குடியிருப்பு தெற்கிலும் இரண்டாவது செயலணியினர் உடையார் கட்டுக்குளம் பிரதேசத்திலும் மூன்றாவது செயலணியினர் கல்மடு குளம், உடையார் கட்டுக்குளம் பகுதிகளிலும் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சுண்டிக்குளத்தைக் கைப்பற்றிய இராணுவத்தின் 55வது படைப் பிரிவினர் தற்பொழுது அதன் தென் பகுதி ஊடாக முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வருகின்றனர். இவ்வாறு இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.          

61 ஆவது சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாட அரசாங்கம் தீர்மானம்

lanka_flag.jpgஇலங்கையின்
61 ஆவது சுதந்திர தினத்தை வெகுவிமரிசையாகக் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுதந்திரதின ஏற்பாடுகளை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்டு வருவதாக அமைச்சின் செயலாளர் பீ.திசாநாயக்கா தெரிவித்திருக்கின்றார்.

61 ஆவது சுதந்திர தினத்தையொட்டி பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், அனைத்து மதவழிபாட்டுத் தலங்களிலும் சமயவைபவங்களும், வழிபாட்டு நிகழ்வுகளையும் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலகங்களுக்கும் அமைச்சு சுற்று நிருபங்களை அனுப்பிவைத்துள்ளது.

இதேவேளை, பெப்ரவரி 3 ஆம் திகதியும் சுதந்திர தினமான 4 ஆம் திகதியும் அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசியக்கொடிபறக்கவிடப்பட வேண்டுமெனவும் கட்டிடங்களில் மின் அலங்காரங்களைச் செய்யுமாறும் அமைச்சின் செயலாளர் திசாநாயக்கா அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பிரதான சுதந்திர தினக் கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடர்பாக வார இறுதியில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.