விடுதலைப் புலிகளை நீண்டகாலத்துக்கு ஓரம்கட்டிவைத்திராமல் தனது மனிதாபிமான நடவடிக்கைகளை இராணுவம் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. இந்தத் தருணத்தில் நடவடிக்கைகளை எடுக்காமல் விடுவது படையினருக்கு அதிக இழப்புகளை ஏற்படுத்திவிடுமெனவும் ஏனெனில் பொதுமக்கள் மத்தியில் பதுங்கியிருந்து புலிகள் தாக்குதல்களை நடத்தும் சாத்தியம் இருப்பதாகவும் தேசிய சுதந்திரமுன்னணித் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மோதல்களுக்கிடையில் பொதுமக்கள் சிக்கி விடுவார்கள் என்பதற்காக அவர்களை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை இராணுவம் நிறுத்திவிடக்கூடாது. யாருக்காவது பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் இந்த யுத்த சூழ்நிலையில் அது தவிர்க்கமுடியாமல் செலுத்தப்படும் விலையென கருதப்படவேண்டும்.புலிகளை அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து வெளியேற்றுவதற்கான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இதுவே தருணமாகும். இப்போது அவர்கள் 50 சதுரகிலோ மீற்றர் பரப்புக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது பொதுமக்களின் இறப்புகளை தவிர்ப்பதற்காக தியாகங்களை செய்யும் நிர்ப்பந்தத்திற்குள் படையினர் தள்ளப்பட்டுள்ளனர். இந்த யுத்தம் விரைவில் முடித்துவைக்கப்படவேண்டும் என்று ஆங்கிலப்பத்திரிகையொன்றுக்கு விமல்வீரவன்ச கூறியுள்ளார்.
நடவடிக்கைகளுக்கு காலம் எடுப்பதால் சர்வதேச சக்திகள் தலையிட்டு புலிகளுக்கு புதிய மூச்சை அளிக்க வழிசமைப்பதாக அமைந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசும் புலிகளும் தற்காலிக மோதல்நிறுத்தத்துக்கு செல்லவேண்டுமென ஐ.நா.வும் அமெரிக்காவும் கோரிக்கை விடுத்திருப்பதை விமர்சித்திருக்கும் தேசிய சுதந்திர முன்னணி அத்தகைய நடவடிக்கை புலிகள் தம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இடமளிப்பதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.
தமது பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளிவர புலிகள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். அதனால் யுத்த நிறுத்தம் இந்தத் தருணத்தில் நோக்கத்தை நிறைவேற்றாது என்றும் வீரவன்ச கூறியுள்ளார். அகப்பட்டுள்ள பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாகவும் இந்தியா விடுத்திருக்கும் கோரிக்கை தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்திருக்கும் விமல்வீரவன்ச அந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கான தேவை இல்லை என்று கூறியுள்ளார்.
அந்தமாதிரியான பொறிமுறைக்கான தேவை ஏற்படவில்லை. ஒரேதடை புலிகள்தான். அவர்களை தாம் அழிக்கவேண்டும் என்று வீரவன்ச தெரிவித்துள்ளார்