அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வவுனியாவில் பாடசாலைமீது மரக்கிளை முறிந்து விழுந்து ஆசிரியையும் மாணவரும் பலி -15 மாணவர்கள் காயம்

fallen-tree-branch.jpgவவுனியா மகா றம்பைக்குளம் சிறிராமபுரம் அரசினர் பாடசாலை மைதனாத்தில் மர நிழலில் மாணவர்களுக்கு வகுப்பு நடைபெற்றபோது அந்த மரத்தின் கிளையொன்று முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியை ஒருவரும் மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளார்கள். இந்தச் சம்பவத்தில் 15 மாணவர்கள் காயமடைந்துள்ளார்கள்.

காயமடைந்த மாணவர்கள் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

இறந்தவர்கள் இருவரது உடல்களும் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஆசிரியை செல்வி கே.ராகினி (29) யாழ்ப்பாணம் பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து. வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அந்தப் பாடசாலைக்குச் சென்று நேரடியாகப் பார்வையிட்டுள்ளார். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது காற்று எதுவும் வீசாத பொதிலும், அந்தப் பெரிய மரத்தின் பெரிய கிளையொன்று திடீரென முறிந்து விழுந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவி்த்துள்ளனர்.

வழமையாக இந்த மரத்தடியில் ஆசிரியர்கள் வகுப்புக்கள் நடத்துவதென்றும் வழமைபோல இன்றும் அவ்வாறு வகுப்பு நடைபெற்ற போது இந்த அனரத்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை!

jaffna_a9.jpgயாழ்ப் பாணத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களையும், ஏனைய பொருட்களையும் சாதாரண விலை மட்டத்திற்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய கொழும்பிலுள்ள தனியார் வர்த்தகத் துறையினர் யாழ்ப்பாணத்திற்குத் தாராளமாகச் சென்று வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான அமைதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி கொழும்பிலுள்ள தனியார் வர்த்தகத் துறையினரை விசேட பேச்சுவார்த்தையொன்றுக்கு வருமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.  இந்தச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை கொழும்பு உலக வர்த்தக மையக் கட்டடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து உற்பத்தி பொருட்களும் தட்டுப்பாடின்றி குடாநாட்டில் கிடைப்பதற்கு வழி செய்யும் வகையில் தனியார் வர்த்தகருடனான இந்தச் சந்திப்பை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தனது அலுவலகத்தில் நடத்தவுள்ளார்.

யாழ். குடாநாட்டு மக்கள் சித்திரைப் புதுவருட கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அடுத்த புதன் கிழமையன்று ஏ-9 பாதையூடாக பொருட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். புத்தாண்டையிட்டு 100 லொறிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்படவுள்ளன. ஏ-9 ஊடாக பொருட்களை எடுத்துச்செல்ல தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 23 ஆம் திகதி முதல் யாழ்தேவி தாண்டிக்குளம் வரையில் சேவையிலீடுபடும்.-அமைச்சர் டளஸ் அழகப்பெரும தகவல்

bati-trnco.jpgயாழ்தேவி ரயில் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி முதல் வவுனியாவுக்கும் அப்பால் தாண்டிக்குளம் வரையில் சேவையிலீடுபடுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். யாழ் தேவி ரயில் பாதை அமைப்புக்கு நிதியுதவி வழங்குவதற்காக கொழும்பு பல்கலைக்கழக மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

யாழ். ரயில் பாதையை அமைக்கும் பணியில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றனர். இத்திட்டத்தை நிறைவேற்ற பொது மக்களின் நிதி உதவியும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.

ஒருபோதும் நிறைவேற்ற முடியாது எனக்கூறப்பட்ட திட்டங்களை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் ஒரு இந்திய வைத்தியக்குழு இலங்கை வர ஏற்பாடு

pullmottaiindiadoctors1.jpgதிருகோணமலை புல்மேட்டைப் பிரதேசத்தில் செயற்படும் நடமாடும் இந்திய ஆஸ்பத்திரிக்கு மேலும் ஒரு வைத்தியக் குழுவை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கையின் வடக்கில் இடம்பெயர்ந்துள்ள பொது மக்களுக்குத் தேவையான சகல மருந்துப் பொருட்களும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

‘தவறான செய்திகளை பரப்பாதீர்கள்’ -பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

யால சரணாலய பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளி லும் கடுமையான பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்ப ட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

யால பாதுகாப்பற்ற பகுதியாக உள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்தியை முழுமையாக நிராகரித்த அவர் அப்பகுதி கிராமங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதே வேளை, கடந்த சில தினங்களில் புலி உறுப்பினர்கள் யால சரணாலய பகுதிகளில் தாக்குதல் நடத்தியதை அடுத்து அப்பகுதியின் பாதுகாப்பு முழுமையாக பலப் படுத்தப்பட்டுள்ளதாகவும் புலிகள் தாக்குதல் நடத்துவர் என அஞ்சத் தேவையில்லை எனவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

வடக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளை வெற்றி கரமாக முன்னெடுத்துவரும் அரசாங்கம் நாட்டின் பாது காப்பு தொடர்பில் அதிக கரிசனை காட்டி வருவதாகவும் யால பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல திட்ட ங்களை முன்னெடுத்துள்ளதாகவும் ஊடக நிலையம் கூறியது.

யால பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் காணப்படுவதாக தவறான செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஊடக மத்திய நிலையம் கோரியுள்ளது. யால சரணாலயத்தை அண்மித்த பகுதிகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தொடர்ந்து தேடுதல் நடத்தி வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகப் பிரயாணம் செய்வதில் மக்கள் சிரமம்

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து நாட்டின் தென்பகுதிகளுக்குச் செல்லும் அரச உயரதிகாரிகள், தமது வாகனங்களில் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக பிரயாணம் செய்ய முடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக பொது போக்குவரத்து வாகனங்கள் எதுவும் பிரயாணம் செய்ய முடியாது என்ற பாதுகாப்பு நடைமுறை அமுலில் இருந்து வருவது தெரிந்ததே. எனினும் அரச கடமையின் நிமித்தம் நாட்டின் தென்பகுதிகளுக்குச் செல்கின்ற திணைக்களத் தலைவர்கள் முக்கிய அதிகாரிகள் தமது வாகனங்களில் இந்த சோதனைச்சாவடி ஊடாகச் சென்று வருவதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி இப்போது மறுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் முக்கிய அலுவல்களுக்காக வாகனங்களில் செல்ல வேண்டிய அரச அதிகாரிகள், ஊழியர்கள் தமது பிரயாணத்தை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது.பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்தப் புதிய நடைமுறை அமுல்படுத்தப்படுவதாகப் பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

1694 பொதுமக்கள் வருகை

_mullai_1.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்த மேலும் 1694 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவினரிடம் 1694 சிவிலியன்களும் தஞ்சமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை 61,467 ஆக அதிகரித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஒரு இலட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க ஏற்பாடு

இவ் வருடத்தில் மேலும் ஒரு இலட்சம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்க உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு நேற்று தெரிவித்தது. மின்சார இணைப்புப் பெறுவதற்கு விண்ணப்பித்து 2 வாரத்தினுள் மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ. டீ. ஜே. செனவிரத்ன மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

2 வாரத்தினுள் மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தின் மூலம் மக்கள் எதுவித இடைஞ்சலும் இன்றி மின்சார வசதி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. சகல மக்களுக்கும் மின்சார வசதி அளிக்க அமைச்சு தீர்மானித்துள்ளதோடு மின்சார இணைப்பு பெறுவதில் உள்ள தனிப்பட்ட மற்றும் வேறு காரணங்களுக்கு பிரதேச செயலகங்களினூடாக துரித தீர்வு காணவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சு மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக கடந்த வருடம் 80 ஆயிரம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. இவற்றில் பிரச்சினைகள் உள்ள சுமார் 2600 விண்ணப்பங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதோடு அது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி மின் இணைப்பு வழங்குவதில் வீடுகளுக்கு அருகில் உள்ள பாதைகள் தொடர்பான பிரச்சினைகள் பிரதேச செயலகங்களின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளன.

சகல மக்களுக்கும் மின்சார வசதி அளிக்கும் வகையில் கிராமிய மின்சாரத் திட்டங்கள் பெருமளவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு ஈரான், சீடா மற்றும் ஆசிய அபிவிருத்தி கிராமிய மின்சார திட்டம் என்பவற்றினூடாகவும் மேலும் பல திட்டங்கள் முன்னெடுத்து வருவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது. இவற்றினூடாக இந்த வருடத்தினுள் ஒரு இலட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

மின்சார நெருக்கடி ஏற்படுவதை தடுக்கும் வகையில் பல பாரிய மின்சாரத் திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு அவை 2012 ஆம் ஆண்டுக்கு முன் நிறைவு செய்யப்பட உள்ளன. இதனூடாக மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க முடியும் என மின்சக்தி அமைச்சு கூறியது.

இத்திட்டம் பூர்த்தியடையும் நிலையில் உள்ளது. சுண்ணாகம் 30 மெகா வோர்ட் மின்சாரத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதனூடாக யாழ். குடா மக்களுக்கு தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளது.

புதுமாத்தளனில் இருந்து மேலும் நோயாளர்கள் கப்பலில் புல்மோட்டை வந்தனர்

green-ocean.jpgகிறீன் ஓசன் கப்பல் மூலம் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து மற்றும் ஒரு தொகுதியினர் திங்கட்கிழமை, 30 மார்ச் 2009 புல்மோட்டைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
544 பேர் இவ்வாறு கப்பல் மூலம் கொண்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த மற்றும் அவர்களின் உறவினர்கள் இந்தக் குழாமில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திங்கட்கிழமை பிற்பகல் புதுமாத்தளனிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல்  புல்மோட்டையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார் அமைச்சர் இலங்கை வருகை

கட்டார் நாட்டின் அபிவிருத்தி க்கான இராஜாங்க அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழு இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை மறுதினம் (2ம் திகதி) இலங்கை வரவுள்ளது.

இக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளி விவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, உட்பட முக்கிய அமைச்சர்கள் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இப்பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளுக்கு மிடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்படுமென தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் கட்டாரின் முதலீடுகளை இலங்கையில் அதிகரிப்பது குறித்தும், அதற்கான சாத்தியப் பாடுகள் தொடர்பாகவும் கட்டார் அமைச்சர் கூடிய கவனம் செலுத்தவிருப்பதாகவும் வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.