வவுனியா மகா றம்பைக்குளம் சிறிராமபுரம் அரசினர் பாடசாலை மைதனாத்தில் மர நிழலில் மாணவர்களுக்கு வகுப்பு நடைபெற்றபோது அந்த மரத்தின் கிளையொன்று முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியை ஒருவரும் மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளார்கள். இந்தச் சம்பவத்தில் 15 மாணவர்கள் காயமடைந்துள்ளார்கள்.
காயமடைந்த மாணவர்கள் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
இறந்தவர்கள் இருவரது உடல்களும் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஆசிரியை செல்வி கே.ராகினி (29) யாழ்ப்பாணம் பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து. வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அந்தப் பாடசாலைக்குச் சென்று நேரடியாகப் பார்வையிட்டுள்ளார். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது காற்று எதுவும் வீசாத பொதிலும், அந்தப் பெரிய மரத்தின் பெரிய கிளையொன்று திடீரென முறிந்து விழுந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவி்த்துள்ளனர்.
வழமையாக இந்த மரத்தடியில் ஆசிரியர்கள் வகுப்புக்கள் நடத்துவதென்றும் வழமைபோல இன்றும் அவ்வாறு வகுப்பு நடைபெற்ற போது இந்த அனரத்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
MANITHA NEYAN
AM SADDEN BY THIS NEWS EVEN GOD NOT FAVOR FOR US.