பொரு ளாதார ரீதியில் நாட்டை அதலபாதாளத்துக்குள் தள்ளிவிட்டிருக்கும் அரசாங்கம், தனது இயலாமையை மூடி மறைப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியை துண்டாடமுனைந்து இன்று மூக்குடைபட்டுப்போயுள்ளது எனத் தெரிவித்திருக்கும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ண, ராஜபக்ஷ குடும்பமல்ல, எந்தச் சக்தியாலும் ஐக்கிய தேசியக்கட்சியை அழிக்கமுடியாதென வலியுறுத்திக்கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை விரட்டும் நோக்கம் கட்சியில் எவருக்குமே கிடையாதெனவும் ஜனநாயக ரீதியில் செயற்பட்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத்தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன மேற்கண்டவாறு தெவித்தார்.
அவர் செய்தியாளர்கள் மத்தியில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
கட்சிக்குள் உள்வீட்டுப்பிரச்சினை பூதாகரமாகியுள்ளதாக அரசாங்கம் சில ஊடகங்களைப் பயன்படுத்தி பிரசாரங்களை செய்து வருகின்றது. இந்த ஊடகங்கள் அரசிடம் இலாபம் பெற்றுக்கொள்வதற்காக அரசுக்கு வக்காளத்துவாங்கும் விதத்தில் செயற்படுகின்றன. நாம் யாருக்கும் வக்காளத்து வாங்கமாட்டோம்.
எமது உடலில் ஓடுவது கூட பச்சை இரத்தம்தான். ஐக்கிய தேசியக்கட்சியை பிளவுபடுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டது இது முதற்தடவையல்ல. சுதந்திரக்கட்சி ஆட்சிகள் நடந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆட்சிஆட்டம் காணும் போது அதனை மூடி மறைப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக பிரசாரங்களை முன்னெடுத்து வந்துள்ளது.
அதேவழியில்தான் இன்று மகிந்த ராஜபக்ஷவும் சென்று கொண்டிருக்கின்றார். கட்சி பிளவுபடக்கூடியதான எந்த விடயமும் தலைதூக்கவில்லை. கட்சியை பலப்படுத்தி மக்கள் சக்தியை திரட்டியெடுப்பதற்கான அணுகுமுறைகளையும் வியூகங்களையும் கையாள்வதற்கான நடைமுறைகளையே நாம் மேற்கொண்டோம். அதன்போது வாதப்பிரதிவாதம் ஏற்பட்டால் அதனை பிளவு ஏற்பட்டதாக கூறமுடியுமா?
அப்படிப் பார்த்தால் சுதந்திரக் கட்சிக்குள் இன்று மகிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்துக்கு எதிராக உயர்மட்டத்தைச் சேர்ந்தவர்களே குமுறிக்கொண்டிருக்கின்றனர். நாளை பொதுத் தேர்தலொன்று நடக்குமானால் அதிலிருந்து வெளியேறுவதற்கு பெரும் எண்ணிக்கையினர் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கட்சியில் முக்கிய பதவிகளை வகிப்போர் கூட அதிருப்தி கொண்ட நிலையில் காணப்படுகின்றனர் எனவும் லக்ஷ்மன் செனவிரட்ண தெரிவித்தார்.