வடக்கில் பெய்யும் மழை காரணமாக காயமடைந்து புதுமாத்தளன் வைத்தியசாலைக்குச் செல்கின்ற காயமடைந்தவர்களையும், ஏனைய நோயாளர்களையும் பொறுப்பேற்று சிகிச்சையளிப்பதில் வைத்தியர்களும், ஊழியர்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.நேற்றிரவு காற்றுடன் தொடங்கிய மழை சிறிது நேர இடைவெளியின் பின்னர் தொடர்ச்சியாகப் பெய்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அருட்சல்வன் வி
அருட்சல்வன் வி
இலங்கை நிலைவரம் தொடர்பாக இந்திய வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு அடுத்த வாரம் புதுடில்லிக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் தற்போதைய சூழ்நிலையில் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இந்த அழைப்புத் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி ஆராய்ந்தது. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ்நாடு சென்றிருப்பதால் பாராளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியாவின் அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
இந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி உட்பட்ட இந்திய தலைவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாக உள்ளதாக வெளியான செய்தியை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா நடேசன் மறுத்துள்ளார். இந்திய உளவுத் துறை விடுத்துள்ள அந்த எச்சரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து சி.என்.என்-ஐ.பி.என் எனும் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன் மின்னஞ்சல் விடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், தமிழர்களின் அவலத்தையும், அவர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும் மறைக்கவும், திசை திருப்பவும் இப்படிப்பட்ட விஷமத்தனமாக பிரச்சாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது விடுதலைப் புலிகள் தாக்கலாம் என்று இந்தியாவின் உளவுத் துறை வெளியிட்ட எச்சரிக்கை, இந்திய மக்களை திசைதிருப்பும் நடவடிக்கை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது. சோனியா காந்திக்கோ அல்லது அவருடைய பிள்ளைகளுக்கோ எங்களிடமிருந்து எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று நடேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தம் காரணமாக நிலவும் மனிதாபிமான சூழ்நிலை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும் இடையில் விசேட தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
யுத்த வலயத்தில் சிக்கியுள்ள சிவிலியன்கள் பாதுகாப்பாக இடம்நகர்த்தப்பட வேண்டுமென பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். மோதல்கள் உக்கிரமடைந்து செல்லும் இந்தத் தருவாயில் அப்பாவிச் சிவிலியன்களது நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
லண்டனிலுள்ள இந்திய தூதரகம் முன்னுள்ள ஜவஹர் லால் நேருவினுடைய உருவச்சிலை சேதமாக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
“உருவச்சிலை சேதமாக்கப்பட்டுள்ளது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .சம்பவம் நடைபெற்ற அன்று இரவு பொலிஸார் கடமையில் இருந்துள்ளனர்” என பிரித்தானியாவிற்கான இந்தியத் தூதுவர் சிவ்சங்கர் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
அதேவேளை இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்கொட்லண்ட் யாட் பேச்சாளர்” இக்குற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
தாயகத்தில் உடனடியாகப் போரை நிறுத்தச்சொல்லி நேற்றும் நெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்களால் தொடர் போராட்டம் நடாத்தப்பட்டது.
இதுவரை போர் நிறுத்தப்படாமல் சிறீலங்கா அரசானது தொடர்ந்து வன்னியில் தமிழ்மக்கள்மீது தாக்குதல்களை நடாத்தியதை அறிந்து நேற்று மாலையிலிருந்து மூன்று தாய்மார், இரண்டு ஆண்கள் என ஐந்து பொதுமக்கள் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர். ஆனால், இதற்கு காவற்துறை அனுமதி மறுத்திருந்தது. உண்ணாவிரதம் இருந்தவர்களையும் அவர்களிற்கு ஆதரவாக போராட்டத்தினை நடாத்தியவர்களையும் கலைந்து போகுமாறும் இல்லையேல் கைது செய்வோம் எனவும் காவற்துறை எச்சரித்திருந்தது.
இருந்தும் எமது உறவுகள் படுகொலை செய்யப்படுகின்றபொழுது இதனை உடன் தடுத்து நிறுத்தும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என காவற்துறைக்கு அறிவித்து போராட்டத்தில் உறுதியாக இருந்தனர்.
இதன்பின் அனைவரையும் சுற்றிவளைத்து காவற்துறையினர் கைது செய்தபொழுது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் இக் கைதை எதிர்த்து கோசங்களை எழுப்பியபொழுது அம்மாணவர்களை காவற்துறையினர் தாக்கி கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். முப்பது பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
பிரித்தானியாவில் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் மாணவர்கள் ஐ.நா சபைக்கு அனுப்பிவைக்கப்படுவர்
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரியும் அங்கு போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்தக்கோரியும் லண்டனில் வெஸ்ற் மினிஸ்ரர் பாராளுமன்றம் முன்னாக நடைபெற்று வரும் போராட்டம் 5வது நாளாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப் போராட்டத்துடன் இணைந்த வகையில் இலண்டனில் ஈழத்தமிழர்கள் இருவர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து இன்று 4ஆவது நாளாகும்
பிரித்தானியாவில் தமிழர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்திவரும், இலண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இன்று 4ஆவது நாளாகவும் தொடர்ந்து நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்கும் பரமேஸ்வரன், சிவதர்சன் ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக போவதை அறிந்து காவற்துறை மருத்துவர்கள் அடிக்கடி இவர்களின் உடல்நிலையை பரிசோதித்துக் கொண்டிருந்தனர்.
இறுதியாக, நீர் அருந்தாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என தெரிவித்திருந்தனர். இதனை அறிந்த மிட்சம் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மைக் டொனால்ட் நேரடியாக உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு வந்து நீரை அருந்துமாறு வேண்டிக்கொண்டார்.
ஆனால், தமிழினப் படுகொலைகளை தடுத்து நிறுத்த உடனடிப் போர் நிறுத்தத்தை இம்மாணவர்கள் வலியுறுத்தினர். இறுதியாக, அடுத்த வாரம் அமெரிக்கா, நியூயோர்க்கில் அமைந்திருக்கும் ஐ. நா சபைக்கு இம்மாணவர்களை அனுப்புவதாக திரு.மைக் டொனால்ட் உறுதியளித்தார். இதன்பின்னர், இம்மாணவர்கள் நீர் அருந்தி உண்ணாவிரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனர்.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடத்திற்கு வருகை சிவதர்ஷன் உண்ணாவிரதம் இடைநிறுத்தம்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடத்திற்கு வருகை தந்து சந்திப்பை நடத்தியிருக்கின்றார். இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பிற்கு செல்ல வேண்டிய காரணத்தால் சிவதர்சன் சிவகுமாரின் உண்ணாநிலைப் போராட்டத்தை இடைநிறுத்துமாறு பிரித்தானிய அரசின் சார்பில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார். உறுதிமொழியை அடுத்தே சிவதர்சன் சிவகுமாரின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்வார் என்று பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் ஏற்றப்பட்டிருந்த தமிழீழ தேசியக் கொடியான புலிக்கொடியையும் இறக்குமாறு பிரித்தானிய அரசு கேட்டுக்கொண்டதையடுத்து அங்கு ஏற்றப்பட்டிருந்த புலிக்கொடியும் இறக்கப்பட்டுள்ளதுடன் ஒலிபெருக்கிகளில் முழக்கமிடுவதையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் நிறுத்தியுள்ளனர்.
நியுசிலாந்தில் மூவர் உண்ணாநிலைப் போராட்டம்
நியுசிலாந்தில் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக நியுசிலாந்தில் வசிக்கும் புலம்பெயர் தமிழர் மூவர் உண்ணாநிலை போராட்டத்தை நேற்றிலிருந்து ஆரம்பித்திருந்தனர்.
பிரான்சில் புதிய இடத்தில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வில் உண்ணாவிரதம்.
கடந்த திங்கட்கிழமையில் இருந்து, இன்வலிட் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சியான கவனயீர்ப்பு நிகழ்வானது, நேற்றுப் புதன்கிழமையில் இருந்து ஈவிள் கோபுரம் அமைந்துள்ள வளாகத்தில் உள்ள மனித உரிமைகள் சதுக்கத்தில் தொடரப்பட்டது. பேரெழுச்சியுடன் நடைபெற்றிருந்த கவனயீர்ப்பு நிகழ்வில் பல ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கை நிலவரம் தொடர்பில் கடந்த புதன்கிழமை இரவு முதல் பிரான்ஸில் தமிழர்கள் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். ரவிராஜ் ஆனந்தகுமாரசாமி, வர்ணன் விக்கினேஸ்வரன் ஆகிய இருவரும் இணைந்தே இவ் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இதே வேளை வியாழக்கிழமை (09.04.2009) பாரீஸ் நகரத்தில் உள்ள அமைதிச்சுவர் அமைந்துள்ள பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டமும், உண்ணாநிலைப் போராட்டமும் தொடரப்பட்டு வருவதுடன், மேலும் நவநீதம் சண்முகராஜா, செல்வகுமார் அல்பேட் ஆகியோரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
இலங் கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்தக் கோரி சென்னையில் திமுக சார்பில் தமிழர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி, மன்றோ சிலையில் தொடங்கி, சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே முடிவடைந்தது. பேரணி முடிந்தவுடன் பேசிய கலைஞர்,
இந்த போரில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் ஒரு வேளை ஏற்படாவிட்டால் ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் என்ன முடிவாக இருக்கும்? அது இங்கே சட்டமன்றத்திலே சில ஆண்டுகளுக்கு முன்பு அம்மையார் ஜெயலலிதா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாரே, அந்தத் தீர்மானத்தை போல பிரபாகரனை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிப்பதாக இருக்கும்.
இதைத்தான் ஜெயலலிதா, முதல் அமைச்சராக இருந்தபோது தீர்மானமாக முன் மொழிந்து அதை நிறைவேற்றினார்கள். இந்த போரின் முடிவு நமக்கு தோல்வியாக இருந்தால் தமிழர்களுக்கு தோல்வியாக இருந்தால் பிரபாகரன் தலைமையிலே உள்ள அந்த புலிகளுக்கு தோல்வியாக இருந்தால் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானப்படி இங்கே பிரபாகரனை அழைத்து வந்து தண்டனை கொடுக்க வேண்டும். நான் இப்போதும் கேட்கின்றேன். ராஜபக்சேவுக்கு சொல்கிறேன். சரித்திரத்தை புரட்டிப் பாருங்கள்.
இந்திய சரித்திரத்தில் அலெக்சாண்டர் படையெடுத்து வந்தபோது, அக்ரோணி கணக்கிலே சைனியங்களையெல்லாம் அழித்து பல நாடுகளை கவர்ந்து பல பூமிகளை தன்னுடைய காலடியிலே போட்டு மிதித்து வந்தபோது போரஸ் மன்னன் எதிர்ப்பை துச்சமாக கருதி போரஸ்’ என்று அழைக்கப்பட்ட புருஷோத்தமனை வென்றபோது பெருந்தன்மையோடு கேட்டான் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று அந்த நிலையிலும் போரஸ் மன்னன், என்னை ஒரு மன்னனைப் போல் நடத்த வேண்டும்” என்று சொன்னான். அவனுடைய பெருந்தன்மைக்கு அலெக்சாண்டரின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக அலெக்சாண்டர், போரஸ் மன்னனின் வீரத்தை பாராட்டி, தனக்கு நிகராக தனக்கு சமமாக ஒரு மன்னனாக உட்கார வைத்தான்.
போரின் முடிவு எப்படியிருந்தாலும் ராஜபக்சே எண்ணுவதைப்போல இருந்தாலும் நான் தமிழ் மக்கள் சார்பாக சொல்லுகிறேன் போரின் முடிவில் பிரபாகரனின் படைக்கு அழிவு ஏற்பட்டாலும் பிரபாகரன் தோல்வியுறுத்தாலும் போரஸ் மன்னனை அலெக்சாண்டர் நடத்தியதைப்போல் நடத்த முன்வருக என்று ராஜபக்சேவுக்கு நான் எங்கள் தமிழர்களின் நலன் கருதி சொல்லி கொள்கிறேன்.
இது தனிப்பட்ட ஒரு பிரபாகரனுக்காக சொல்லப்படுவதல்ல கடந்த காலத்திலே ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் மத்திய அரசு அண்மையிலே வெளியிட்ட கருத்துக்கள் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட கருத்தானாலும், குடியரசு தலைவர் வெளியிட்ட கருத்தானாலும், அதைத் தொடர்ந்து சோனியா காந்தி வெளியிட்ட கருத்தானாலும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட கருத்தானாலும் இந்த கருத்துக்கள் எல்லாம் தமிழர்களை தமிழ் மக்களை சம அதிகாரம் கொடுத்து அவர்களுக்கு ஆட்சியிலே சம சுதந்திரம் கொடுத்து அவர்களை நடத்த வேண்டும் என்ற கருத்துத்தான் அந்த கருத்தின் அடிப்படையில் என்ன முடிவானாலும் அந்த முடிவை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு ராஜபக்சே நடந்து கொள்வாரேயானால், சரித்திரம் அவரை மன்னிக்காது.
சரித்திர பள்ளத்தாக்கிலே எங்கோ ஒரு மூலையில்தான் அவர் தள்ளப்படுவார். அதை ஞாபகத்திலே வைத்துக் கொண்டு தமிழன், தன்மானம் உள்ள தமிழனாக தமிழன் தரணி போற்றும் தமிழனாக வாழ தமிழன் சுயமரியாதை உள்ள தமிழனாக வாழ எங்களை அனுமதியுங்கள் என்று வீரசபத முழக்கமிட்டு பேரணியில் கலந்து கொண்ட லட்சோப லட்சம் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
![]()
முல்லைத்தீவு, விசுவமடு பிரதேசத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டிருந்த இரண்டு பவுசர்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் இந்தப் பிரதேசத்தில் மேற்கொண்ட பாரிய தேடுதலின் போதே இந்த மண்ணெண்ணெய் பவுசர்களை படையினர் கண்டு பிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வன்னி பிரதேசத்தில் உள்ள பொது மக்களுக்காக அரசாங்கம் அனுப்பி வைத்த மண்ணெண்ணெய்களை புலிகள் பலாத்காரமாக எடுத்துச் சென்று மறைத்து வைத்திருந்தமை இதன் மூலம் உறுதிசெய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். குண்டுத் தாக்குதல்களில் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே புலிகள் இந்த பவுசர்களை மிகவும் பாதுகாப்பான முறையில் மறைத்து வைத்திருந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சில் உடன்பாடு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஏதேனும் நேர்ந்தால், தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்று சென்னையில் நடந்த கூட்டத்தில் வைகோ பேசியிருக்கிறாரே என்று நெய்வேலி வந்த தா.பாண்டியனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அவர், நானும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். வைகோ அப்படி பேசியிருக்கக் கூடாது. அவரது பேச்சில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தமிழகத்தில் எப்போதும் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். 50 ஆண்டுகளாக இலங்கையில் நடந்து வரும் இனச்சிங்கலைத் தீர்க்கத்ததன் விளைவாக, அது இனப் படுகொலையாக அரசு பயங்கரவாதமாக மாறி இருக்கிறது. இனப் படுகொலைக்கு தீர்வு காணாமல் இந்திய அரசு ராணுவ ஆலோசனை மற்றும் போர் தளவாடங்களைக் கொடுத்து உதவுகிறது. இதனல் இந்தியாவின் பெருமையை பாழடித்து விட்டது மத்திய அரசு என்றார்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தப்பிவரும் சிவிலியன்கள் மீது புலிகள் தொடர்ந்தும் துப்பாக்கி சூடுகளை நடத்தி வருவதாக எமக்கு தொடர்ச்சியாக அறிக்கைகள் கிடைத்து வருகின்றன. இவ்வாறு ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் கூறியுள்ளார்.
லண்டனில் வெளியாகும் கார்டியன் எனும் செய்திப் பத்திரிகைக்கு நேற்று முன்தினம் (08) வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
புலிகள் தப்பிவரும் சிவிலியன்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதுடன் அவர்கள் பயணிக்கும் படகுகளையும் தாக்கியழித்து வருகின்றனர். அங்கிருந்து தப்பிச் செல்ல நினைப்பவர்களை தம்முடன் இணைந்து போர் புரியுமாறு புலிகள் வற்புறுத்துகின்றனர். சிவிலியன்கள் தப்பி வருவதனை புலிகள் விரும்பவில்லையென்பது மாத்திரம் நிச்சயம். அப்படியிருந்தபோதும் பல சிவிலியன்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் அங்கிருந்து தப்பி வருகிறார்கள். இது மிகவும் சிக்கலான சூழ்நிலையெனவும் ஹோம்ஸ் கூறியுள்ளார்.