அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

க.பொ.த உயர் தர பரீட்சை 9ம் திகதி ஆரம்பம், சகல ஏற்பாடுகளும் பூர்த்தி; புலமைப் பரிசில் 22 இல்

commissoner.jpgக. பொ. த. உயர்தர பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை என்பன முறையே எதிர்வரும் 9ம் திகதி மற்றும் 22ம் திகதி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் செப்டம்பர் 3ம் திகதி வரை நடைபெறவுள்ள க. பொ. த. உயர்தர பரீட்சைக்கு இம்முறை 55,000 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உட்பட 2 இலட்சத்து 68,000 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

1,940 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைகள் நடைபெறுவதுடன் தேசிய அடையாள அட்டையை பரீட்சார்த்திகள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்றும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார். புனர்வாழ்வு முகாமிலுள்ள 400 முன்னாள் போராளிகளும் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். புனர்வாழ்வு முகாமிலேயே பரீட்சை நிலையங்கள் அமைக்கப் படவுள்ளன.

எதிர்வரும் 22 ஆம் திகதி 3500 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் இம்முறை 3,14,000 மாணவர்கள் தோற்றவுள்ளனர். கடந்த காலங்களில் நடைபெற்றதைப் போன்றே இம்முறையும் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

இடம்பெயர்ந்துள்ளவர்களுள் சுமார் 500 மாணவர்கள் இம்முறை இப்பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். க. பொ. த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றுபவர்களுக்குரிய அனுமதி அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்

அசினின் படங்களை பகிஷ்கரிக்கப்போவதாக வட அமெரிக்க தமிழ் அமைப்புகள் அறிவிப்பு

Asin_Actressநடிகை அசினின் அண்மைய இலங்கை விஜயம் தொடர்பான சர்ச்சைக்கு முடிவு காணப்பட்டிருக்கின்ற போதிலும் அவரின் திரைப்படங்களைத் தமது உறுப்பினர்கள் பகிஷ்கரிக்கவுள்ளதாக வட அமெரிக்காவிலுள்ள தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

வட அமெரிக்காவிலுள்ள தமிழ்ச்சங்க சம்மேளனம் அசினின் சகல படங்களையும் பகிஷ்கரிக்கவுள்ளதாகவும் ஏனெனில் அவர் இலங்கைக்குச் சென்றதால் அவரின் படங்களை பகிஷ்கரிக்கப்போவதாக வட அமெரிக்க தமிழ் அமைப்புகள் கூறியுள்ளன. வட அமெரிக்காவிலுள்ள தமிழ்ச்சங்க சம்மேளனத்தின் தலைவர் பழனி சுந்தரத்தின் அறிக்கையானது தென்னிந்திய திரைப்பட சங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. வட அமெரிக்காவிலுள்ள தமிழ்ச்சங்க சம்மேளனமானது அமெரிக்காவிலுள்ள சுமார் 30 தமிழ்ச்சங்கங்களை ஒன்றாக இணைத்த கூட்டமைப்பாகும்.

கொழும்பில் இடம்பெற்ற தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு முன்னர் தென்னிந்திய திரைப்பட சங்கம் அறிக்கையொன்றை விடுத்திருந்தது. தமது தொழிற்துறையைச் சேர்ந்த சகல உறுப்பினர்களும் இலங்கைக்குச் செல்லக்கூடாதென அந்த அமைப்புக் கூறியிருந்தது. பலர் இலங்கைக்குச் செல்லவில்லை. ஆனால், அசின் இலங்கைக்குச் சென்று கண்சிகிச்சை முகாமை நடத்தியிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கமானது இந்த சர்ச்சைக்குரிய விடயத்திற்கு தீர்வுகாணும் பொறுப்பை கூட்டு கலந்தாலோசனைக் குழுவிடம் ஒப்படைத்திருந்தது.

நல்லெண்ண நோக்கத்துடனேயே தான் யாழ்ப்பாணத்திற்குச் சென்றதாக அசின் கூறியிருந்தார். நான் தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தலைவர் சரத்குமாரிடம் பேசியிருந்தேன். கூட்டு கலந்தாலோசனைக் குழுவின் அறிவித்தல்களுக்கமைய செயற்படுவதை நான் விரும்பியிருந்தேன் என்று அசின் கூறியுள்ளார்

பிரிட்டனில் குடியேற விரும்புபவருக்கு ஆங்கிலமொழிப் பரீட்சை கட்டாயம்

ஐரோப்பாவைச் சாராத குடியேற்றவாசிகள் பிரிட்டனுக்குச் செல்வதற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது தமது கணவன் அல்லது மனைவியுடன் இணைந்துகொள்ள விண்ணப்பிக்க விரும்பினால் எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி முதல் ஆங்கில மொழிப் பரீட்சைக்குத் தோற்றுவது அவசியமாகுமென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் எல்லை முகவரமைப்பு கடந்த திங்கட்கிழமை இந்தத் திகதியை அறிவித்திருக்கிறது. எந்தவொரு குடியேற்றவாசியும் பிரிட்டனுக்குள் பிரவேசிக்க அல்லது தொடர்ந்து தங்கியிருக்க விரும்பினால் அதாவது பிரிட்டிஷ் பிரஜையாக அங்கிருக்க விரும்பினால் அவர் தன்னால் ஆங்கிலத்தை பேசவும் விளங்கிக்கொள்ளவும் முடியும் என்பதை நிரூபிக்க வேண்டிய தேவையுள்ளது. ஆங்கில மொழிப் பரீட்சைக்குத் தோற்றுவதன் மூலம் இதனை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. இந்த எல்லை முகவரமைப்பால் அங்கீகாரம் வழங்கப்பட்ட பரீட்சை நடத்துபவர்களினால் நடத்தப்படும் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும்.

அடிப்படை ஆங்கில அறிவை விண்ணப்பதாரிகள் வெளிப்படுத்த வேண்டும். இதே அடைவுமட்டமானது புள்ளியடிப்படை முறைமையின் கீழ் வகை 2 இன் கீழ் அனுமதிக்கப்படும் தொழிற்தேர்ச்சி பெற்ற பணியாளர்களுக்கும் தேவைப்படுகிறது. பிரிட்டனுக்குள் இருப்பதற்கு விண்ணப்பிப்போருக்கு இந்தப் பரீட்சையானது கட்டாயமானதாகும் என்று ஐக்கிய இராச்சியத்தின் எல்லை முகவரமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.இந்த அறிவிப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் கடந்த மாதம் விடுத்திருந்தது.

தற்காலிக வதிவிட காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு பூர்த்தி செய்த ஜோடிகள் நிரந்தரமாக தங்கியிருப்பதற்கும் ஆங்கில மொழி அறிவு மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் வாழ்க்கை முறை தொடர்பான பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டிய தேவையுள்ளது. இது புதிய அடிப்படை ஆங்கிலமொழி அறிவுக்கு மேலதிகமாக தேவைப்படும் விடயமாகும். ஆரம்ப விண்ணப்பப்பத்திரத்தில் இதற்கான படிவமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்தோரை சந்திப்பதில் எம்.பிக்களுக்கு தடை இல்லை – அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

min-meedia.jpgஇடம் பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கும் மீளக்குடிய மர்ந்துள்ள பிரதேசங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகள் செல்வதற்கு விதிக் கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் தற்போது எந்தத் தடையும் இன்றி சுதந்திரமாக சென்று வர முடியுமென்று பாது காப்பு விவகாரங்கள் மற்றும் அமை ச்சரவை பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (27! நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தகவல் தருகையில், நலன்புரி முகாம்களுக்குச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களின் மனங் களைக் குழப்பி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அத னால், கட்டுப்பாடு விதிக்க வேண் டிய நிலை ஏற்பட்டது.

இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. தற்போது அந்தக் கட்டுப்பாடு முற்றாகத் தளர்த்தப்பட்டுள்ளது.  எவரும் சென்று வரலாம்’, என்று அறிவித்தார். ஆனால், அரச சார்பற்ற நிறுவனங்கள் அங்கு செல்வது மட்டுப்படுத்தப் பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். முன்பு அந்தப் பகுதிகளுக்குச் சொன்றவர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் சிக்கலை உருவாக்கினார்கள்.

அதனால், சில வரையறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளதாக கூறிய அவர், தற்போது அவர்கள் வெறும் அவதானிப்பாளர்களாகச் சென்று வந்து அறிக்கைகளை வெளியிட மாத்திரம் முடியாது. மீள் குடியேற்றத்திற்கான திட்டங்களுக்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும். மீள் குடியேற்ற அமைச்சில் இதற்கென பல்வேறு திட்டங்களும், பிரேரணைகளும் உண்டு.

எனவே அங்கு சென்று விரும்பியவாறு உதவியைப் பெற்றுக் கொடுக்க முடியும்.  அதனடிப்படையிலேயே அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான அனுமதி வழங்கப்படும் “அவர்களின் கோணத்தில் அறிக்கை வெளியிட முடியாது” என்றார்.

சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டம் வீடுகளுக்கு – மேலதிக மின்சாரத்தை சபைக்கு விற்கவும் வசதி

வீடுகளில் சூரிய சக்தியின் மூலம் மின் உற்பத்தி செய்யும் ‘நெட் மீட்டர்’ மின்சாரத் திட்டத்தை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க நேற்று பத்தரமுல்ல பகுதியில் ஆரம்பித்து வைத்தார்.  தமது வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை இதனூடாக உற்பத்தி செய்ய முடிவதோடு மேலதிக மனிசாரத்தை மின்சார சபைக்கு விற்கவும் முடியும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது.

தமது வீட்டுத் தேவைக்கு போதுமான அளவு மின்சாரம் உற்பத்தியாகாத போது அதனை மின்சார சபையினூடாக பெறவும் ‘நெட் மீட்டர்’ பாவனையாளர்களுக்கு வசதி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 4.5 கிலோ வோர்ட் நெட் மீட்டரினூடாக தினமும் 12 முதல் 23 அலகுகள் மின் உற்பத்தி செய்ய முடியும்.

வியாபாரிகள், கைத்தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் மின் பாவனையாளர்களுக்கு இந்தத் திட்டத்தில் இணைய முடியும் என அமைச்சு கூறியது. முதலாவது ‘நெட் மீட்டர்’ பத்தரமுல்லை ஜயந்திரபுரவில் உள்ள புரூம் கூட்டு வியாபார உரிமையாளர் மஹிபாலவின் வீட்டில் பொருத்தப்பட்டது.

ஐ.தே.க. தலைமையகம் முன்பாக தீ மூட்டிக்கொண்டவர் மரணம்

fire.jpgஐ.தே.க. தலைமையகத்தின் முன்பாக தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்ட ஐ.தே.க. ஆதரவாளர் நேற்றுக் காலை உயிரிழந்தார். இவர் வெலிகமயைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான ரியன்ஸி அல்கம (60) என பொலிஸார் தெரிவித்தனர்.

இறப்பதற்கு முன் இவர் மிரிஹானை பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியது.

கொழும்பு செல்வதாக வீட்டில் கூறிவிட்டே இவர் நேற்று முன்தினம் கொழும்புக்கு வந்துள்ளார். பிட்டகோட்டை பகுதிக்கு வந்துள்ள இவர் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பெற்றோல் வாங்கிக்கொண்டு கட்சித் தலைமையகத்திற்கு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. களுபோவில ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

இவரின் பிரேத பரிசோதனை நேற்று கொழும்பு பெரியாஸ்பத்திரியில் நடைபெற்றது. அவரின் மனைவியும் இரு பிள்ளைகளும் சாட்சியமளித்துள்ளனர். இறந்தவரின் சடலம் நேற்று மாலை வெலிகமவில் உள்ள அவரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட ஏற்பாடாகியிருந்தது.

இந்திய பிரதிநிதிகளின் வருகைக்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பு

வடக்கில் மக்களின் மீள் குடியேற்ற நிலவரங்களைக் கண்டறிந்துகொள்வதற்காக இந்தியப் பிரதிநிதிகள் இலங்கை வருவதை அரசாங்கம் வரவேற்றுள்ளது.

இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் பிரதிநிதியொருவரை அனுப்பி வைத்தால், அது நல்லதொரு விடயமாகுமென்று பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் அமைச்சரவை பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

‘‘இலங்கை விடயத்தில் இந்தியா நிதானமாகவே செயற்படும். பருப்பை போடுவதைப்போல் பலவந்தமாக செயற்படாது. இரு நாடுகளுக்குமான உறவு அந்தளவுக்குச் சிறப்பாக உள்ளது” என்றும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (27) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கூறினார்.

இந்திய மத்திய அமைச்சின் அதிகாரி யொருவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாகத் தமிழக முதல்வருக்குப் பிரதமர் மன்மோகன் அறிவித்திருக் கிறாரென்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியைச் சந்தித்துள்ளமை பற்றியும் அரசின் கருத்து யாதென செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது அந்தக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்களையும் சந்தித்தோம். அப்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரையும் சந்தித்தோம். அவர்களை, இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் கண்டறியுமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்தார். அதில் அரசியல் நோக்கம் கிடையாது. ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விடுத்த அழைப்பு அரசியல் நோக்கம் கொண்டது” என்றார்.

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியுடன் ஆலோசிப்பது மட்டும் போதாது – ஐ.தே.க

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் அரசும் பிரதான எதிர்க்கட்சியும் மாத்திரம் இறுதிமுடிவை எட்ட முடியாதெனத் தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சி, அரசியலமைப்புத் திருத்தம் குறித்த யோசனைகளை அரசு முன்வைத்து சகல அரசியல் கட்சிகள், மகாசங்கம் உட்பட அனைத்து சமயத் தலைவர்கள், சிவில் அமைப்புகளுடனும் பேசவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஒழிக்கப்பட்டு அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படவேண்டுமென்பதே ஐ.தே.க.வின் நிலைப்பாடெனவும் நிறைவேற்று அதிகாரம் பிரதமருக்கு வழங்க வேண்டுமென்ற எந்த உடன்பாட்டுக்கும் கட்சி முன்வரவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு விளக்கமளித்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த கயந்த கருணாதிலக்க மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

அரசியலமைப்புத்திருத்தம், தேர்தல் முறை மாற்றங்கள் தொடர்பில் ஆராயும் பொருட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தினார். இன்றைய காலகட்டத்தின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிரலைத்தயாரிப்பதற்காக குழு அமைக்கப்பட்டது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஒழிப்பது, நிறைவேற்றதிகாரம் பாராளுமன்றத்துக்கே வழங்கப்படுவது போன்றவற்றுடன் இணைந்ததாக அரசியலமைப்பு முழுமையாக திருத்தப்பட வேண்டுமென்ற ஆரம்ப நிலைப்பாட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இருக்கின்றது. இதில் எந்த விதமான மாற்றமும் கிடையாது.

அதேசமயம் அரச தரப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் மாத்திரம் பேசி இதில் தீர்வை எட்ட முடியாது. அரசிலுள்ள பல கட்சிகள் கூட இது விடயத்தில் முரண்பாடான நிலைப்பாட்டிலேயே காணப்படுகின்றன. ஜே.வி.பி.தரப்பு தெரிவித்திருக்கும் கருத்து மறுக்கப்பட முடியாது. அதனுடன் நாமும் உடன்படவே செய்கின்றோம். அரசுடன் கூடி தனித்துத்தீர்மானமெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி முற்படவில்லை. பேச்சுக்கான அடித்தளத்தை இடுவதற்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கவே நாம் முன் வந்துள்ளோம். எனவும் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

பீனிக்ஸ் நிறுவனத்திற்கு தங்க விருது

adfest.jpgஇலங்கை விளம்பர நிறுவனங்களில் ஒன்றான பீனிக்ஸ் ஒகில்வி நிறுவனம் Adfest 2010 விருதுகளில் தங்க விருது ஒன்றை பெற்றுள்ளது. விளம்பரத்துறைக்காக சர்வதேச அளவில் விருதுகள் பல வழங்கப்பட்டாலும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனமொன்று முதற்தடவையாக இவ்வாறானதொரு விருதை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

மீள்குடியேறியோருக்கு 81 ஆயிரம் தென்னங் கன்றுகள்

வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத் தோட்ட திடடத்தின்கீழ் இந்த வருடத்தில் 81 ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி சபை கூறியது. 5 வருட காலத்தினுள் ஒரு வீட்டுக்கு 3 தென்னங்கன்று வீதம் வட பகுதிக்கு ஒரு இலட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

யுத்தத்திற்கு முன்னர் வடக்கில் 50 ஆயிரம் ஏக்கரில் தெங்கு பயிறிடப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது 37 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே தென்னை மரங்கள் எஞ்சியுள்ளன. எனவே வடக்கில் துரிதமாக தெங்குச் செய்கையை மேம்படுத்துவதற்காக 9 ஆயிரம் தென்னங்கன்றுகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.